Share on Social Media

மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்ததால், நம்பிக்கையுடனே தொடங்கியது இந்தியா. கோலி – ரஹானேவுக்கு இடையேயான அந்த பார்ட்னர்ஷிப்தான், 146-ல் இருந்து எவ்வளவு தூரம் இந்தியா செல்ல இருக்கிறதென்பதை முடிவு செய்வதாகப் பார்க்கப்பட்டது. எதிர்புறம், இரண்டாவது நாளில் செட்டாக நேரம் எடுத்துக் கொண்ட பௌலர்கள் மூன்றாவது நாளில் முதல் பந்திலிருந்தே கனக்கச்சிதமாக செட் ஆயினர்.

குறிப்பாக, ஜேமிசன் உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பௌலிங்கிற்கான இலக்கணங்களை எழுதிக் கொண்டிருந்தார். தொடக்கம் முதலே, அவரது பந்துகளை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியது கண்கூடாய்த் தெரிந்தது‌. முன்னதாக வீசிய 14 ஓவர்களில், 9 மெய்டன்களை அவர் கொடுத்திருந்ததே அதற்கு சாட்சி. அதுவே தொடர்ந்தது, மூன்றாவது நாளும்.

கோலியின் நிலைமையும் மற்ற பேட்ஸ்மேன்களைப் போன்றே இருந்தது. முன்னதாக, ஜேமிசன் கோலிக்கு வீசிய பந்துகள் ஒன்றுகூட ஸ்டம்ப் லைனில் வராமல், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர, எல்லாப் பந்துகளையும், சாய்ஸில் விட்டுக் கொண்டிருந்தார் கோலி. அப்போது எதிர்பாராமல், ஜேமிசன், ஒரு இன் ஸ்விங்கரை, ஸ்டம்ப் லைனில் அனுப்ப, நிலைதடுமாறிய கோலி, தனது விக்கெட்டை எல்பிடபிள்யூவில் பறிகொடுத்தார். ரிவ்யூவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. முன்னதாக எடுத்த 44 ரன்களுக்குப் பிறகு, ஒரு ரன்னைக்கூட அவரால் சேர்க்க முடியாமல் போக, ஏமாற்றமளித்தார் கோலி.

WTC Final | INDvNZ

இரண்டு வருடமாக இழுத்துக் கொண்டே செல்லும், கோலியின் 71-வது சதம் இந்த முறையாவது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மற்றுமொரு முறை, ஏமாற்றமே மிஞ்சியது.

பண்ட் உள்ளே வந்தார்.

பண்ட்டுக்கு பந்துகளை ரவுண்ட் த விக்கெட்டில் வீசிக் கொண்டிருந்தார் ஜாமிசன்‌. ரன் எடுக்கத் திணறிய பண்ட், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, பேடை நோக்கி ஸ்விங்கான பந்தை மிட் விக்கெட்டில் பவுண்டரியாக்கி தன் கணக்கைத் தொடங்கினார். அதே உத்வேகத்தோடு, ஓவர் த விக்கெட்டில் ஜேமிசன் வீசிய ஆஃப் ஸ்டம்பில் இருந்து மிக வெளியே சென்ற பந்தை என் பேட்டில் பட்டுதான் போயாக வேண்டுமென்று தேவையில்லாமல் தொட்டு ஸ்லிப் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, அதிவேகமாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது நியூஸிலாந்து.

ஜடேஜா வந்து ரஹானேயுடன் இணைய, இம்முறை ரஹானேவுக்கு குறிவைத்தது நியூசிலாந்து. வாக்னரின் ஷார்ட் பாலோடு, ஷார்ட் ஸ்கொயர் லெக்கில், டாம் லாதமோடு வலை விரிக்கப்பட 49 ரன்களோடு இருந்த ரஹானே, புல் ஷாட் ஆட முயன்று, தனது விக்கெட்டை விலையாகக் கொடுத்தார். 182/6 என திணறியது இந்தியா. பின் உள்ளே வந்த அஷ்வின், ஆட்டமிழக்கும் முன் ரன்னெடுக்க வேண்டுமென்பதைப் போல, மூன்று பவுண்டரிகளோடு ஒரு மினி கேமியோ ஆடி, இந்திய ஸ்கோரை 200-ஐ தாண்ட வைத்த மகிழ்ச்சியோடு வெளியேற, இஷாந்த் உள்ளே வந்தார்.

பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்து வைத்திருந்த பொறியில் எல்லாம் வேண்டிவிரும்பி மாட்டிக் கொள்ள, அவர்களுக்குச் சாதகமாகவே எல்லாம் நகர்ந்த்து‌. உணவு இடைவேளையில், 211/7 என்றிருந்தது இந்தியா.

இரண்டாவது செஷனைத் தொடங்கிய நியூசிலாந்துக்கு, மீதமிருந்த மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தத் தேவைப்பட்டது, நான்கே ஓவர்கள்தான். ஜேமிசன் தன்னுடைய ஓவரில், அடுத்தடுத்த பந்துகளில், இஷாந்தையும், பும்ராவையும் அனுப்பிவைக்க, இறுதியாக வாக்னர், ஜடேஜாவை வெளியேற்ற, 217-க்கு ஆல்அவுட் ஆனது இந்தியா.

Neil Tamil News Spot
WTC Final | INDvNZ

ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜேமிசன், வெறும் 1.4 எக்கானமியோடு, ஓர் அற்புதமான ஸ்பெல்லை வீசி இருந்தார். ஓப்பனிங் மற்றும் கோலி – ரஹானேவுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப்பைத் தவிர, வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும், இந்தியாவுக்குச் சொல்லிக் கொள்ளும்படி அமையாததும், பெரிய பின்னடைவாக அமைந்தது. 217 என்பது குறைவான ஸ்கோராகத் தெரிந்தாலும், பௌலர்களுக்கு சாதகமான பிட்சில், தரம் வாய்ந்த நியூசிலாந்து பௌலிங்கிற்கு எதிரே, இது மோசமானதில்லை என்றே தோன்றியது.

தங்களது முதல் இன்னிங்ஸை கான்வே மற்றும் லாதமைக் கொண்டு நியூசிலாந்து தொடங்கியது. இஷாந்த் வீசிய முதல் ஓவரிலேயே கடினமான ஒரு கேட்சை பிடிக்கத் தவறினார் கில். கட்டுக்கோப்பாக இந்தியத் தரப்பு பந்து வீசினாலும், நியூசிலாந்து அளவுக்கு இந்திய பௌலர்களின் பந்துகள் ஸ்விங் ஆகவில்லை. அறுபது ஓவர்கள் வயதான பந்தை நியூசிலாந்து ஸ்விங் செய்த அளவுக்குக் கூட, இந்திய பௌலர்களால், புதுப்பந்தை ஸ்விங் செய்ய வைக்க முடியவில்லை. சீம் மூவ்மண்ட் சற்றே அதிகமாக இருந்தாலும், அதனைப் பயன்படுத்தி, தேவையான நெருக்கடியை இந்தியா ஏற்படுத்தவில்லை.

அயரச் செய்யும் பௌலிங்கையும், அட்டாக்கிங் ஃபீல்டிங்கையும் கொண்டு பிரஷரை அதிகரிக்க இந்தியா தவறவிட்டது. விக்கெட்டுகளே விழாமல் நங்கூரமிட்ட நகர்ந்தன 20 ஓவர்கள். 2013-ம் ஆண்டுக்குப் பின், இங்கிலாந்தில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில், முதல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்கள் கடந்திருப்பது, இதுவே முதல்முறை. கடைசியில், இரண்டாவது செஷனின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்திருந்தது நியூசிலாந்து. முதல் செஷனை விக்கெட்டுகளை விழச் செய்து ஆக்கிரமித்த நியூசிலாந்து, இரண்டாவது செஷனையும் மொத்தமாய்த் தனதாக்கியது.

181 ரன்கள் பின்னிலை என்னும் நிலையில் தொடங்கியது நியூசிலாந்து. விக்கெட்டுக்காக படாத பாடுபட்டது இந்தியா. லாதமும், கான்வேயும் மிக நன்றாகவே செட்டில் ஆகி, 50 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த பின்பு, ரன் எடுக்கும் வேகத்தையும் கொஞ்சம் முடுக்கிவிட்டனர்.

Conway Tamil News Spot
WTC Final | INDvNZ

இறுதியாக ஒரு வழியாக, ஸ்விங்கால் சாத்தியமாகாதது, ஸ்பின்னால் சாத்தியமானது. லாதமின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தி, இந்தியப் பக்கத்துக்கு உயிர் கொடுத்தார். கடந்த சில போட்டிகளாக நன்றாகத் தொடங்கினாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறிக் கொண்டே இருக்கிறார் லாதம். கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

இதன்பிறகு, வெயிலும் வந்து சேர்ந்து, பௌலர்களை ரொம்பவே சோதனைக்குள்ளாக்கியது. ஷமியைத் தவிர யாருடைய பந்துமே சுத்தமாக ஸ்விங் ஆகாமல் போக, வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசிக் கொண்டிருந்தனர் மற்ற பௌலர்கள். அஷ்வினின் பந்துகளில் கொஞ்சம் திணறினாலும், அதை விக்கெட் எடுக்கும் பந்தாக மாற்ற முடியவில்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும், எந்த ஒரு தவறான ஷாட்டுக்கும் போகாமல், முடிந்தளவு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து, தவறான பந்துகளில் மட்டும் ரன்கள் சேர்த்து, முன்னெடுத்துச் சென்றனர்.

Also Read: WTC Final: மழை, வெளிச்சமின்மை, ஸ்விங்க் எல்லாவற்றையும் சமாளித்த இந்தியா! இன்று நல்ல ஸ்கோரை எட்டுமா?

137 பந்துகளில், தனது அரைசதத்தை அடித்தார், கான்வே. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் அரைசதமாகவும் அது இருந்தது.

நாளின் முடிவு நெருங்குவதால், இன்னும் சில விக்கெட்டுகளை எடுக்க நினைத்த இந்தியா, தொடர்ந்து கான்வேவை டாட் பாலாக ஆட வைத்து பிரஷரை ஏற்றியது. 14 பந்துகள் டாட் பாலாக, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், இஷாந்தின் பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 100 ரன்களைக் கடந்திருந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.

IND NZ Day 32 Tamil News Spot
WTC Final | INDvNZ

நைட் வாட்ச்மேனாக வேறு யாரேனும் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஸ் டெய்லரே இறங்கினார். அடுத்த இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையிலேயே அரைமணி நேர ஆட்டம் மிச்சமிருந்த போதும், போதிய வெளிச்சமின்மையால், மூன்றாவது நாள் ஆட்டம் கை விடப்பட்டது. இந்தியாவை விட 116 ரன்கள் பின்னிலையில் இருந்தாலும் 101/2 என வலுமையான நிலையிலுள்ளது நியூசிலாந்து.

இந்திய பின்வரிசை பேட்ஸ்மென்கள் ஆடத் தவறியதாலும், நியூசிலாந்தின் மிகச் சிறந்த பௌலிங்கினாலும், மூன்றாவது நாளை கிட்டத்தட்ட மொத்தமாக இழந்திருந்தது இந்தியா. இருந்தாலும், நாளின் இறுதியில் விழுந்த இரண்டு விக்கெட்டுகள், இந்தியாவின் நம்பிக்கையை சற்றே துளிர்விடச் செய்துள்ளது. மீதமுள்ள விக்கெட்டுகளை எவ்வளவு வேகமாக இந்தியா இன்று எடுக்கிறதோ அதற்கேற்றாற் போல், தனது வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *