Share on Social Media


உ.பி-யைப் போலவே கர்நாடகாவிலும் பா.ஜ.க-வுக்கு தலைவலி ஆரம்பித்துள்ளது. முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் கலகக்குரல் ஒலிக்கிறது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியத்திலிருந்து, ‘எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து இறங்கும் நேரம் வந்துவிட்டது. புதிய தலைமைக்கு அவர் வழிவிட வேண்டும்’ என்கிற பிரசாரம் ஆரம்பித்து, அரசியல் வட்டாரத்தில் அது பெரும் விவாதப்பொருளாக மாறியது.

எடியூரப்பா

எடியூரப்பா

கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான செயல்பாடுகள் சமீபத்தில் தீவிரமடைந்த நிலையில், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகீஸ்வரா மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலர் கடந்த மே மாதம் டெல்லியில் மேலிடதுக்கு படையெடுத்தனர். பா.ஜ.க மேலிடத் தலைவர்களைச் சந்தித்த அவர்கள், ‘எடியூரப்பா ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த எடியூரப்பா தவறிவிட்டார்’ என்று புகார்களை அடுக்கினர். இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், இது குறித்து பொதுவெளியில் முதன் முறையாக எடியூரப்பா கருத்து தெரிவித்தார். ‘எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு எனக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்கிறேன். என் தரப்பில் எந்தக் குழப்பமும் கிடையாது. முதல்வர் பதவியில் நானே தொடர்வேன். எனக்கு மாற்றாக இங்கு யாரும் கிடையாது. கட்சித் தலைமை சொன்னால், பதவி விலகத் தயார்’ என்றார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலத் தேர்தல்களில் முழு கவனத்தையும் செலுத்திவிட்டு, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பா.ஜ.க கோட்டைவிட்டுவிட்டது என்றும், அதனால்தான் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்றும் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ஆகவே, மத்திய அரசு தனக்கு எதிரான களங்கத்தைப் போக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டிய நெருக்கடியில் இருக்கும் பா.ஜ.க., மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளிலும் களமிறங்கியிருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *