Share on Social Media

நடப்புச் சாம்பியன் என்பதற்குரிய லட்சணங்கள் மாறாமல் ஓர் அபார வெற்றியினால் மறுபடியும் சேப்பாக் தன்னை நிரூபிக்க, திண்டுக்கல்லோ கடந்த இரண்டு ஆண்டுகளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து வாங்கிய அடியை இம்முறை க்வாலிஃபயரிலேயே வாங்கி வெளியேறி உள்ளது.

ஆரம்பம் முதலே திண்டுக்கல் வகுத்து வைத்த திக்கில் எதுவும் நகரவில்லை. டாஸைத் தோற்று, பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்டனர். இரண்டு முறை சாம்பியன் ஆன அணி ஒருபுறம், கடந்த இரண்டு முறையும் ரன்னர் அப் ஆகி கோரக் கோப்பை பசியில் உள்ள அணி மற்றொரு புறம். இதுவே போட்டி, அங்குலம் அங்குலமாக சுவாரஸ்யமாக இருக்கப் போகிறதென்ற நினைப்பை விதைத்தது. ஆனால், போராட்டம் என்பது கொஞ்சமும் இன்றி, மொத்தமாக சேப்பாக்கிடம் சரண் அடைந்து, அந்த எண்ணத்துக்கு எண்ட் கார்டு போட்டுவிட்டது திண்டுக்கல்.

TNPL | CSG v DD

ஹரி நிஷாந்த்தும், அறிமுக வீரரான விமலும் களமிறங்கினர். முக்கியப் போட்டியில், அறிமுக வீரரோடு இறங்கியதும் அவர்களுடைய வீழ்ச்சியின் ஆரம்பப் புள்ளியானது. இவ்வளவுக்கும் சோனு யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரிகளைப் பறக்க விட்டு அதிரடியாகத்தான் ஆரம்பித்தார் விமல். ஆனால், அவரது மொத்த இன்னிங்ஸில் சொல்லிக் கொள்ளும்படியாக அமைந்தது அவை மட்டும்தான். ஐந்தாவது ஓவரில் இறக்கப்பட்ட சாய் கிஷோர்தான் போட்டியை சேப்பாக் சட்டைப் பைக்குள் சுருட்டி வைத்துக் கொள்ள காரணமாக இருந்தார்.

ஒரே ஓவரில், ஒரு பந்து இடைவெளியில், விமல் மற்றும் மணிபாரதி ஆகிய இருவரது விக்கெட்டுகளையும் சாய் கிஷோர் வீழ்த்த, ஆட்டம் ஆரம்பம் என கில்லியாக சொல்லி அடித்தது சேப்பாக் கில்லீஸ். பவர் பிளே முடிவில், பஞ்சத்தில் அடிபட்டதைப் போல் 32 ரன்களோடு பரிதாபமாக இருந்தது திண்டுக்கல்.

இதற்குப் பின்னும் கூட ஹரி நிஷாந்த், சீனிவாசன், விவேக், மோகித் என சில பெரிய கைகள் இருந்ததால், கொஞ்ச நேரம் தாக்குப் பிடித்து இறுதி ஓவர்களில் எழுச்சியுறுவார்கள் என்றே எதிர்நோக்கப்பட்டது‌. ஆனால், எந்தப் பார்ட்னர்ஷிப்புக்கும் இங்கே இடமில்லை என்பதைப் போல் உருவாகிய எந்தக் கூட்டணியையும் மூன்று ஓவர்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விடவில்லை. அவர்களது வெற்றிக்கான காரணியும் இதுதான்.

ஹரி நிஷாந்த் மட்டுமே கேப்டன் என்ற பொறுப்பிற்கு ஏற்றாற் போல், ஒருபக்கம் உயிரைக் கொடுத்து ஆடிக் கொண்டிருந்தார். மறுபக்கம் இருந்து உதவிக்கு இன்னொரு பேட் நீளவே இல்லை. இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் மூன்றாவது வீரராக உள்ளே வந்த மணி பாரதியில் இருந்து மற்ற அனைத்து வீரர்களும், 8 ரன்களுக்கும் குறைவாக ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டம் இழந்திருந்தனர். அதற்கடுத்து களமிறங்கியவர்களில், சிலம்பரசன் அடித்த 11 ரன்கள் மட்டுமே அதிகபட்ச ஸ்கோர் என சொல்லிக் கொள்ளும்படிதான் திண்டுக்கல்லின் பேட்டிங் இருந்தது.

CSG DD 4 Tamil News Spot
TNPL | CSG v DD

சேப்பாக்கின் பந்து வீச்சு பிரமிக்க வைத்தது என்றாலும் திண்டுக்கல்லும், ஏதோ அதிர்ச்சியில் இருந்து மீளாதது போல்தான் ஆடிக் கொண்டிருந்தது. சரிவிலிருந்து அணியை மீட்டெடுக்க யாருமே முனையவில்லை. 46 பந்துகளைச் சந்தித்த ஹரி நிஷாந்த்தும், 56 ரன்களோடு 14 ஓவர்களிலேயே ஹரிஷின் பந்தில் வெளியேறிவிட்டார். அந்த நிலையிலேயே அணியின் ஸ்கோர், வெறும் 83 ஆகத்தான் இருந்தது. உண்மையில் மணிபாரதி, விவேக் என பிக் ஹிட்டர்கள் பலர் அணியில் இருந்தும், அவர்கள் அந்தச் சமயத்தில் இல்லாமல் போனதுதான் திண்டுக்கல்லுக்குப் பின்னடைவாகிப் போனது.

எஞ்சியிருந்த ஆறு ஓவர்களை அடிக்க ஆள் இருந்திருந்தால், கண்டிப்பாக, 150-க்கும் அதிகமான ரன்களைத் திண்டுக்கல் சேர்த்திருக்கும். சிலம்பரசன், குர்ஜப்நீட் உள்ளிட்ட அவர்களது பௌலர்கள், மிச்ச காரியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது எதுவுமே நடந்தேறிடாமல், 20 ஓவர்களில் வெறும் 103 ரன்களுக்கு, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 120 பந்துகள் தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம் என்பதைப் போல் முடித்துக் கொண்டது திண்டுக்கல்.

இடக்கை ஆட்டக்காரர்களை சாய் கிஷோரை வைத்து இக்கட்டில் ஆழ்த்தியது, பார்ட்னர்ஷிப்களை பில்டப் ஆகவே விடாமல் வெட்டி வீழ்த்தியது, ஃபீல்டிங் வியூகங்களில் அசத்தியது என அமர்க்களமாக ஆடியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

சென்ற போட்டியில், சேப்பாக் மைதானத்தில் 50 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்திய சாய் கிஷோர் இந்தப் போட்டியிலும் சேர்த்து, இந்த சீசனில் மட்டும் 11 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்து, அவர் அணியுடன் இணைந்த பின்தான் சேப்பாக் வாகை சூட ஆரம்பித்தது. அது இந்தப் போட்டியிலும் அதுவே தொடரப் போகிறதென்பதை 104 என்ற இலக்கே சொல்லி விட, அதைச் செயலாக்க இறங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

ஓப்பனர்களாக, கௌசிக் காந்தியும் ஜெகதீசனும் களமிறங்க, ரிஸ்க் எடுத்து ஆட வேண்டிய எந்த அவசியமும் சேப்பாக்கிற்கு இல்லை. அதேபோல், இவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபெண்ட் செய்யும் அளவிற்கு மைதானமும் திண்டுக்கல்லுக்குக் கருணை காட்டவில்லை.

CSG DD 8 Tamil News Spot
TNPL | CSG v DD

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இருந்த வேகத்திற்கு, எவ்வளவு சீக்கிரமாக போட்டியை முடிப்பார்கள் என்பது மட்டும்தான் ஒரே கேள்வியாக இருந்தது. போட்டியின் பத்தாவது ஓவரில்தான், ஜெகதீசனின் விக்கெட்டே விழுந்தது. அந்தச் சமயத்திலேயே 69 ரன்கள் என இலக்குக்கு அருகில் வந்து விட்டது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். 41 பந்துகளில் 53 ரன்களைக் குவித்திருந்த கௌசிக் காந்தியின் விக்கெட்டை சுதேஷ் ஆறுதல் பரிசாகப் பெற்றுக் கொண்டாலும், அது எந்த மாற்றத்தையும் நிகழ்த்தி விடவில்லை.

ராதா கிருஷ்ணன் மற்றும் சசிதேவ் கூட்டணி, 16 ஓவர்களுக்கு உள்ளாகவே, அணியை இலக்கை எட்ட வைத்து வெற்றியைச் சுவைக்க வைத்தது.

Also Read: ENG v IND: பேட்டிங்கில் கைகொடுத்த பண்ட் – ஜடேஜா இணை… இன்று சாதிக்குமா இந்திய பௌலிங் படை?!

இந்தத் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவர் என்ற சாதனையை, இப்போட்டியின் போது ஹரி நிஷாந்த் நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆனாலும், ஆபரேசன் சக்ஸஸ், நோயாளி பிழைக்கவில்லை என்பதைப் போல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது திண்டுக்கல்.

எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. திருச்சி வாரியர்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு இடையேயான இறுதிப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

CSG DD 9 Tamil News Spot
TNPL | CSG v DD

இந்தத் தொடரில், இதுவரை மோதிக் கொண்டுள்ள இருமுறையும், திருச்சிதான் சேப்பாக் சூப்பர் கில்லீஸை, வீழ்த்தி உள்ளது. மூன்றாவது முறையும் அது தொடர்ந்து, முதல் முறை சாம்பியனாக திருச்சி முடிசூடுமா அல்லது முந்தைய தோல்விகளுக்குப் பழி தீர்த்து, மூன்றாவது ரவுண்டில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகக் கோப்பையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனதாக்குமா?!

எது முடிவாய் இருந்தாலும், இரு அணிகளும் அதற்கு முழு முனைப்போடு போராடும் என்பதில் சந்தேகமே இல்லை. அரங்கம் அதிரும், அனல் தெறிக்கும், இறுதிப் போட்டிக்கான கவுண்ட் டவுன் ஆரம்பம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *