Share on Social Media

இன்றைய மக்களின் பிரச்சினை பணம்தான். பணம் காலம், இடம் ஆகிய கட்டுப்பாடுகளை, எல்லைகளை மீறி மானுட ஆற்றலை உறைய வைக்கிற ஒன்று. நீங்கள் பத்து வருடத்துக்குப் பின் இதே நாள், இதே நேரம் சாப்பிடப் போகும் உணவை இப்போதே உத்தரவாதப்படுத்த முடியும். ஏனென்றால் உங்கள் வசம் பணம் உள்ளது. பணம் எனும் அரூப மானுட ஆற்றல் இல்லை என்றால் நாம் தொடர்ந்து உணவுக்காக அலைந்துகொண்டிருக்க வேண்டியதுதான். பணம் இல்லாததால்தான் நமது வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து உணவுக்காக நம்மை நம்பி இருக்கின்றன. நாம் இல்லாவிடில் அவை பட்டினி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்தப் பணத்தின் உத்தரவாதத்தை நமது உடல் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நமது பரிணாமவியல் பாதையில் பணத்துக்கு இன்னும் எந்த மதிப்பும் இல்லை. நம் உடல் இன்றும் பணத்துக்கு முந்தைய காலத்தில்தான் உள்ளது. இதுதான் மையப் பிரச்சினை.

நாம் நம் எதிர்கால உணவுக்கான சேமிப்பை வங்கியில், நம் கடன் அட்டையில், நம் சொத்தில், உறவுகளின் ஆதரவில், ஓய்வூதியத்தில் வைத்திருக்கிறோம். ஆனால் உடலுக்கு இந்தப் புது நுணுக்கங்கள் புரியாது. அதற்குத் தெரிந்த ஒரே ஒரே ஓய்வூதியம், சேமிப்புக் கணக்கு, கடன் அட்டை கொழுப்புதான். தொப்பையிலும் தொடையிலும் தோலுக்குக் கீழே உடல் முழுக்க அது எதிர்கால உணவுக்கான ஆற்றலைச் சேமிக்கிறது.
இன்று நாம் பணத்தை நம்ப நம் உடலோ அதை நம்ப மறுக்கிறது. இந்த முரண்தான் வயதுடன் வரும் எடை அதிகரிப்புக்குப் பிரதான காரணம். ஆக, எடை அதிகரிப்பைத் தடுக்க ஒரே வழி உடலின் பதற்றத்துக்கு, அதன் முணுமுணுப்புக்கு, திட்டமிடலுக்கு நாம் காதுகொடுப்பதுதான். அதன் பாணியில் சென்று இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான். அதாவது விரதம் இருப்பது. சொல்லப்போனால், இளைஞர்களை விட நாற்பதுக்கு மேலானவர்களே கூடுதலாய் விரதம் இருக்க வேண்டும்.

இயல்பாகவே கடும் ஏழ்மையில் இருக்கும் முதியவர்கள் சரியான உடல் எடையைத் தக்க வைக்கிறார்கள். எதிர்காலப் பண சேமிப்பை வைத்திருக்கும் மத்திய, மேல்தட்டினருக்கோ உடல் பருமன் தீராப் பிரச்சினையாக இருக்கிறது. ஆகையால் அவர்களே தம் உடலின் பரிணாம விழைவை புரிந்துகொள்ளத் துவங்க வேண்டும்.

உண்ணாநோன்பு குறித்த கற்பிதங்கள்

உண்ணாநோன்பு குறித்து நம்மிடையே பல கறிபிதங்களும் கேள்விகளும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

விரதம் இருந்தால் இரைப்பைப் புண் (stomach ulcer) வருமா?

உணவுப் பீதி குறித்து ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா, அதன் நீட்சியாக இரைப்பை புண்ணைப் பார்க்கலாம். தொடர்ந்து உண்டுகொண்டே இருக்க வேண்டும், இல்லாவிடில் தசைகளை இழந்து பலவீனமாகி நோயுறுவோம் என ஒரு தொன்மம் இன்று நிலவுகிறது. ஆனால் இது உண்மையல்ல. இதைப் போன்றே மற்றொரு பிரசித்த தொன்மம் இரைப்பைப் புண் பற்றியது. சரிவர நேரத்துக்குச் சாப்பிடாதவர்களுக்கு இரைப்பை புண் வருகிறது என மக்கள் நம்புகிறார்கள். வேளைக்கு உண்ணாதபோது இரைப்பையின் அமிலங்களால் பிரச்சினைகள் வரும்தான். ஆனால் விரதம் எனும் ஒழுங்குபடுத்தப்பட்ட உண்ணாமையால் அமில அரிப்பு, வயிற்று வலி, வாந்தி, புளிப்பு ஏப்பம் ஆகியவை வருவதில்லை. இதை என் மாதக்கணக்கான விரத அனுபவத்தில் உறுதிப்படுத்திச் சொல்கிறேன். என்னைப் போல் உண்ணாநோன்பிருக்கும் சகாக்களின் சாட்சி மொழியின் அடிப்படையிலும் இதைச் சொல்கிறேன். இதில் ஒரு வியப்பூட்டும் விஷயம் உள்ளது. உணவின்மை அல்ல உணவே வயிற்றுப் புண்ணுக்குக் காரணம். சற்று அதிர்ச்சியாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள்.

இரைப்பைப் புண் இரு காரணங்களால் தோன்றுகிறது.

1) ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பேக்டீரியாவால்.

2) அழற்சி எதிர்ப்பு மருந்துகளால் (anti-inflammatory drugs)

1) ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் கிருமி நாம் உட்கொள்ளும் சரியாக சமைக்கப்படாத, அல்லது அசுத்தமாக செய்யப்பட்ட உணவுப் பொருளால் வயிற்றுக்குள் செல்கிறது. நம் இரைப்பையில் உணவை ஜீரணிக்கவும் கிருமிகளை அழிக்கவும் அமிலங்கள் தொடர்ந்து சுரக்கின்றன. இந்த அமிலங்களால் இரைப்பையின் சுவர் அரிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு ஒரு பாதுகாப்பு படலம் உள்ளது – மென் ஜவ்வு (mucusa). மேற்சொன்ன பாக்டீரியா இந்த ஜவ்வுப் படலத்தை அழித்துவிடும். மேலும் அது கேஸ்டிரின் எனும் ஊக்கியின் சுரப்பை அதிகப்படுத்தும்; கேஸ்டிரின் சுரந்ததும், அது அமில அளவை அதிகப்படுத்தும். அப்போது அமிலங்கள் நேரடியாய் இரைப்பையின் சுவரைப் பாதிக்கும். இதனாலே, வயிற்றுப் புண்ணுக்கு சிகிச்சை எடுப்போர் இந்தக் கிருமியை கொல்லவும், அமிலச் சுரப்பைக் குறைக்கவும் மருந்துகள் உண்பார்கள். ஆனால் இந்த பாக்டீரியா சுலபத்தில் அழியாது என்பதால் இரைப்பை புண்கள் ஆற நீண்ட காலம் எடுக்கும். ஏற்கனவே புண் இருப்பதால், வேளைக்கு உண்ணாதபோது அமிலம் அதிகமாகிப் புண்ணை அரிக்க வலியில் உயிர் போகும்.

சின்ன வயதில் வயிற்று வலி ஏற்பட்டால் அம்மா தீயில் பூண்டைச் சுட்டுத் தின்னத் தருவார். காலையில் வயிறு அமைதியாகிவிடும். இது எப்படி? பூண்டு மேற்சொன்ன பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2) அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (ibuprofen, aspirin) நாம் அதிகமாய் எடுத்துக்கொள்ளும் போது அவை எதிர்விளைவாக இந்த ஜவ்வை அரித்துவிடும். இப்போது, அமிலம் நேரடியாய் இரைப்பை சுவரைத் தாக்கிட, புண்கள் தோன்றும்.

இவற்றோடு, புகை மற்றும் மதுப்பழக்கங்களும் புண்களை இரைப்பையில் ஏற்படுத்தலாம்.
இரைப்பைக்குள் கட்டி ஏற்படும்போதும், சிறுகுடலின் மேற்பகுதியில் அமில அரிப்பால் புண் வரும் போதும்கூட மேற்சொன்ன இரைப்பைப் புண் வலி ஏற்படும்.

ஆக, உண்ணாநோன்பு இருப்போர் இரைப்பைப் புண் வருமென அஞ்ச வேண்டியதில்லை. நோன்பை முறிக்கும்போது வீட்டில் சுத்தமாய் சமைத்த ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்கிறீர்கள் எனில், அழற்சி எதிர்ப்பு மருந்துகளைத் தவிர்க்கிறீர்கள் எனில், எந்த வயிற்றுப் பிரச்சினையும் வராது.

என் அனுபவம் இது: நான் விரதம் இருக்காதபோதே எனக்கு வயிற்று உபாதைகள் அதிகம் வருகின்றன. வாந்தி, வயிற்றுப் போக்கு எனத் தவிப்பதும் விரதம் இருக்காத வேளைகளிலே நடந்துள்ளன. காரணம் எளிது. விரதம் இருக்காதபோது என் உணவு உட்கொள்ளல் மீது கட்டுப்பாடு இல்லை. நான் எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கிற உணவை எடுத்துக்கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட ஓட்டலிலிருந்து தந்தூரி சிக்கனை எடுத்துக்கொண்டபோது ஒரு வாரம் வாந்தி, பேதி பிரச்சினைகளும் அஜீரணமும் ஏற்பட்டன. என் தோழி ஒருவருக்கு அங்கிருந்து உணவு வாங்கிக் கொடுத்திட அவருக்கும் அதே பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆனால் விரதம் இருக்கும் காலங்களில் நான் வெளியே உண்பதில்லை; அப்படியே உண்ணும் வேளைகளிலும் குறைவாக, எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே விரும்புகிறேன் என்பதால் பிரச்சினைக்குரிய உணவுகள் எட்டிப் போய் விடுகின்றன.

ஆம், உணவே மருந்து. ஆனால் சிலநேரம் குறைவாக உண்பது அல்லது உண்ணாமல் இருப்பதும் மருந்தே. ஏனென்றால் சமகாலத்தின் உபாதைகளில் கணிசமானவை உணவினால் நமக்கு ஏற்படுபவை.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *