கடைசியாக சான் பிரான்சிஸ்கோ. சற்று முகம் சுளிக்கவைக்கும் ஹிப்பி நகரம். அழுக்கு, வீதியோர மக்கள், போதை, தெருவோர திறந்தவெளி கழிப்பறைகள். நம்புங்கள், சான் பிரான்சிஸ்கோவின் பெரிய பிரச்னை மக்கள் திறந்தவெளியில் கழிப்பது, போதை ஊசிகளை அங்கும் இங்கும் எறிவது. சற்றே கவனமாக இருக்கவேண்டும். மன நோயாளியோ போதை அடிமையோ உங்களை தொந்தரவு செய்யலாம்.
இவ்வளவு இருந்தும், பார்க்க வேண்டிய அம்சங்களும் நிறைய உள்ளன. அந்த தங்க கதவு பாலம் (Golden Gate Bridge) 1.6 கிமீ நீளமுள்ள சிகப்பு தொங்கும் (Suspension) பாலம். அதன் மேல் நடந்து அந்த பாலத்தின் வரலாற்றை படித்து மகிழ்ந்தோம். உலகத்திலியே மிக அதிகம் புகைபடமெடுக்கப்பட்ட பாலம் இதுதானாம். எப்படி எண்ணினார்கள் என்று தெரியவில்லை. ஒரு குத்துமதிப்பா சொல்லறாங்கன்னே வச்சுக்குவோம். (இப்ப உலகம் இத்தனை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதுன்னு சொன்னால் நாம் கேட்டுக்கொள்கிறோம் இல்லையா?). மேலும் இந்த பாலம் வந்த புதிதில் உலகிலேயே நீளமான மற்றும் உயரமான பாலம் இதுதானாம். அந்த தாங்கி பிடிக்கும் இரும்பு கம்பிகளின் குறுக்களவு 100 சென்டிமீட்டர். சாம்பிள் அங்கே வைத்துள்ளார்கள். சுற்றுலா பயணிகள் மொய்க்கும் இடம்.
அடுத்து அந்த கேபிள் கார் (Cable Car) போக்குவரத்து பெரிய சுற்றுலா அம்சம். நிறைய காத்திருப்பு அவசியம். அந்த மேடான பகுதியில் இருந்து கடற்கரை நோக்கி கீழே திறந்த பெட்டிகளில் செல்வது புது அனுபவம். இந்த கேபிள் கார் 150 வருடமாக உள்ளதாம்.San Francisco – Cable Car
அடுத்து உலகிலேயே மிகவும் வளைவு நெளிவுள்ள லம்பார்ட் தெரு. சிறிய தூரம்தான். ஆனால் குன்றில் மேல் இருந்து கீழே வரும் சரிவு. இந்த தெரு வந்த புதிதில் வாகனங்கள் கட்டுக்கடங்காமல் செல்ல, ஒரு புத்திசாலி அந்த சாலையையே அப்படியே நேராக வைக்காமல் “8-10 கொண்டை ஊசி வளைவுகளை” வைத்து மாற்றி அமைத்தார். வேறு வழியில்லாமல் வாகனங்கள் 10 கிமீ மேல் செல்ல இயலாது. இதுவும் ஒரு பெரிய சுற்றுலா அம்சம். அங்கேயும் வாகனம் ஓட்டி பார்த்தோம்.
கடைசியில் அந்த சமுத்திரத்தில் படகு பயணம் செய்து எண்ணற்ற “கடல் சிங்கங்கள்” (Sea Lions) பார்த்தோம். பெரிய இறாக்கள் (Lobster) சாப்பிட்டேன். (டோம் இல்லை).
54வது நாள். மூட்டை கட்டி, வாகனம் திருப்பி அனுபவத்திற்கு நன்றி சொல்லி எமிரேட்ஸ் ஏறினோம். மொத்தம் 76 நாட்கள், வீட்டை விட்டு. அலுவல் வேலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படி மாறிவிட்டது. 3 மாதங்களுக்கு முன் வரை “வீக்லி மீட்டிங்”, “லீடெர்ஷிப் மீட்டிங்” என்று வேறு வாழ்க்கை. இப்போது முற்றிலும் மாறி, சமயங்களில் அந்த “முக்கியத்துவத்தை” இழந்தது போல் உணர்ந்தேன். எதுவாகினும் எல்லாவற்றிற்கும் மாற்றம் அவசியம். அதுவும் வேண்டி ஏற்றுக்கொண்ட மாற்றம்.
நிச்சயம் இன்னொரு முறை அமெரிக்கா செல்லவேண்டும். பார்க்கவேண்டிய பல இடங்கள் உள்ளன. மனைவிக்கு அமெரிக்கா போதும். எனக்கு இன்னும் வேண்டும். 6 மாதம் என்னை தனியாக செல்ல அனுமதிப்பாயா என்று கேட்டுள்ளேன். உண்மை தெரியுமா? துணை இல்லாமல் பயணம் செய்வது வாயை திறக்காமல் பாடுவது போன்றது. நீங்களும் அனுபவிக்காமல் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல், என்ன பயணம். ஒருவேளை “தனிமை பயணிகள்” (Solo Travellers) என் கருத்தில் மாறுபடலாம். படுங்கள்.
இந்த மனித மூளைக்கு 76 நாள் போனது தெரியவில்லை. அந்த 14 மணி நேர விமான பயணம் இழுத்துக்கொண்டே போனது போல் இருந்தது. இறங்கினோம். துபாயின் தனித்துவமான செப்டம்பர் உஷ்ணம் எங்களை தழுவிக்கொண்டது.
அடுத்த வாரம், இலங்கை, கென்யா மற்றும் சைப்ரஸ் பாப்போம்.
– சங்கர் வெங்கடேசன்