
News
ஒட்டுமொத்தமாக, கோவிட்-19 தொற்றின் வழியாக 2021-ம் ஆண்டைப் பார்த்தால் இரண்டாம் அலையின் அச்சத்தில் தொடங்கி மூன்றாம் அலையின் எதிர்பார்ப்பில் முடிந்திருக்கிறது. 2021-ல் கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சையில் முன்னேற்றம், உயிரிழப்புகள் என அனைத்தையும் பற்றிய ரீவைண்டு இதோ!
2020-ம் ஆண்டின் பெரும்பான்மையான நாள்கள் கோவிட்-19 தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதிலிருந்து தடுப்பூசி என்ற நம்பிக்கை தீபத்தை ஏந்தி 2021-ம் ஆண்டு பிறந்தது. 2021-ம் ஆண்டில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சையில் முன்னேற்றம், உயிரிழப்புகள் என அனைத்தையும் பற்றிய ரீவைண்டு இதோ!
இரு தடுப்பூசிகள்
சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்த கோவிஷீல்டு மற்றும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு அவசரகால பயன்பாடு என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு எனப் படிப்படியாகத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கினர்.

100 கோடி சாதனை!
100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்திய மைல்கல்லை எட்டியவுடன் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, “உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தப் படும்போது, இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பெரும் மக்கள்தொகை கொண்ட இந்தியா எப்படி தடுப்பூசியைப் பெறும், எப்படி தடுப்பூசி செலுத்தும் என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்தான் இந்த 100 கோடி தடுப்பூசி சாதனை” என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 142.84 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 84.6 கோடி பேர் முதல் தவணையும், 58.78 கோடிபேர் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 126.89 கோடி பேர் கோவிஷீல்டு, 15.41 கோடி பேர் கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் 8.23 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். இதில் 4.95 கோடி பேர் முதல் தவணையும், 3.28 கோடி பேர் இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டவர்கள்.

10 தடுப்பூசிகள்
கோவிட்-19 வைரஸை தடுப்பதற்கு இதுவரை பல நாடுகளில் பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில ஊசிகளுக்கே உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஃபைஸர் BNT162b2, மாடெர்னா mRNA-1273, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், கோவாக்சின், கோவிஷீல்டு, அஸ்ட்ராஜெனிகா, சினோஃபார்ம் BBIP-Cor V, கொரோனாவாக், கோவோவேக்ஸ் மற்றும் நோவோவேக்ஸ் ஆகிய பத்து தடுப்பூசிகளே உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றவை. இந்தியாவைப் பொறுத்தவரை, கோவாக்சின், கோவிஷீல்டுக்கு அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது மத்திய அரசு மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Follow @ Google News: பக்கத்தில் இணையதளத்தை செய்து ஃபாலோ செய்யுங்கள்… உடனுக்குடன் பெறுங்கள்.
உலுக்கிய டெல்டா!
கோவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. வைரஸில் உள்ள மரபணு வரிசையில் (genetic sequence) ஏற்படும் மாற்றமே உருமாற்றத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. கொரோனாவின் ஆல்ஃபா மற்றும் பீட்டா வேரியன்ட் 2020-லேயே கண்டுபிடிக்கப்பட்டன. காமா வேரியன்ட் 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா வேரியன்ட் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்த இரண்டாம் அலைக்கு முக்கிய காரணம்.

ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர்
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் கோவிட் பாதிப்பால் 15 லட்சம் மக்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டனர் என்கிறது. இந்தியாவிலும் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழந்த நிகழ்வும் நடந்தேறியது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரிக்கவே தொழிற்சாலை பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் சுத்திகரிக்கப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது.
2020-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 2021 வரை உலகத்தின் பல்வேறு மருந்து நிறுவனங்கள், உயிரித்தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுக்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்தாக ரெம்டிசிவிரை பரிந்துரைத்தனர். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தபோது இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவியது. சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்த தமிழ்நாடு மருந்து சேவைக் கழக விநியோக மையத்தில் விடிய விடிய மக்கள் காத்துக்கிடந்தனர். இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து, அனைத்து நோயாளிகளுக்கும் அவசியமில்லை என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், தங்கள் உறவுகளின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் அந்த மருந்துக்கான தேடல் மக்களிடம் இரண்டாம் அலை ஓயும்வரை தொடர்ந்தது.

புள்ளிவிவரம்!
இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியிருப்புகள் மிக அருகிலேயே அமைந்து இருப்பதால், தொற்றுப் பரவல் வேகமாக ஏற்பட்டது. அம்மாநிலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 89,000 பேர் பாதிக்கப்பட்டனர். 18,960 பேர் இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக கேரள மாநிலத்தில் ஒருநாளைக்கு 45,000 பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் பாதிப்பு மட்டும் அதிகரிக்காமல், இறப்பு விகிதமும் அதிகரித்தது. உலக அளவில் அமெரிக்காவில் 6,04,000 பிரேசிலில் 5,18,000 இந்தியாவில் 4,00,000 உயிரிழப்புகள் ஏற்பட்டன. தமிழகத்தில் 2,74,000 பேர் பாதிக்கப்பட்டனர். 21,155 பேர் உயிரிழந்தனர்.
இடுகாடுகளில் இடம் இல்லை!
இரண்டாவது அலை ஏற்படுத்திய கொடிய தாக்கத்தால் பல உயிர்களை இழந்தோம். ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை எனக் கனவிலும் எண்ணிப் பார்க்காத சூழல் உருவானது. கறுப்பு பூஞ்சைத்தொற்று என கொரோனா ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளும் அதிகம். அதையெல்லாம் தாண்டி கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க இடுகாடுகளில் இடம் இல்லாமல் திறந்த வெளிகளில், மைதானங்களில் தகனம் செய்யும் நிலையும் ஏற்பட்டது. இரண்டாம் அலையின் உச்சம் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நேரத்தில் நிகழ்ந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் பெறத்தொடங்கி, ஜூன் மாதம் பாதிப்பு குறையத் தொடங்கியது.

வந்தான் ஒமிக்ரான்!
இரண்டாம் அலை ஓயத்தொடங்கி `நியூ நார்மல்’-ஐ விட்டுவிட்டு நார்மலான நார்மலை விரைவில் கடைப்பிடிக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கியது. வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கைவிட்டு பலர் அலுவலகப் பணிகளுக்குத் திரும்பினர். பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கோவிட்-19-ஐ கிட்டத்தட்ட வென்றுவிட்டோம் என்று நம்பிக்கை பிறந்த நேரத்தில், நவம்பர் 24-ல் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, பலமுறை உருமாறிய ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியது.
டிசம்பர் 2-ல் கர்நாடகாவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பாதிப்பு, அதன் அதிவேகமாகப் பரவும் தன்மையால் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வேரியன்ட்டை போல் தீவிர தாக்கத்தையும், அதிக இறப்பு விகிதத்தையும் இது ஏற்படுத்தாவிட்டாலும் இதன் வீரியம் பற்றிய தெளிவு இன்னும் ஏற்படாததால் எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
குழந்தைகளுக்கும் தடுப்பூசி
ஒமிக்ரான் பரவலால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மும்முரம் காட்டுகிறது. அந்த வகையில் ஸ்விட்சர்லாந்து, நார்வே, ரஷ்யா, இஸ்ரேல், ஓமன், சவுதி அரேபியா, எகிப்து, சீனா, ஹாங்காங், மெக்ஸிகோ, கனடா, பிரேசில், கொலம்பியா, அமெரிக்கா என்று இன்னும் பல நாடுகள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி வருகின்றன. கியூபாவில் 2 வயது நிரம்பிய குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்தியாவில் 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல், மருத்துவப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில் ஜனவரி 10-ம் தேதி முதல், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று பல்வேறு நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக, கோவிட்-19 தொற்றின் வழியாக 2021-ம் ஆண்டைப் பார்த்தால் இரண்டாம் அலையின் அச்சத்தில் தொடங்கி மூன்றாம் அலையின் எதிர்பார்ப்பில் முடிந்திருக்கிறது. எத்தனை அலைகள் வந்தாலும் மனித குலம் தழைத்தோங்கும் என்பதுதான் வரலாறு. வரலாறு திரும்பட்டும்!