
தன் முந்தைய படமான ‘ரங்கஸ்தலம்’ மூலம் தெலுங்கு சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் இயக்குநர் சுகுமார். இவர் இதற்கு முன்னர் அல்லு அர்ஜுனுடன் இணைந்த ‘ஆர்யா’ (தமிழில் தனுஷின் ‘குட்டி’), ‘ஆர்யா 2’ இரண்டுமே மெகா ஹிட் படங்கள் என்பதால் இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் ‘புஷ்பா’வின் மீது எதிர்பார்ப்பு கூடியது. அதுவும் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் படம், பல மொழிகளில் வெளியாகும் Pan India படம் எனக் கூடுதலாக பல்வேறு ப்ளஸ்கள். ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம், தேவி ஶ்ரீ பிரசாத்தின் வைரல் பாடல்கள், சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு எழுந்த எதிர்ப்பும், ஆதரவும் என அல்லு அர்ஜுனைத் தவிர்த்தும் படத்தில் பல விஷயங்கள் கவனிக்கத்தக்கவையாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா படம்?

படம் முழுக்கவே அல்லு அர்ஜுனின் ராஜ்ஜியம்தான். தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், அனல் வீசும் பன்ச் வசனங்கள், மனதில் பட்டதைச் செய்யும் தைரியம் என ஒரு பக்கா தெலுங்குப் பட ஹீரோவாகத் திரையை ஆள்கிறார் இந்த ‘புஷ்பா’. நடனக் காட்சிகள், ஸ்டன்ட் காட்சிகள் என எல்லாவற்றுக்கும் வழக்கம்போல தன் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து கவனம் ஈர்க்கிறார். ராஷ்மிகா மந்தனாவுக்கு வழக்கம்போல ‘காதலிக்கப்படுவீர்கள் டோலி’ பாத்திரம். பின்னர் அவருமே காதலில் விழுந்து ‘சாமி சாமி’ எனச் சுற்றி வருகிறார்.