1927-ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் உலகில் அதிகம் தாக்கம் ஏற்படுத்தும் மனிதர்களுக்கு ‘Person of the Year’ என்ற விருதினை டைம் (Time) பத்திரிகை வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் மகாத்மா காந்தி, ஜான் எஃப்.கென்னடி, வின்ஸ்டன் சர்ச்சில், பராக் ஒபாமா, மார்க் சக்கர்பெர்க், க்ரேட்டா தன்பெர்க் ஆகியோர் Person of the Year-ஆக டைம் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
1982-ல் கணினியை Machine of the Year-ஆகவும், 1988-ல் ‘Endangered Earth’ என நம்முடைய பூமியை Planet of the Year-ஆகவும் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம். அந்த வரிசையில் 2021-க்கான Person of the Year -ஆக எலான் மஸ்க்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம் பத்திரிகை.

ஓர் அறிவியலாளராக, தொழிலதிபராக, பொறியாளராக, நடிகராக, தொலைக்காட்சி தொகுப்பாளராக எலான் மஸ்க் பல வகைகளிலும் உலகில் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்த எலானுக்கு ஒரு ட்வீட்டே போதுமானது. விரல் சொடுக்கினால் கிரிப்டோவின் மதிப்பையும் கூட ஆட்டம் காணச்செய்திருக்கிறார் எலான். இதையேதான் டைம் பத்திரிகையும் எலான் மஸ்க்கைப் பற்றிய விளக்கவுரையிலும் கூறியிருக்கிறது.
ஆனால், எலானை Person of the Year-ஆகத் தேர்ந்தெடுத்தற்குச் சிலரிடம் இருந்து விமர்சனங்களும் வந்திருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் செனேட்டர் எலிசபத் வாரன், “வரி வசூலிக்கும் முறையை முதலில் மாற்ற வேண்டும், அப்போதுதான் Person of the Year-ஆக தேர்வு செய்யப்படுபவர் முறையாக வரி செலுத்துபவராக இருப்பார்” என ட்வீட் செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் வரிச் சட்டங்களில் இருக்கும் சில குறைகளைப் பயன்படுத்தி பெரும் பணக்காரர்களாக இருக்கும் சிலர் மிகக் குறைவான அளவிலேயே வரி செலுத்தி வருகின்றனர். அந்தப் பணக்காரர்களுள் எலான் மஸ்க்கும் ஒருவர். முறையான வரி செலுத்தாத ஒருவர் Person of the year-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது அவர்களது வாதமாக இருக்கிறது.
எலான் மஸ்க் மட்டுமில்லாமல் இந்த ஆண்டு Heroes of the Year-ஆக கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய நான்கு அறிவியலாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம் பத்திரிகை. கிஸ்மிக்கியா கார்பெட், பார்னி கிரஹாம், காட்டலின் கரிக்கோ மற்றும் ஃட்ரூ வெய்ஸ்மேன் ஆகிய நால்வரை Heroes of the Year-ஆக தேர்ந்தெடுத்திருக்கிறது டைம்.

பல அறிவியலாளர்கள், பல விஞ்ஞானிகள் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் பங்காற்றியிருக்கிறார்கள். ஆனால், அந்தத் தடுப்பூசிகளின் உருவாக்கத்திற்கான அடிப்படையான தளத்தை mRNA-வை மையப்படுத்தி உருவாக்கி இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக இந்த நால்வரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது டைம் பத்திரிகை. இந்த கொரோனா மட்டுமல்லாது, இனி வரும் காலத்தில் இப்படியான புதிய நோய்கள் படையெடுத்தாலும், அதற்கான தடுப்பு மருந்துகளையும் இவர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டு நம்மால் உருவாக்க முடியும் என்பதுதான் சிறப்பு. இவர்களை Miracle Workers-ஆக அடையாளப்படுத்தியிருக்கிறது டைம்.
கடந்த ஆண்டு Person of the Year-ஆக அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பைடனையும், கமலா ஹாரிஸையும் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.