Share on Social Media


தந்தூரி அடுப்பில் கோழிக்கறியைச் சுட்டுச் சாப்பிடுகிறோம். குளிர்பதனப் பெட்டியில் ஐஸ்கீரிமை எடுத்துச் சுவைக்கிறோம். நெருப்பும் நீரும் இப்படி நவீனமாக மாறிப்போனாலும் நம்மில் பலர் இரண்டின் முக்கியத்துவத்தையும் அன்றாட வாழ்வில் உணர்வதில்லை. வறட்சியிலும் காட்டு நெருப்பிலும் சிக்கித் தவிக்கும் மக்கள் இதற்கு விதிவிலக்கு என்ற போதிலும் சூழலியில் நெருக்கடியில் வெப்பமும் மழையும் அனைவரையும் அலைக்கழிக்கின்றன.

ஒரு லட்சத்து நாற்பாதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித முன்னோடிகள் செயற்கை நெருப்பைக் கண்டுபிடித்தார்கள். 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பாசன வசதியை ஏற்படுத்தி நிலையான விவசாயத்தை நம் முன்னோர்கள் ஆரம்பித்தார்கள். இப்படி நீரும் நெருப்பும் நம் நாகரீகத்தின் அடிப்படை என்றால் மிகையில்ல. ஆனால் பூமியில் நீர் குறைந்து வருகிறது. சூரியனோ சுட்டெரிக்கிறது. கூடுதலாக பூமிக்கு மேலாக இருந்த வெப்பத்தடுப்பு இயற்கைக் கவசத்தை நமது தொழில்துறையால் ஓட்டை போட்டுக் கூடுதல் வெப்பத்தைத் தருவிக்கிறோம்.

இரண்டிற்கும் என்ன தீர்வு? ஒன்று சூரியனைப் பற்றி நாம் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் சூரியனை நமது விண்கலங்கள் நெருங்கினால் பஸ்மமாகிவிடும். பூமியில் நீர் வற்றிப் போனால் வேறு எங்கு நீர் கிடைக்கும்? வாருங்கள் ஒரு அறிவியல் பயணத்தில் அதற்கு தீர்வு கிடைக்குமா பார்ப்போம்.

சூரியனால் தீர்வு கிடைக்குமா?

நாசா அனுப்பிய ஒரு விண்கலம் முதல் முறையாக சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற எல்லையில் நுழைந்திருக்கிறது. விஞ்ஞானிகள் இந்த சாதனையை சூரியத் துறை (Solar) அறிவியலுக்கான மாபெரும் பாய்ச்சல் என்று கொண்டாடுகின்றனர்.

சூரியனின் வெளிப்புற காந்த ஆதிக்கம் உள்ள பகுதியை கொரோனா என்று அழைக்கிறார்கள். நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் இப்போது அந்த காந்தப் படுகையை உணரும் தூரத்திற்குப் பயணித்துவிட்டது. இதற்கு முன்பு இது சாத்தியமற்றதாக இருந்தது என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலையின் மூத்த விஞ்ஞானி நூர் ரவுவாஃபி. கடந்த 14.12.21 செவ்வாயன்று நடந்த இந்தச் சாதனை விண்வெளித் துறையில் ஒரு மைல் கல் என்கிறார் அவர்.

சோலார் ப்ரோப்

சூரியனது காந்தப் படுகையில் பறக்கும் இந்த விண்கலம் சூரிய கிரகணத்தின்போது இன்னும் அதிகமாக தன்னுடைய உணர்தலை அறியத்தரும். நிலவில் முதல் முறையாக மனித விண்கலம் இறங்கியபோது அது எவ்வாறு உருவானது என்பதை அறிய உதவியதைப் போல சூரியனின் வெளிப்புறத்தைத் தொடுவது பூமிக்கு மிக அருகில் உள்ள ஒரு நட்சத்திரத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவும் சூரியக் குடும்பத்தில் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

சூரியனைத் தொட்டுப் பார்க்கும் இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் கலம் கடந்த ஆகஸ்ட் 2018இல் பறக்கத் துவங்கியது. வெள்ளிக் கோளின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி இந்த விண்கலம் ஏழு ஆண்டுகள் சூரியனை நோக்கிப் பயணிக்கும்.

tamil samayam Tamil News Spotஅண்ணாமலைக்கு எதிராகப் புயல்: கொதிக்கும் கமலாலய சீனியர்கள்
நாசாவின் கூற்றுப்படி இந்த ஆய்வு சூரிய வளிமண்டலத்தின் அருகே 3.8 மில்லியன் மைல்களுக்கு (38 லட்சம் மைல்கள்) அருகே நடக்கும். அதே நேரம் இந்த தூரம் என்பது புதன் கோள் சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப் பாதைக்குள்தான் வரும். இருப்பினும் இதற்கு முன்பு சூரியனை நோக்கி அனுப்பப்பட்ட விண்கலங்களைவிட இது ஏழு மடங்கு அதிகமாய் சூரியனை நோக்கி நெருங்கிப் பறக்கிறது. 2025 டிசம்பரில் முடியும் இந்தச் சோதனை சோலார் குடும்பத்தைப் பற்றிய பல உண்மைகளை நமக்கு அறியத்தரும்.

அறுவடைத் திருவிழாவின்போது விவசாயிகள் சூரியனை வழிபடுவது உலகெங்கும் உள்ள வழக்கம். வழிபடப்படும் சூரியனை அறிவியல் உலகம் தொட்டுப் பார்த்து அது எப்படி, ஏன், எதனால் எரிகிறது என்பதோடு பல உண்மைகளைக் கண்டறியும். அதற்கு இந்தச் சாதனை ஒரு துவக்கம்.

நெருப்பிலிருந்து நீருக்கு

இனி நெருப்பிலிருந்து நீருக்குப் பயணிப்போம். செவ்வாய்க் கோளின் மேற்பரப்பிற்குச் சற்றுக் கீழே கணிசமான அளவு நீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பை ஐரோப்பிய – ரஷ்ய விண்வெளி நிறுவனங்களது கூட்டணி நடத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் மனித குலம் செவ்வாய் கோளில் இருந்து நீரை கொண்டு வரும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சோலார்

செவ்வாய்க் கோளின் நிலநடுக்கோட்டிற்கு தெற்கே அமைந்திருக்கும் Valles Marineris எனும் பள்ளத்தாக்குதான் நமது சூரியக் குடும்பத்திலேயே மிகவும் பெரியது. அமெரிக்காவின் அரிசோனா பாலையில் இருக்கும் கிராண்ட் பள்ளத்தாக்குதான் பூமியிலேயே மிகவும் பெரியது. இதைவிட செவ்வாயின் பள்ளத்தாக்கு பத்து மடங்கு நீளமும் ஐந்து மடங்கு ஆழமும் கொண்டது.

இந்தப் பள்ளத்தாக்கில்தான் நெதர்லாந்து நாட்டின் அளவுக்கு நிகரான நீர் மறைந்துள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) தெரிவிக்கிறது. இந்நிறுவனமும், ரசிய விண்வெளி நிறுவனமான Roscosmos இரண்டும் நடத்துகின்ற ஆய்வுத் திட்டம்தான் ExoMars Trace Gas Orbiter.

செவ்வாய் கோளிலுள்ள அந்தப் பள்ளத்தாக்கின் மேற்பரப்பிலிருந்து ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் இருக்கும் ஹைட்ரஜனை மேற்கண்ட விண்கலம் கண்டுபிடித்தது. மேலும் ஹைட்ரஜனோடு நீர் மூலக்கூறுகள் பிணைக்கப்படுவதால் அந்த மண்ணில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும் இது பனிக்கட்டியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

செவ்வாய்க் கோளில் நீர் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. இதற்கு முந்தைய ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்கலங்கள் செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் கீழே பல கிலோமீட்டர் தொலைவில் நீர் சேமிப்புகளைக் கண்டறிந்துள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இது நிலப்பரப்பின் மேற்பகுதியில் இருப்பதால் எதிர்காலத்தில் நீரை நாம் உறிஞ்சிவிடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

செவ்வாய்

இந்த விண்கலம் 2016ஆம் ஆண்டில் பறக்கத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாயின் சுற்றுப் பாதையை அடைந்தது. முதலில் இது நாசாவோடு சேர்ந்து திட்டமிடப்பட்டாலும், அப்போதைய அதிபர் ஓபாமா நாசாவின் பட்ஜெட்டைக் குறைத்ததால் நாசா விலகி ரஷ்யாவின் நிறுவனம் சேர்ந்துகொண்டது.

கச்சா எண்ணெய்க்கு மாற்று கண்டுபிடிக்கும் காலத்தில் இருக்கும் நாம் நமது சந்ததியினர் காலத்தில் பூமியில் நீர் வற்றிப் போனால் அதற்கான மாற்றை இப்போது கோடிட்டுக் காட்டியிருக்கிறோம் என்று சொல்லலாமா?Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.