Share on Social Media


உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களையும், அதிக அளவில் ராணுவ ஆயுதங்களையும் குவித்திருக்கிறது ரஷ்யா. உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைபலம் மேலும் அதிகரிக்கப்பட்டால், நிச்சயம் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ரஷ்யா கைப்பற்றிவிடுமென எச்சரித்திருக்கிறது அமெரிக்கா. ரஷ்யா-உக்ரைன் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருக்கிறது. இந்த பரபரப்பால் உலக நாடுகளின் கவனம் முழுவதும் ரஷ்யா-உக்ரைன் எல்லையை நோக்கித் திரும்பியிருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் திட்டம் என்ன… இதில் அமெரிக்காவின் பங்கு என்ன?

உக்ரைன் கொடி

உக்ரைன் வரலாறு!

ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். 1991-ல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடானது உக்ரைன். இதனால் கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ரஷ்யாவோடு ஒத்துப்போகும் நாடாக இருந்துவருகிறது. உக்ரைன் தனி நாடான பின்னரும், அதன்மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தது ரஷ்யா. இதுதான் மூலப் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

உக்ரைன் ஒரே நாடாக இருந்தாலும், அரசியல்ரீதியாக இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டுவருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் ரஷ்யர்கள். அவர்கள் அனைவரும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே உக்ரைன் இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள். அதுவே மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள், உக்ரைனையே பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்கள், மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உக்ரைன் செயல்படவேண்டுமென விரும்புகிறார்கள்.

கிரீமியாவைக் கைப்பற்றிய ரஷ்யா!

2014-ம் ஆண்டு, ஐரோப்பிய யூனியனோடு உக்ரைன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அமைந்தன. ஆனால், அப்போதைய அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பா ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, ரஷ்யா தலைமையிலான Eurasian Economic Union-ல் உக்ரைனை இணைத்தார். இதனால் ரஷ்ய மக்கள் பலரும் ஆத்திரமடைய, அங்கு புரட்சி வெடித்தது. தலைநகர் கீவ்-ல் மக்கள் பலரும் போராடத் தொடங்கினர். இதனால் அங்கு அரசுக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. தொடர்ந்து, அதிபர் யனுகோவிச் பதவி நீக்கப்பட்டதாக உக்ரைன் நாடாளுமன்றம் அறிவித்தது.

இதற்கிடையில், உக்ரைன் கலவரங்களைப் பயன்படுத்தி, தனது எல்லையையொட்டியிருக்கும் கிரீமியா தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. இதையடுத்து இருநாடுகளுக்குமிடையே மோதல் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

AP20309514309402 Tamil News Spot
புதின்

Also Read: யூரோ டூர் – 9 |உலகப் போரில் ஜெர்மனி தனித்து நின்றதும், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டு சேர்ந்ததும் ஏன்?

உக்ரைனைக் கைப்பற்றத் துடிக்கும் மேலை நாடுகள்!

ஒருபுறம் ரஷ்யாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் உக்ரைன், மற்ற பகுதிகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. சோவியத்திலிருந்து உக்ரைன் பிரிந்ததிலிருந்தே, மேலை நாடுகளுக்கு உக்ரைனைக் கைப்பற்றினால், கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணம் இருந்துவருகிறது. இந்த எண்ணம்தான் ரஷ்யாவை உறுத்துகிறது.

கிட்டதட்ட ஒரே கலாசாரத்தைப் பின்பற்றும் நாடு, எல்லையிலிருக்கும் நாடு, அதிக ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் நாடு என்பதால் உக்ரைனை, மேற்கத்திய நாடுகளுக்கு விட்டுக்கொடுக்க ரஷ்யாவுக்கு மனமில்லை. அதுமட்டுமல்லாமல், “உக்ரைன் எங்களுடன் NATO (அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளோடு 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நேட்டோ!) அமைப்பில் இணைந்து பணியாற்றலாம். இதன்மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் பலம்வாய்ந்த ராணுவ பாதுகாப்பு, பிற ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு உட்பட அனைத்தும் உக்ரைனுக்குக் கிடைக்கும்” என அந்நாட்டை தங்கள் பக்கம் இழுக்கின்றன மேலை நாடுகள்.

“ரஷ்யாவின் எல்லையிலிருக்கும் ஒரு நாட்டில், அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்களும், வீரர்களும் வந்திறங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதே அல்ல; அது எங்களுக்கான நேரடி அச்சுறுத்தல்” என இதை எதிர்க்கிறார் புதின்.

இப்போது என்ன பிரச்னை?

பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவந்தாலும், இப்போது ஏன் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. தற்போது, உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, தான் பதவியேற்றது முதலே அமெரிக்கா ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்படக்கூடிய ஜெலன்ஸ்கி, நேட்டோ-வில் இணையும் பணிகளை வேகமெடுத்திருக்கிறார். இதனால்தான் படைகளையும், ராணுவ தளவாடங்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறார் புதின். ஒருவேளை நேட்டோ நாடுகளோடு உக்ரைன் இணைந்தால், உடனே உக்ரைன் மீது படையெடுக்கத் தயாராக இருக்கிறது ரஷ்யா.

E4AEs2oUYAgZMPN Tamil News Spot
அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின்

Also Read: சீனாவைக் கடுப்பேற்றும் இந்திய, ரஷ்ய உறவு?! AK-203, S-400 ஏவுகணை பர்ச்சேஸ் – இரண்டிலும் என்ன ஸ்பெஷல்?

உக்ரைன் நாட்டு எல்லையில் படைகள் குவிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் ரஷ்யாவுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. புதினை எச்சரிக்கவும் செய்திருக்கின்றன. ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு புதினை எச்சரித்திருக்கிறது. ஆனால், ரஷ்யாவோ, `எங்களுக்கு உக்ரைன்மீது படையெடுக்கும் திட்டமில்லை’ என மறுத்திருக்கிறது. இந்த நிலையில், “உக்ரைன் நேட்டோ நாடுகளோடு இணைவதை எதிர்த்துத்தான் புதின் படைகளைக் குவித்திருக்கிறாரா… இல்லை, 2014-ம் ஆண்டு கிரீமியாவைக் கைப்பற்றியதுபோல ஒட்டுமொத்த உக்ரைனையும் கட்டுக்குள் கொண்டுவர முடிவெடுத்து இந்த நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறாரா?” எனச் சந்தேகங்களைக் கிளப்புகிறார்கள் ரஷ்ய அரசியலை உற்று நோக்குபவர்கள்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ரஷ்யா, உக்ரைனில் ஊடுருவினால் இந்தமுறை கடுமையான பின்விளைவுகள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், ராணுவரீதியாக அது இருக்காது” என்று எச்சரித்திருக்கிறார். எனவே, இந்த விவகாரத்தில் ராணுவரீதியான நெருக்கடிகள் எதுவும் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், உக்ரைன் விவகாரத்தில் அடுத்த அடி எடுத்து வைத்தால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அந்த நாட்டுக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படலாம். எனவே, இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினின் அடுத்த அடி என்னவாக இருக்குமென்பதை உலக நாடுகள் பலவும் உற்று நோக்கிவருகின்றன.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.