Share on Social Media

உணவுக் கட்டுப்பாடு தொடர்பாக இந்த இரு கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன: ஏன் வழக்கமான டயட் திட்டங்கள் உடல் பருமனைக் குறைப்பதில்லை? (அல்லது) ஏன் குருவி போல் சாப்பிட்டும் குண்டாய் இருக்கிறேன்?
இரண்டாம் கேள்விக்கு முதலில் வருகிறேன்.

என் தோழி ஒருவர் மிக மிகப் பருமனானவர். அவருடன் சேர்த்து நாங்கள் ஐந்து நண்பர்கள் எங்கு போனாலும் சேர்ந்தே திரிவோம். குறிப்பாய் உணவகங்கள். அங்குதான் தோழி மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார். மெனு கார்டை நீட்டினால் சூப், சாலட், இரு சப்பாதிகளைத் தவிர எதையும் தொட மாட்டார். நாங்கள் “இல்ல பரவாயில்ல சாப்பிடுங்க” என ஆறுதல்படுத்துவோம். பிரியாணி, ரோஸ்ட் செய்த சிக்கன், பனீர் பட்டர் மசாலா, கேக் ஆகியவற்றைக் காட்டித் தூண்டுவோம்; அவர் சபலப்படவே மாட்டார். சரி, உடல் பருமன் குறித்த குற்றவுணர்வின் காரணமாய் சாப்பிடாமல் இருக்கிறார் என்றோ நாங்கள் கூட இருப்பதால் கிண்டலடிப்போம் எனச் சாப்பிட தயங்குகிறார் என்றோ நாங்கள் இந்த உண்ணாமை போராட்டத்தை விளங்கிக்கொண்டோம்.

ஒருநாள் அலுவலக உணவுக் கூடத்தில் அவரைத் தனியாய்ப் பார்த்தபோது எனது சித்திரம் முழுக்க மாறியது. அவர் மூன்றே தட்டுகளில் தன் மதிய உணவைக் கொணர்ந்திருந்தார். ஒரு தட்டில் பச்சைக் காய்கறிகள், மற்றொன்றில் ஒரே ஒரு சப்பாத்தி, மூன்றாவதில் வேக வைத்து உப்பு மட்டும் சேர்த்த கீரை. பச்சைக் காய்கறிகள் தனது காலை உணவு என்றார். அதைப் பாதி தின்று மீதம் வைத்திருந்தார். மதியத்துக்குச் சப்பாத்தியும் கீரையும். இடைவேளையின் போது டீ, மேரி பிஸ்கட்டுகள், வேக வைத்த கொண்டைக்கடலை. மாலை ஏழு மணிக்கு சூப். ஒன்பது மணிக்கு ராகி தோசை. நான் அங்கேயே அவரது கலோரி உள்ளீட்டைக் கணக்கிட்டேன். 1000 கலோரிகளுக்கு உள்ளாகவே வந்தது. அவர் சொன்னார், “நான் ரெண்டு வருசமாவே இப்படித் தான் சாப்பிடறேன். யாரும் பார்த்தா நம்ப மாட்டாங்க. நான் என்னமோ மூணு வேளையும் சமோசா, பிரியாணின்னு சாப்பிடறதா நினைக்கிறாங்க. ஆனால் உண்மையிலேயே நான் இவ்வளவுதான் சாப்பிடறேன்.”

எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை. “இது மட்டும்தானா? பசிக்காதா? எப்படி பசி தாங்குவீங்க?”

அவர் கண் சிமிட்டினார். “ஆமா பசிக்குமில்ல? இது மட்டும் எப்படி பத்தும்? அதனால் ரொம்ப தாங்க முடியாம போனா மட்டும் கொஞ்சமா பிஸ்கட்டோ சாட்டோ சாப்பிட்டுப்பேன். கொழுக்கட்டை எனக்கு பிடிக்கும். அதனால ரொம்ப பசிச்சால் மூணு மணிக்கு ஒரு கொழுக்கட்டை சாப்பிடுவேன்.”

நான் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி அப்போது மதியம் ஒன்றரை. ஆக இதைச் சாப்பிட்டு ஒரு மணிநேரத்தில் அவருக்குக் கடுமையாய்ப் பசிக்கிறது. சிறுகச் சிறுக உபரியாகவும் சாப்பிடுகிறார். அந்தக் கலோரிகளும் ஒட்டுமொத்தக் கலோரிக் கணக்கை வீங்க வைக்கின்றன.

“So you cheat often?”

”இல்லீங்க. எப்பயாவதுதான்.”

இதன் பின்னர் நான் இவரைப் போன்றோரை தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். உணவகங்களில், உணவருந்தும் கூடங்களில் பருமனான ஆட்கள் ஒல்லியானவர்களைவிடக் குறைவாகவோ அல்லது அவர்களுக்கு இணையாகவோதான் உண்ணுகிறார்கள். சில நேரம் ஒல்லிப்பிச்சான்கள் தேநீர் இடைவேளையின் போது மட்டுமே 766 கலோரிகளை விழுங்குகிறார்கள் (ரெண்டு சமோசாக்களும் ஒரு கோக்கும்). இவர்கள் மதியமும் இரவும் சாப்பிடும் உணவில் மட்டுமே சுலபத்தில் இரண்டாயிரம், மூவாயிரம் கலோரிகளை உள்ளே தள்ளுவார்கள் என வைப்போம். ஆனால் உடம்பில் துளியும் சதையோ தொப்பையோ உப்பின கன்னங்களோ இல்லாமல் அனிருத் போல இருப்பார்கள்.

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா ஒருமுறை இதைக் குறிப்பிட்டார். பரினீதி புஷ்டியானவர். அவரது உறவுக்காரர் ப்ரீத்தி சோப்ரா. பரினீதி சொன்னார், “நான் ரொம்ப அளந்து அளந்து கம்மியாதான் சாப்பிடுவேன். கவனமா இல்லாவிட்டால் சட்டென உடம்பு போட்டுவிடும். ஆனால் என் கஸின் ப்ரீத்தி நேர் எதிர். அவள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பாள். என்னைவிடப் பல மடங்கு தின்பாள். ஆனால் அவளுக்கு எல்லாம் ஆற்றலாய் எரிக்கப்பட்டுக் காணாமல் போய்விடும். என்னுடையது low metabolism. சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக உடம்பில் தேங்கி விடுகிறது”.

ஒல்லிப்பிச்சான்கள் சாப்பிடுவதெல்லாம் எங்கே போகிறது? ஏன் 1000 கலோரிகளுக்கு உள்ளே சாப்பிடுகிறவர்கள் 100 கிலோவுக்கு மேலே உடல் பருக்கிறார்கள்? Metabolism எனப்படும் வளர்சிதை மாற்றம் தான் காரணமா? சரி, அதென்ன வளர்சிதை மாற்றம்?

நாம் உட்கொள்ளும் உணவு உடம்புக்குள் நிகழும் வேதியியல் மாற்றங்களால் ஆற்றலாய் மாற்றப்படுவதே வளர்சிதை மாற்றம். இது அதிகமாக இருந்தால் நீங்கள் சாப்பிடுவதெல்லாம் ஆற்றலாய் ஆவியாகி, குறைவாகவே கொழுப்பு சேகரமாகும். குறைவாக இருந்தால் கொஞ்சமாய் சாப்பிட்டால்கூடத் தொந்தி குறையாது. ஆனால் இதுகூட ஐயமின்றி நிரூபிக்கப்படுவதில்லை. ஏன் வளர்சிதை மாற்றம் ஒரு சிலருக்கு தொடர்ந்து அளவு கூடிக் குறைகிறது என்பதைப் பற்றி ஆய்வறிஞர்களுக்கும் போதிய தெளிவில்லை. இது மரபணுவால் தீர்மானிக்கப்படுவதே. ஆனால் நமது அன்றாட சூழ்நிலைக் காரணிகளும் இதைத் தீர்மானிக்கின்றன. அவை என்ன, ஏன் என்பது பற்றிப் பிறகு பேசுவோம்.

ஏன் குறைவாகச் சாப்பிடுகிறவர்களுக்கும் எடை குறைவதில்லை? ஏன் டயட் இருந்து காலையும் மாலையும் நடந்து நாவை அடக்கி உடலை பயிற்றுவிப்பவர்களாலும் பெரிய மாற்றத்தை எடையில் உணர முடிவதில்லை? ஏன் வருடக்கணக்காய் பூங்காவில் நடக்கும் மாமாக்களுக்குத் தொந்தி அதேபோல கால் இஞ்ச்கூட மாறாமல் மறையாமல் நிலைக்கிறது?

இதற்கு பதில் காண நாம் எடையின் நோக்கத்தை அறிய வேண்டும். மருத்துவர் ஜேசன் யுங் தனது The Complete Guide to Fasting எனும் நூலில் இவ்வாறு இதை விளக்குகிறார்.

நமது உடல் இரு விதமான பொருட்களை ஆற்றலாய்ப் பயன்படுத்தும்: 1) உணவிலிருந்து கிடைக்கும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை; 2) உணவில்லாதபோது தொப்பை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் சேகரமாகியுள்ள கொழுப்பு.

நாம் உணவருந்தும் போது அதில் உள்ள மாவுச்சத்து ஏன் குறைவாக சாப்பிடுகிறவர்களுக்குக் கட்டுப்பாட்டுடன் தொடர முடியாமல் போகிறது? ஏன் பசி அதிகமாகிறது?

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *