Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மலாலா திருமணம் அதிர்ச்சி அளிப்பதாக தஸ்லிமா கருத்து.
  • தலிபான்களுக்கு இந்த திருமணம் மகிழ்ச்சி அளிக்கும்.
  • ஜூலையில் ரொம்ப மெச்சூர்டாக இருந்தார் மலாலா என்றும் தஸ்லிமா கருத்து.

திருமணம் என்ற பந்தம் எதற்கு.. ஒருவரை ஒருவர் விரும்பினால், சேர்ந்து வாழ விரும்பினால் மனமொத்த பார்ட்னர்களாக வாழ்ந்தால் போதாதா என்று முன்பு கேட்டிருந்த மலாலா தற்போது அவரே திருமண பந்தத்திற்குள் நுழைந்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மலாலாவை உலகம் மறக்க முடியாது. பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கு தற்போது 24 வயதாகிறது. கடந்த 2012ம் ஆண்டு அவரது 15 வது வயதின்போது பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பள்ளி சென்ற “குற்றத்திற்காக” அவருக்கு இந்த தண்டனையைக் கொடுத்தனர் தலிபான்கள். ஆபத்தான நிலையில் அவரை இங்கிலாந்துக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து அவர் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் அவர் இங்கிலாந்திலேயே புகலிடம் பெற்று அங்கேயே வசித்தும் வருகிறார்.

பெண் குழந்தைகள் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மலாலா திடீரென திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பொது மேலாளர் பொறுப்பில் உள்ள ஆஸிர் மாலிக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில், பிர்மிங்காமில் உள்ள மலாலாவின் வீட்டில் வைத்து நடந்துள்ளது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இது தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள் என்று மலாலா பெருமையுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் ஆஸிரும், திருமண பந்தத்தில் நுழைந்துள்ளோம். மிகச் சிறிய அளவில் குடும்பத்தினர் மத்தியில் “நிக்கா” நடந்தது. இருவரும் இணைந்து மேற்கொள்ளப் போகும் பயணத்தை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் மலாலா.

15 வயதில் தலிபான்களால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் இங்கிலாந்து கொண்டு வரப்பட்டு உயிர் பிழைத்த மலாலாவுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகியது. அவரது 17வது வயதில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் மலாலா மட்டுமே. அதன் பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்த மலாலா பின்னர் முழு நேர மனித உரிமை போராளியாக மாறி பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஆப்கான் அகதிகளுக்காக குரல் கொடுத்து வரும் மலாலா வோக் பத்திரிகைக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி இப்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த ஜூலை மாதம்தான் இந்த பேட்டியைக் கொடுத்திருந்தார். அதில் திருமண பந்தத்தை எதிர்ப்பது போல கருத்து கூறியிருந்தார் மலாலா. அந்த பேட்டியில் திருமணம் குறித்து மலாலா கருத்து தெரிவிக்கையில், “பலரும் தங்களது திருமணம், உறவு குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருவதைப் பார்க்கும்போது, எனக்கு சில விஷயங்கள் புரியவில்லை.

ஏன் மக்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. சத்தியமாக எனக்குப் புரியவில்லை. ஒருவரை உங்களது வாழ்க்கையில் அவர் தேவை என்று விரும்பினால், அவருடன் திருமண பந்தம்தான் செய்ய வேண்டுமா.. மாறாக சாதாரண பார்ட்னர்களாக இருந்தால் போதாதா” என்று கேட்டிருந்தார் மலாலா. ஆனால் தற்போது அவரே திருமண பந்தத்தில் நுழைந்திருப்பது சிலரால் விவாதமாக்கப்பட்டுள்ளது.

தஸ்லிமாவுக்கு அதிர்ச்சி

இதற்கிடையே, மலாலா பாகிஸ்தானியர் ஒருவரை திருமணம் செய்திருப்பது குறித்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பாகிஸ்தான் காரரை மலாலா செய்திருப்பதை அறிந்து எனக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. அவருக்கு 24 வயதுதான் ஆகிறது. ஆக்ஸ்போர்ட் போய் எல்லாம் படித்தார். அங்கு ஒரு ஆங்கிலேயரை காதலித்து அவரையே மணப்பார் என்றுதான் நான் நினைத்தேன். அதுவும் கூட 30 வயதுக்கு முன்பு திருமணம் வாய்ப்பில்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால்.. என்று கருத்து தெரிவித்துள்ளார் தஸ்லிமா.

இன்னொரு டிவீட்டில், “மலாலா பாகிஸ்தானியரை திருமணம் செய்து கொண்டிருப்பது, முஸ்லீமையே திருமணம் செய்து கொண்டிருப்பது, அதை விட முக்கியமாக இத்தனை சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொண்டிருப்பது நிச்சயம் தலிபான்களுக்கு மகிழ்ச்சியையே கொடுக்கும்” என்றும் நக்கலாக தெரிவித்துள்ளார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *