Share on Social Media

டி20 போட்டிகளில் ஒரு ஓவர்… ஒரு ஸ்பெல்… ஒரு ரன் அவுட் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இதைப் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், இது மூன்றையும் ஒரே வீரர், ஒரே போட்டியில் நிகழ்த்திக்காட்டியதாக நினைவில்லை. அப்படி ஒரு அதிசயத்தை அற்புதத்தை ஆர்சிபிக்கு எதிராக நேற்று செய்துகாட்டினார் ஜடேஜா. பேட்டிங்கில் கடைசி ஓவரில் ஜடேஜா காட்டிய அந்த அதிரடி… ஒரே ஸ்பெல்லில் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் என்ற இரு திமிங்கலங்களை வீழ்த்திய அந்த மேஜிக்… கிறிஸ்டியனை வீழ்த்திய அந்த டைரக்ட் ஹிட் ரன் அவுட் ஆகியவை மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டது. துண்டு துணுக்கு வீரர் என மும்பை மஞ்ரேக்கரால் விமர்சிக்கப்பட்டவர் ஒரு பாகுபலியாக மிரட்சியூட்டும் வகையில் எழுந்து நிற்கிறார். எப்படி இது சாத்தியமானது?

2019 உலகக்கோப்பையில் நியுசிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸிலிருந்தே ஜடேஜா 2.0 உருமாற ஆரம்பித்தார். அதன்பிறகு, கடைசியாக ஆஸ்திரேலியா சீரிஸ் வரை பல முக்கியமான இன்னிங்ஸ்களை இந்திய அணிக்காக ஆடிவிட்டார். சென்னை அணியை பொறுத்தவரைக்குமே கூட கடந்த சீசனிலிருந்துதான் ஜடேஜா அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்.

2018,19 சீசன்களில் எல்லாம் பிராவோவுக்கு முன்பாக ஜடேஜாவை இறக்குவதற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருந்தது. தோனி தொடர்ந்து ஜடேஜாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வெற்றியடையும் வாய்ப்பை ரிஸ்க் ஆக்குகிறார் என்ற விமர்சனமே எழுந்திருந்தது. ஜடேஜாவின் ஃபார்மும் அப்போது அப்படித்தான் இருந்தது.

முழுமையாக இவர் ஒரு ஃபினிஷராக நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கவில்லை. இந்த சமயத்தில்தான் சஞ்சய் மஞ்ரேக்கரின் மேதாவித்தனமான விமர்சனம் ஜடேஜா மீது விழுந்தது. பெரிதாக சோபிக்க முடியாமல் சொதப்பிக் கொண்டிருந்த ஜடேஜாவுக்கு இதுதான் பிரேக்கிங் பாயின்ட்டாக அமைந்தது. இதன்பிறகுதான் விமர்சகர்களின் வாயை அடைப்பதற்காகவே ஆடுவதைப் போல வெறித்தனமான பர்ஃபாமென்ஸ்களை கொடுக்க ஆரம்பித்தார்.

ஜடேஜா

ஐபிஎல்-ல் கடந்த சீசனில்தான் சிஎஸ்கே அணியும், ரசிகர்களும் ஜடேஜாவை ஒரு ஃபினிஷராக பார்க்க ஆரம்பித்தனர். சிஎஸ்கேவின் ஆஸ்தான ஃபினிஷரான கேப்டன் தோனியின் ஐபிஎல் கரியரிலேயே மோசமான சீசன் கடந்த துபாய் சீசன் தான். பெரிய ஷாட்களை ஆட முடியாமல் தோனி தடுமாறிய விதம் சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. பிராவோவும் பழைய ஃபார்மில் இல்லை. காயங்கள் வேறு அவரை படுத்திக்கொண்டிருந்தது. இப்படியான நிலையில் சிஎஸ்கேவை ஃபினிஷர் ரோலில் ஓரளவுக்கு காப்பாற்றியவர் ஜடேஜாதான்.

சன்ரைசர்ஸுக்கு எதிராக தோனி டிஹைட்ரேஷன் ஆகி சோர்வுற்ற போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்து போட்டியை நெருக்கமாக கொண்டு சென்றிருந்தார். சன் ரைசர்ஸுக்கு எதிரான இன்னொரு போட்டியில் 10 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். வலுவான பந்துவீச்சை கொண்டிருந்த டெல்லிக்கு எதிராக 13 பந்துகளில் 33 ரன்கள். ராஜஸ்தானுக்கு எதிராக 35 ரன்கள். கொல்கத்தாவுக்கு எதிராக 11 பந்துகளில் 31 ரன்கள் என டெத் ஓவர்களில் மிரட்டியிருந்தார். இந்த பர்ஃபார்மென்ஸ்கள்தான் ஜடேஜா மீது தோனிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. தன்னுடைய சுமையை குறைப்பதற்கும், வருங்காலத்தில் தன்னுடைய இடத்தை நிரப்புவதற்கும் சரியான வீரர் ஜடேஜாதான் என்பதை தோனியும் உணரத் தொடங்கினார்.

தோனியின் நம்பிக்கை நூறு சதவிகிதம் சரியானதே என்பதை நேற்றைய போட்டியில் நிரூபித்துவிட்டார் ஜடேஜா. இத்தனை நாட்கள் சில சிக்சர்களை பறக்கவிடும் வீரராக மட்டுமே இருந்தவர், நேற்றைய போட்டியின் மூலம் முழுமையாக ஒரு மேட்ச் வின்னராக ஃபினிஷராக உருவெடுத்துவிட்டார்.

14-வது ஓவரின் கடைசி பந்தில்தான் ஜடேஜா உள்ளே வந்தார். திட்டமிட்டு இன்னிங்ஸை கட்டமைக்கும் தன்மையே ஃபினிஷர்களுக்கான முக்கிய தகுதி. ஜடேஜா இந்த விஷயத்தில் நேற்று மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஹர்ஷல் பட்டேலின் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருந்தது. உடனடியாக மேலும் ஒரு விக்கெட் அந்த சமயத்தில் விழுந்தால் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர் மொத்தமாக காலியாகிவிடும். அதனால், விக்கெட்டை விடாமல் 20 வது ஓவர் வரை நின்று கடைசியில் அதிரடி காட்ட வேண்டும் என்பதே ஜடேஜாவின் ப்ளான். தோனியின் ஸ்டைலுமே கூட இதுதான்.

PAN 1690 Tamil News Spot
ஜடேஜா

முதல் 21 பந்தில் 26 ரன்களை மட்டுமே அடித்திருந்தார் ஜடேஜா. அடுத்த 7 பந்துகளில் 36 ரன்கள் என மொத்தமாக 62 ரன்களை சேர்த்துவிட்டார் ஜடேஜா. 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் நோ பாலோடு 37 ரன்கள் வந்திருந்தது. 5 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்து அமர்க்களப்படுத்தினார் ஜடேஜா.

ஹர்ஷல் பட்டேல் மெதுவான பந்துகளைத்தான் வீசப்போகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஷர்ஷல் பட்டேலின் பலமும் கூட அதுதான். ஆனால், பேட்ஸ்மேன்களுக்கு குறிப்பாக டெத் ஓவரில் ஆடுபவர்களுக்கு மெதுவான பந்துகளை பெரிய ஷாட்டாக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த சீசனில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் மெதுவான பந்துகளிலலேயே அவுட் ஆவதை பார்த்திருக்கிறோம். ஆனாலும் ஜடேஜாவால் நேற்று ஹர்ஷல் படேலின் ஓவரில் 37 ரன்கள் எடுக்க முடிந்தது.

ஹர்ஷல் முதல் பந்தை வீசுவதற்கு முன்னரே ஜடேஜா பின்னங்காலை க்ரீஸுக்குள் நன்றாக ஊன்றி நின்று கொண்டார். இந்த பின்னங்கால் யுக்திதான் மெதுவான பந்துகளை சமாளிப்பதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. டெத் ஓவரில் டிவில்லியர்ஸால் பெரிய சிக்சர்களை அடிக்க முடிவதற்கு அவர் பின்னங்கால்களை அதிகம் பயன்படுத்துவதும் மிக முக்கிய காரணம். ஜடேஜாவும் நேற்று அதையே செய்தார். க்ரீஸுக்குள் காலை ஊன்றி கொண்டு இழுத்து அடிப்பதற்கான பவரை உருவாக்கிக் கொண்டு லெக் சைடில் வெளுத்தெடுத்துவிட்டார்.

பௌலிங்கிலும் நான்கு ஓவர்களை வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேக்ஸ்வெல்லையும் டிவில்லியர்ஸையும் ஜடேஜா அடுத்தடுத்த ஓவர்களில் சாய்த்ததுதான் ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பியது. 34 சதவிகித பந்துகளை ஸ்டம்ப் லைனில் மட்டுமே வீசியிருந்தார் ஜடேஜா. இப்படி தொடர்ந்து டைட்டாக வீசும்போது தொடர்ந்து டாட் ஆட முடியாமல் பேட்ஸ்மேன்கள் டெம்ப்ட் ஆகி பேட்டை வீச முயற்சிக்க போல்டாகி வெளியேறினர்.

AI 9914 Tamil News Spot

ஃபீல்டிங்கில் சொல்லவே வேண்டாம் ‘இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு கேட்டுப் பாருடா’ என்பது போல பந்துகள் ஜடேஜாவை தேடித்தேடி ஓடின. டேன் கிறிஸ்டியனை ஒரு டைரக்ட் ஹிட்டில் வீழ்த்தினார் ஜடேஜா.

பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அத்தனையிலும் ஜடேஜா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதுவும் ஒரு மேட்ச்சில் பேட்டிங்… இன்னொரு மேட்ச்சில் பௌலிங் என்றில்லாமல் ஒரே மேட்ச்சில் அத்தனையிலும் பர்ஃபாம் செய்யும் வீரரையெல்லாம் கிரிக்கெட் உலகம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. சர் ஜடேஜாவுக்கு ஒரு ராயல் சல்யூட்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *