சோகம், மனநிலையில் திடீர், விவரிக்க முடியாத மாற்றங்கள், அழுகை, மயக்கம், எரிச்சல், மோசமான தூக்கம் அல்லது அதிக தூக்கம், கவனம் செலுத்துவதில் சிக்கல், அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வமின்மை, குறைந்த ஆற்றல் போன்ற பிரச்னைகள் பொதுவாக ஏற்படக் கூடியவை. இவற்றைக் கையாள்வது குறித்து, மருத்துவர் பார்வதி விளக்குகிறார்.
“மூடு ஸ்விங்ஸ் என்பது சாதாரண கோபம், எரிச்சலில் ஆரம்பித்து தற்கொலை வரையிலான எண்ணங்கள் ஏற்படக் கூடிய அளவுக்கு சிலருக்கு வீரியமாக இருக்கும். இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுவது என்றாலும், சிகிச்சை தேவைப்படுகிற உச்சபட்ச நிலையில் மட்டுமே இதற்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்க முடியும். மற்றபடி தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை, தினமும் இல்லையென்றாலும் இதுபோன்ற mood swing நாள்களில் மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
உணவில் சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்கள், கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது மூடு ஸ்விங்ஸை கையாள முடியும்.
மருத்துவர் பரிந்துரையின்படி விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், சீஸ், கீரைகள், தானியங்கள் எடுத்துக்கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், சிக்கன் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
தவிர, உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்து உணவின்மை, தேவையான நேரம் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவை எல்லாம் மூடு ஸ்விங்ஸை அதிகரிக்கலாம் என்பதால், இவற்றை எல்லாம் தவிர்த்து வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் மூடு ஸ்விங்ஸை எதிர்கொள்வதால், பெண்கள் மாதவிடாய் நாள்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்து தங்களுக்கு மனமாற்றங்கள் ஏற்படும்போது அதை மூடு ஸ்விங்ஸ் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். இதற்குக் காரணம் சுற்றுப்புறமோ, பிரச்னைகளோ அல்ல, நம் உடல்தான் என்று உணர்ந்துகொள்ளலாம். அது, கோபம், எரிச்சல் என்று அதை மற்றவர்களின் மீது செலுத்தாமல் கட்டுப்படுத்த கைக்கொடுக்கும்.”