Share on Social Media


ஆலோவேரா (Aloe vera) என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் கோலோச்சி வரும் காயகற்ப மூலிகை. ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட கற்றாழை ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்கிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சாகுபடி ஆகிறது. தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.

தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும்பச்சை எனப் பலவிதமாக இருந்தாலும் முதிர்ந்தவையே மருத்துவத்தன்மை நிறைந்தவை. இதில் இருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவத்தை `மூசாம்பரம்’ என்பார்கள். இதற்கு `கரியபோளம்’, `கரியபவளம்’, `காசுக்கட்டி’ எனப் பல பெயர்கள் உள்ளன.

Aloe Vera

Also Read: How to Series: மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து தப்பிப்பது எப்படி? | How to get rid of Constipation?

உச்சி முதல் உள்ளங்கால் வரை பயனளிக்கும் மூலிகை!

கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு. இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. கற்றாழையின் இலைக் கதுப்பு (ஜெல்) மற்றும் வேர், மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன. இவை தவிர வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பெரிதும் பயன்படும் இவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியான ஜெல்லை எடுத்து, அதைத் தண்ணீரில் ஏழு முதல் பத்து தடவை நன்றாகக் கழுவி பயன்படுத்த வேண்டும்.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கும். அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.

கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.

realistic aloe vera with water drop green background 68094 107 Tamil News Spot
Aloe vera

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் இந்த ஜூஸை எப்படிச் செய்வதென்று அறிந்துகொள்வோம். இதன் ஜெல்லைத் தனியாக எடுத்து, அதன் கசப்புத் தன்மை போகுமளவுக்குத் தண்ணீரில் நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். தோல் நீக்கிய இஞ்சி, தேன், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் தேவையான அளவுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதனுடன் கற்றாழை ஜெல், ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு மீண்டும் மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் தயார்.

சதைப்பிடிப்புள்ள 3 கற்றாழைகளின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதன் மீது படிகாரத்தூளை தூவிவைக்க வேண்டும். அப்போது சதைப்பகுதியில் இருந்து நீர் பிரிந்துவரும். இந்த நீருடன் வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகு சேர்த்துச் சாப்பிட்டால், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் வலி, உடல் அரிப்பு போன்றவை சரியாகும். இதிலிருந்து எடுக்கப்பட்ட நீருடன் அதற்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டுமளவுக்குக் காய்ச்ச வேண்டும். இதை தினமும் தலையில் தடவிவந்தால், கூந்தல் நன்றாக வளர்வதுடன் நிம்மதியான தூக்கத்தையும் வரவழைக்கும்; வெப்பத்தைத் தணிக்கும்.

ஆறு டீஸ்பூன் ஜெல்லுடன் ஒரு சிட்டிகை பொரித்த பெருங்காயம், தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் அரை கிராம் அளவுக்கு தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

மூலக்கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்றாழை நல்ல மருந்து. இதன் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, அதனுடன் இரண்டு கைப்பிடி முருங்கைப்பூ சேர்த்து அம்மியில் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது வெண்ணெய் சேர்த்து, எலுமிச்சை அளவுக்கு தினமும் காலையில் ஒரு வாரம் வரை சாப்பிட்டுவந்தால், மூலத் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது உப்பு, காரம் சேர்க்கக் கூடாது.

aloe vera plant vector white bsckground 21085 30 Tamil News Spot
Aloe vera

கற்றாழையின் ஜெல்லை தினமும் வெண்படைகளின்மீது பூசி வந்தால் நாளடைவில் குணமாகும்.

இட்லிப் பானையில் தண்ணீருக்குப் பதில் பால் ஊற்றி, கற்றாழை வேரை சிறு துண்டுகளாக நறுக்கி, இட்லித்தட்டில் வேக வைக்க வேண்டும். பிறகு அதை உலரவைத்துப் பொடியாக்கி, தினமும் ஒரு டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டுவந்தால், தாம்பத்ய உறவு மேம்படும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் இதன் சதையை எடுத்துத் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழைதான் பெஸ்ட்!

கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

aloe icons set cartoon set aloe icons 98396 1125 Tamil News Spot
Aloe vera

சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கர்ப்பப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.

எப்படித் தயார் செய்வது?

நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

katralai 11 Tamil News Spot
கற்றாழை

இப்படியெல்லாம் குடிக்கலாம் கற்றாழை ஜூஸ்!

1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது.

2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது.

3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.

4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

5. மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தின் அமுது. வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும்.

6. கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும், பித்தமும் குறையும்.

7. பசுந்தயிரை மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கற்றாழை ஜெல்லை கலந்து மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம்.

இதில் எந்த வகையில் தயார் செய்து குடித்தாலும், அதைத் தயாரித்த அரை மணி நேரத்துக்குள் ஃப்ரெஷ்ஷாகக் குடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் தாமதப்படுத்திக் குடித்தால், பலன் தராது. மேலும், கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.

யாரெல்லாம் கற்றாழை ஜூஸுக்கு `நோ’ சொல்ல வேண்டும்?!

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்து சாப்பிட்டதும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. கற்றாழை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் அவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.

* சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம். கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, குடும்ப மருத்துவரை ஆலோசித்த பிறகே இவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டும்.

60f5f297001f5 Tamil News Spot
கற்றாழை

Also Read: How to Series: முகப்பருக்களுக்கு வீட்டிலேயே தீர்வு காண்பது எப்படி? | How to get rid off pimples?

* நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்னை உடையவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்த வேண்டாம்.

மொத்தத்தில், ஒருவரின் ஆரோக்கிய உடல்நிலையைப் பொறுத்து 1 – 6 வாரங்கள் வரை கற்றாழை ஜூஸ் அருந்தலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளிவிட்டு, மீண்டும் தொடரலாம். காலை நேர நடைப்பயிற்சியுடன் கசப்பு, புளிப்பு சேர்ந்து கடைசியில் நாவுக்குப் பிடித்த இனிப்புச் சுவையையும் தரும் கற்றாழை ஜூஸ், உடலுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும்; புத்துணர்வும் புதுப்பொலிவும் தரும்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *