Share on Social Media


Happy Birthday SuperStar Rajinikanth: கலைமகளின் தலைமகன், தமிழகத்தின் பெருமை, ரசிகர்களின் தலைவன், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று ஒய்யாரமாய் அமர்ந்துள்ள நாயகம், அன்றும், இன்றும், என்றும், தமிழக மக்களின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. 

நடிகர்களாய் வந்து நடித்து மட்டும் சென்றவர்கள் பலர். நடிகர்களாய் வந்து நெஞ்சில் நின்றவர்கள் சிலர், நடிகர்களாய் வந்து உணர்வுகளாய் மாறிவிட்டார்கள் மிகச்சிலரே. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு முதல் இடம் என்றால் அது மிகையாக்காது. 

ரஜினியின் (Rajinikanth) ஸ்டைல், மாஸ், நடை, உடை, பாவனை என அனைத்திலும் தனித்துவம் துள்ளி குதிக்கும். அபூர்வ ராகமாய் தமிழ் சினிமாவில் நுழைந்து அழியாத ராகமாய் ரசிகர்களின் மனங்களில் கலந்துவிட்டார் ரஜினி!!

சினிமா உலகில் அவருக்கு கிடைத்துள்ள இமாலய வெற்றி எளிதாக வந்ததல்ல. எந்த வித பின்புலமும் இல்லாமல், தன் சொந்த திறமையையும், உழைப்பையும் நம்பி திரை உலகில் கால் எடுத்து வைத்தார். ஆரம்ப காலங்களில் வில்லனாக பல படங்களில் நடித்த ரஜினிகாந்த், வில்லைத்தனத்திலும் வித்தியாசம் காட்டினார். அவர் நடித்த படங்களில், ஹீரோக்கள் மக்களை கவர்ந்தாலும், வில்லனான ரஜினியையும் மக்கள் கவனிக்கத் தவறவில்லை. 

ALSO READ | பாலிவுட் படம் ‘Sooryavanshi’ வசூலை 3 நாட்களில் முறியடித்த அண்ணாத்த 

16 வயதினிலே படத்தில், ஹீரோவுக்கு இணையாக ரஜினியும் பேசப்பட்டார். ஹீரோ நடிப்பில் அசத்தினால், இவர் ஸ்டைலில் கலக்கினார். ‘இது எப்படி இருக்கு’ என அவர் கேட்க, ‘சூப்பரா இருக்கு தலைவா’ என அப்போது பதில் கூறி விசில் அடிக்கத் துவங்கிய ரசிகர்களின் குரல்கள் இன்னும் ஓயவில்லை என்பதுதான் உண்மை!!

வில்லனாக, இரண்டாவது ஹீரோவாக என தன் நடிப்புத் திறனை மெருகேற்றிய ரஜினி, ஹீரோவாக பரிமளிக்கத் தொடங்கினார். தனது நடை, பேச்சு, மேனரிசம், வசனத்தை பேசும் முறை என அனைத்திலும் வித்தியாசம் காட்டினார். அவருக்கு முன் வந்தவர்கள் சென்ற பாதையை தவிர்த்து ‘என் வழி தனி வழி’ என தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்டார். அந்த பாதை பிற்காலத்தில் பலருக்கு வழிகாட்டும் புத்தகமாக அமையப்போகிறது என அவர் அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

அபூர்வ ராகமாய் கால் பதித்த ரஜினி அதிசயப் பிறவியாய் மாறிப்போனார். முள்ளும் மலரும் ஒரே இடத்தில் கிடைக்கும் மனிதன் அவர். சின்ன ரோஜாக்களுடன் கொஞ்சி விளையாடும் ராஜாவாக, தில்லு முல்லு செய்து தாறுமாறாக சிரிக்க வைத்த சந்திரன்-இந்திரனாக, ஆறு முதல் அறுவது வரை மனிதன் படும் இன்னல்களை கண் முன் காட்டி அழ வைக்கும் கதாபாத்திரமாக, மனிதர்களின் மன்னனாக, அலெக்ஸ் பாண்டியனாக மாஸ் காட்டும் போலீசாக, தாதாக்களை புரட்டியெடுக்கும் பாட்ஷாவாக, அதிர்ஷ்டத்தை அசால்டாய் கையாளும் அருணாசலமாக, ‘இந்த நாள்… உன் காலண்டரில் குறிச்சு வெச்சிக்கோ’ என சவால் விட்டு சாதனை படைக்கும் அண்ணாமலையாக, சிஸ்டத்தை சரி செய்யும் சிவாஜியாக, சந்திரமுகியில் கூல் டாக்டராக, பல கோடி குசேலர்களின் கண்ணனாக, மகிழ்ச்சி என கூறி மாஸ் காட்டும் மலேசியா டான் கபாலியாக, எதிரிகளை கலங்கடிக்கும் காலாவாக, பட்டையைக் கிளப்பும் பேட்டை நாயகனாக, தூள் கிளப்பும் தர்பாராக, அன்பான அண்ணன் அண்ணாத்தையாக…. அவர் நம்மை மகிழ்வித்த தருணங்கள் ஏராளம் ஏராளம். இன்னும் பல வித பரிமாணங்களில் தொடர்ந்து வெற்றிப்படையெடுக்கும் இந்த படையப்பா ரஜினி ஒரு வித்தியாசமான கஜினி!!

எந்த நடிகரிடமும் காணாத ஏதோ ஒன்றை ரசிகர்கள் ரஜினியிடம் கண்டார்கள், சூப்பர் ஸ்டாராக்கி (Super Star) கொண்டாடினார்கள், இதயத்தில் இடம் கொடுத்து இன்பமுற்றார்கள், உச்சியில் உட்கார வைத்து மனம் மகிழ்ந்தார்கள். ஒரு நடிகராய், தலைவனாய், மாமனிதனாய் மக்கள் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள ரஜினி, அவர்களது உணர்வுகளாய் உயர்ந்துவிட்டார்.

ரஜினி ரசிகர்களுக்கு…..
“ரஜினி என்பது வெறும் பெயரல்ல ஒரு புரட்சி
தலைவர் என்பது வெறும் உணர்வல்ல ஒரு உணர்ச்சி
சூப்பர் ஸ்டார் என்பது எழுத்தல்ல ஒரு எழுச்சி
ரஜினி ரசிகனாய் இருப்பதில் என்றும் மகிழ்ச்சி”

இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அகர்களுக்கு அவரது கோடானகோடி ரசிகர்கள் சார்பில் மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

ALSO READ | Annaatthe சூப்பர் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *