Share on Social Media

உணவு விஷயத்தில் மிகப்பெரிய சுவாரஸ்யம் மனித உடலுக்கு இந்த அளவுக்கு உணவு தேவையில்லை என்பது. மூன்று வேளை தினம் தினம் உணவென்பதே நம்மைச் செலுத்தும் தேவை, விருப்பம், பயம். அமெரிக்க எழுத்தாளர் அப்டென் சின்கிளையர் The Fasting Cure எனும் தனது நூலில் உணவைத் தவிர்ப்பதே மருந்து எனும் வாதத்தை முன்வைக்கிறார். உணவே வேண்டாம் என்பதல்ல உணவைக் குறைவாக அருந்துவதும் உண்ணாநோன்பை வாழ்வின் ஒரு பகுதியாக்குவதும் நம்மைக் கணிசமான நோய்களிலிருந்து காக்கும் என்கிறார் சின்கிளையர்.

சின்கிளையர் தன் இளமைக் காலம் வரை மிக வசதியான சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே விலையுயர்ந்த உணவுகளை உண்டு, ஆடம்பர விருந்துகளில் கலந்துகொண்டவர். ஆனால் வளர்ந்த பின் வறுமை அவரைச் சூழ்கிறது. ஒரு சில டாலர்களில் ஒரு வாரம் வாழும் நிலை வரும் போதுகூட, அதில் கணிசமான பணத்தை ஆடம்பர உணவுக்கே தான் செலவழித்ததாய்க் கூறுகிறார். வேலை நெருக்கடி அதிகமான பின் உணவருந்துவதும் மிகுகிறது. விளைவாக அவர் விரைவில் நோயாளியாகிறார். மழையில் நனைந்தால் ஜுரம், வெயிலில் நடந்தால் மூச்ச்சுத்திணறல் என அல்லல்படுகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகளும் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள்.

பல்வேறு மருத்துவர்களை அணுகுகிறார். அவர்களும் மருந்தை மாற்றி மாற்றி அளிக்கிறார்கள். நோயின் அறிகுறிகளை இது மட்டுப்படுத்தினாலும் நோயின் பாதிப்பு தொடர்கிறது. தூங்கி எழுவது முதல் உறங்குவது வரை உடலை தூக்கி சுமப்பதே அவருக்கு பெரும் பாடாகிறது. சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, களைத்துப் போவது, களைப்பைப் போக்க மீண்டும் உண்பது, சின்ன சின்ன கிருமித் தாக்குதல்களில் சாய்வது, ஓய்விலே மாதக்கணக்கில் கழிப்பது என அவரது வாழ்க்கை முழுக்கவே நோய்க்கு எதிராய்ப் போராடுவது, ஓய்வெடுப்பது என கழிகிறது. இதற்கு நடுவில் தான் அவர் வேலை செய்யவும் குடும்பத்தை கவனிக்கப் போராடுவதும் நடக்க வேண்டும்.

இந்த ஓயா நோய் எதிர்ப்புப் போராட்டத்தின் நடுவே அவர் டேவெ, ஹசார்ட், கேரிங்டன் ஆகிய மருத்துவர்கள் உண்ணாநோன்பு சிகிச்சை குறித்து எழுதிய நூல்களைப் படிக்கிறார். இந்த நூல்கள் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்கின்றன. இவர்களின் பரிந்துரையை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்வது ஒரு தோழியின் இடையீட்டால்தான்.

இந்தத் தோழி வயதானவர். ஒருநாள் கடும் மழையில் சின்கிளையரும் அந்த தோழியும் தத்தம் குதிரைகளில் நெடுந்தொலைவு பயணிக்கிறார்கள். அந்த பயணத்தின் அலுப்பும் களைப்பும் சின்கிளையரை உருக்குலைக்கின்றன. ஆனால் அந்த வயதான தோழியோ மிக சுறுசுறுப்பாய் ஆற்றலுடன் இருக்கிறார். மழையும் புயலும் அவரை ஒன்றும் செய்வதில்லை. வீட்டுக்கு வந்த ஆடை மாற்றிய பின் அதே துடிப்புடன் பிற வேலைகளில் ஈடுபடுகிறார். அவரது தோற்றத்தின் பொலிவு, ஆற்றல், வலிமை ஆகியன கண்டு சின்கிளையர் வியக்கிறார். அதைப் பற்றி விசாரிக்க தோழி ஒரு ரகசியத்தை சொல்கிறார். தன் நாற்பதாவது வயது வரை அவரும் கடும் உடல் உபாதைகளால் துயருற்றவர்தான். ஒரு கட்டத்தில் அவர் விரதம் இருக்க துவங்குகிறார். பல உபாதைகள் ஒவ்வொன்றாய் மறைகின்றன. ஒரு கட்டத்தில் அவர் தன் இளமையை மீட்டெடுக்கிறார். முன்னெப்போதும் இல்லாத வலிமையை, ஆற்றலைப் பெறுகிறார்.

இதை அறிந்த பின் சின்கிளையர் சில ஆய்வுகளைச் செய்கிறார். மெல்ல மெல்ல ஒரு நாள், இரண்டு நாள், ஒரு வாரம், இரு வாரங்கள் என உண்ணாமல் இருக்கிறார். தன் வாழ்நாளில் என்றுமே கொழுப்பும் மாவுச்சத்தும் மிக்க உணவுகளை மிகுதியாக உண்ணாமல் இருந்திராத அவர் உணவே இன்றி, பசியே இன்றித் தன்னால் இருக்க முடிவதைக் கண்டு வியக்கிறார். இந்த விரதத்தின் பயனாக அவரது நுரையீரல் பிரச்சினைகள், வயிற்று உபாதைகள், கால் வலி அனைத்தும் மறைகின்றன. சொர்க்கம் போய் புத்துடல் ஒன்றைப் பெற்று பூமிக்குத் திரும்பியதைப் போல உணர்கிறார்.

உண்ணாநோன்பை மருத்துவ முறையாய்ச் சில ஆய்வாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே முன்னெடுத்துவந்ததை அவர் அறிகிறார். இந்த அனுபவங்களைத் தொகுத்து அவர் ஒரு பத்திரிகையில் Perfect Health எனும் கட்டுரையை எழுதுகிறார். இது மிகவும் பிரசித்தமாகிறது. 800க்கு மேல் வாசகர் கடிதங்கள் மேலும் விபரங்களைக் கோரி, சந்தேகங்களை, கேள்விகளை எழுப்பிவருகின்றன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுக்க பலர் உண்ணாநோன்பை ஒரு சிகிச்சை முறையாக முயன்று வெற்றியும் காண்கிறார்கள். வாசக ஆர்வத்தைக் கண்ட அவர் விரிவாக இதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதுகிறார். ஆனால் மருத்துவர்கள் தன் நிலைப்பாட்டை சுத்த பேத்தல் என நிராகரிப்பதை சின்கிளையர் குறிப்பிடுகிறார். மருத்துவர்களின் மனப்பாங்கு பற்றிப் பேசும்போது அவர் ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.

சின்கிளையரின் மனைவிக்கு ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது மனைவியைப் பார்க்கச் செல்லும் சின்கிளையர் பெரிய பெரிய டிபன் பாக்ஸ்களில் சிக்கன், மட்டன், பன்றிக் கறி என பெரும் விருந்தையே மூன்று வேளையும் உண்ண கொண்டு செல்வார். மருத்துவர் அப்படி அவரை செய்ய சொல்கிறார். மனைவி நிறைய உண்டாலே தேறுவார் என அவர் வலியுறுத்துகிறார். ஆனால் படுத்த படுக்கையான அவரோ சாப்பாட்டைக் கண்டாலே தலையை திருப்பி உவ்வே என்கிறார். அவரால் சாப்பிடவே முடியவில்லை. வயிறு மந்தம்; வாய் கசக்கிறது. தட்டு தட்டாய் உணவை அவர் முன் சின்கிளையர் நீட்டி இருக்க, மருத்துவர் அருகே நின்றபடி கெஞ்சுகிறார்: “ப்ளீஸ் சாப்பிடுங்க ப்ளீஸ் இல்லாவிட்டா நீங்க செத்திருவீங்க.”

பிற்காலத்தில், உணவை முழுக்கத் தவிர்த்து நோன்பிருக்கும் நாட்களில் இத்தகைய ஜுரங்களிலிருந்து உடனடியாய் சின்கிளையர் மனைவி மீண்டுவிடுவார். உணவல்ல, உணவின்மையே அவரது மருந்து என சின்கிளையர் கண்டு கொள்கிறார்.

சரி, அந்த மருத்துவர் ஏன் அப்படிக் கெஞ்சினார்?

நமது ஒருநாளைய கலோரித் தேவை 1500 என்று வையுங்கள். இது போக புரதம், வைட்டமின்கள் என பல சத்துக்கள் நமக்குத் தேவையாக உள்ளன. இவையின்றி உடலால் சரிவரச் செயல்பட முடியாது என அவர்கள் நம்புகிறார்கள். ஆகையால், உடல் நலிவுறும்போது நன்றாய்ச் சாப்பிடும்படி வலியுறுத்துகிறார்கள் (ஆனால் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் நோய்க்குக் காரணமான உணவுகளை தவிர்க்கச் சொல்லும் பத்திய முறையை பின்பற்றுகின்றன).

மருத்துவர்கள் கவனிக்கத் தவறும் சூட்சுமம் நமது உடலால் உணவின்றி ஒரு வாரம் வரை சுலபமாய் தாக்குப்பிடிக்க முடியும் என்பது. அதற்கு மேலும்கூட ஒரு மாதம்வரை நம்மால் உணவின்றி வாழ முடியும். ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தனை ஆயிரம் சேமிப்புக் கிடங்கு நம் உடலுக்குள்ளே இருக்கின்றன. நம் உடல் கொழுப்பை, தசைகளை உணவாக உருக்கி தன்னையே போஷித்துக்கொள்ளும் திறன் உடலுக்கு உண்டு. இந்த நிலையை ketosis என்கிறார்கள். நாம் உண்ட உணவு செரித்து ஆற்றலாய் மாற்றப்பட்டு மூளைக்குச் செல்கிறது. இது ஒருவகை ஆற்றல். நம் கொழுப்பு செரிக்கப்பட்டு ஆற்றலாகி மூளைக்குச் செல்லும்போது அந்த ஆற்றலை மூளை கூடுதலாய் விரும்பி ஏற்கிறது, இதனால் உண்ணாநோன்பின் போது நமது ஆற்றலும் முனைப்பும் துடிப்பும் கவனமும் பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதனால்தான் உடம்பில் கொழுப்பை சேகரிப்பதில் நம் இயக்கம் அந்தளவு முனைப்பு காட்டுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்கிறவர்களுக்குக்கூட உடல் அமைப்பு மாறிக்கொண்டேவருகிறது. உடற்பயிற்சியை நிறுத்தினால் உடனே கொழுப்பு சேர்கிறது. எடை அதிகரிக்கிறது. இதைக் கண்டு நாம் எரிச்சலடைகிறோம். எடை போடாத உடல் இயல்பு கொண்டோரைக் கண்டு நாம் பொறாமைப்படுகிறோம். கண்ணாடி முன் நின்று தொப்பையை தடவியபடி ‘இந்த உடம்புக்கு என்ன தான் பிரச்சினை? ஏன் சும்மா பெருக்கிறது?’ என நாம் கேள்வி எழுப்பாத நாளில்லை. ஆனால் ஏன் நம் வங்கி இருப்பைக் கண்டு நாம் எரிச்சடைவதில்லை? நம் உடலின் வங்கி இருப்பே அதன் கொழுப்புப் படலங்கள். அந்த இருப்பில் இருந்து பணத்தை எடுத்து செலவழிக்காததே நம் தவறு.

அதற்கான வழியாக நான் உடற்பயிற்சியை மட்டுமே சொல்லவில்லை. நம்மில் பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி செய்தால் கூட எடையை கணிசமாய் குறைக்க முடியாது. அதற்கு உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *