Share on Social Media


புதிய ஸ்மார்ட் போன் மாடல் வந்திருக்கிறது, விளம்பரத்தைப் பார்த்ததுமே வாங்க வேண்டும் என்று மனம் பரபரக்கிறதா?
லேப்டாப் வாங்கி நாலு வருஷம் ஆச்சு. தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கணும் என்று நினைக்கிறீர்களா?
புதிய வீட்டுக்குப் போனதும் அங்கே உள்ள ஹாலுக்கு ஏற்றபடி பெரிய திரை உள்ள ஸ்மார்ட் டிவி வாங்கினால் நல்லது என்று தோன்றுகிறதா?
உங்கள் வீட்டில் இருக்கும் டீன் ஏஜ் பையனுக்கோ பெண்ணுக்கோ கையில் இருக்கும் எலக்ட்ரானிக் விளையாடுச் சாதனம் அலுத்துவிட்டதா? புதிது புதிதாக ஏதேனும் ஒரு விளையாட்டுச் சாதனத்தை இணையத்தில் காட்டி உங்களைத் தொந்தரவு செய்கிறார்களா?
குளிர்காலத்திலேயே ஏசி, ஃபிரிட்ஜை எல்லாம் மாற்றிவிட்டால் சீப்பாக முடிந்துவிடும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள், இதையெல்லாம் செயலாக மாற்றுவதற்கு முன்பு ஒரு கணம் பொறுங்கள். இந்தப் புள்ளிவிவரத்தைப் படியுங்கள்.

மின்னணுக் கழிவுகள் உலக அளவில் மாபெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளன. 2021ஆம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள்.

5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம். இதுவரை பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றிலேயே அதிக எடை கொண்டது சீனப்பெருஞ்சுவர்தான். அந்தச் சீனப்பெருஞ்சுவரைக் காட்டிலும் அதிக எடையுள்ள மின்னணுக் கழிவுகளை ஒரே ஆண்டில் இந்த உலகம் உருவாக்கியிருக்கிறது என்றால் இந்தக் கழிவுகளின் சுமை எந்த அளவுக்கு இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ஓராண்டிற்கு மட்டும்தான் இந்தக் கணக்கு. முந்தைய ஆண்டுகளையும் சேர்த்துக்கொண்டால் 50 கோடி டன்னுக்கும் மேல் இருக்கலாம். இத்தனையும் மக்காத கழிவுகள். பூமியின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை.

தேவையா இந்த உற்பத்தி?

இந்தக் கழிவுகள் என்னும் சுமை ஒருபுறம் இருக்க, இப்படிக் கழித்துக்கட்டப்பட்ட பொருள்களுக்குப் பதிலாகப் புதிதாகத் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான செயல்முறையில் வீணாகும் வளங்கள் இதைவிடவும் பெரிதும் கவலை தருபவை.

எடுத்துக்காட்டாக கேலியம் (Gallium), ஆர்சனிக் (Arsenic), வெள்ளி (Silver), இன்டியம் (Indium), யிட்ரியம் (Yttrium), டான்டலம் (Tantalum) ஆகிய தனிமங்கள் செல்பேசிக் கருவி உற்பத்திக்குத் தேவை. இந்தத் தனிமங்களின் இருப்பு இன்னும் நூறாண்டுகளில் தீர்ந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தத் தனிமங்கள் செல்பேசிக்கு மட்டுமல்ல. வேறு பல முக்கியமான தேவைகளுக்கும் அவசியமானவை. எடுத்துக்காட்டாக, கேலியம் என்னும் தனிமம் மருத்துவ வெப்பமானிகள், எல்.இ.டி.கள், சோலார் பேனல்கள், டெலஸ்கோப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளும் இதில் உள்ளன. இந்தத் தனிமம் தீர்ந்துபோனால் மேற்படிப் பொருள்களை உற்பத்தி செய்வதில் பெரும் சிக்கலாகிவிடும்.
மொபைல் போன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், கெட்டில்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னணு பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பூமியின் வள ஆதாரங்களை அரிக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து அதுவும் புமியின் மாசுபாட்டை அதிகரிக்கிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கிப் போடும் மின்னணுக் கழிவுகள் மிகப் பெரிய சுமையாக உருவெடுப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

மலைபோலக் குவியும் இந்தக் கழிவுப் பொருள்களின் மதிப்பும் மலைப்பை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மின்னணுக் கழிவுப் பொருள்களின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை பெரும்பாலான நாடுகளின் ஆண்டு மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம்.

உற்பத்தி முறையில் உள்ள பிரச்சினை

அது மட்டுமல்ல. புதுப்புது டிசைன்கள், மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் ஆகியவை வந்துகொண்டே இருப்பதால் மின்னணு கழிவுகளின் உற்பத்தி ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் டன் அதிகரிக்கிறது. இந்தக் கருவிகளின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சிக்கு உள்ளாகிறது.
மின்னணுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விற்பனையையும் வருமானத்தையும் கணக்கில் கொண்டு இவற்றின் ஆயுளைக் குறைவானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். இது எங்க தாத்தா காலத்துல வாங்கினது என்று ஒரு சைக்கிளைக் காட்டும் வழக்கமெல்லாம் மண்மூடிப் போய்விட்டது. பாத்திரங்கள், மேசை, நாற்காலிகள் எனப் பலவற்றிலும் விரைவில் தூக்கிப் போட்டுவிட்டுப் புதியதை வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று புதிது புதிதாக வரும் டிசைன்களின் மீது உருவாகும் மோகம். புதிய அம்சங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதுடன், விளம்பரங்கள் மூலம் அவற்றின் ஈர்ப்பு மேலும் கூட்டப்படுகிறது. இரண்டாவது, இந்தப் பொருள்களின் ஆயுள் குறைவாக இருக்கும் வகையில் திட்டமிட்டே தயாரிக்கப்படுகின்றன. இவற்றைச் சீர் செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும்படி தயாரிப்பாளர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இதனால் பொருள்கள் விரைவில் குப்பைக்கூடைக்கு வருகின்றன. இப்படிப்பட்ட உற்பத்தித் தந்திரம் காரணமாக மின்னணுக் கழிவுகள் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்களும் காரணமாக இருக்கிறார்கள்

பேனாவுக்கு ரீஃபில் கிடைக்குமா என்று எழுதுபொருள் கடையில் கேட்டால், பேனாவே பத்து ரூபாதான் என்று பதில் வருகிறது. பணம் முக்கியமல்ல, பொருளைத் தூக்கிப் போடுவதில் விருப்பமில்லை என்று சொல்லிக் கேட்டால், இப்போதெல்லாம் ரீஃபில் அதிகம் வருவதில்லை என்று கடைக்காரர் சொல்கிறார்.
சின்ன ரீஃபிலுக்கு நடப்பதுதான் மொபைல், டிவி, லேப்டாப் ஆகிய அனைத்துப் பொருள்களுக்கும் நடக்கிறது. புதிதாக வாங்கு, நன்றாக அனுபவி, சீக்கிரமே தூக்கிப் போட்டுவிட்டு அடுத்ததை வாங்கு என்றே சந்தை ஒவ்வொரு நுகர்வோரையும் பார்த்துச் சொல்கிறது. பழையதே போதும் என்று சொல்லி ரிப்பேர் செய்து கொடுக்கச் சொன்னால் வேற்று கிரகவாசியைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறார்கள்.

Smartphone

விற்பனை நிலையங்களும் சேவை நிறுவனங்களும் மட்டுமல்ல, சக மனிதர்களே அப்படித்தான் பார்க்கிறார்கள். சந்தையில் புதிது புதிதாக மாடல்கள் வருகின்றன. அதை வாங்காவிட்டால் நாம் பின்தங்கிவிடுவோம். ஆண்டுக்கு ஒரு முறை மொபைலை மாற்றாவிட்டால் நீ வேஸ்ட் என்கிறார்கள். விளம்பரங்களும் இந்தச் செய்தியையே சொல்கின்றன. சக மனிதர்களும் இதையே சொல்கிறார்கள்.
உற்பத்தியாளர்களின் அணுகுமுறை, நுக்ர்வு கலாச்சாரத்தின் விஸ்வரூபம் ஆகிய இரண்டும் சேர்ந்து கழிவுப் பொருள்களின் ஆபத்தைப் பேராபத்தாக மாற்றியிருக்கின்றன. குறிப்பாக மக்காத கழிவுகளின் பெருக்கம் மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுத்து நிற்கிறது.
இப்படி எல்லா விதங்களிலும் உலகை அச்சுறுத்தும் இந்த மின்னணுக் கழிவுப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம்?

RRR கோட்பாடு

எல்லா விதமான கழிவுப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையான தீர்வு ஒன்றுதான். அதை RRR என்று குறிப்பிடுவார்கள். அதாவது, Reduce, Reuse, Recycle. பயன்பாட்டைக் குறைப்பது, பழைய பொருட்களை முடிந்த அளவில் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்துவது, மறுசுழற்சி செய்வது. இதுதான் கழிவுகளைக் குறைக்கச் சிறந்த வழி.

மின்னணுப் பொருள்களைத் தூக்கி வீசாமல் மறுசுழற்சி செய்தால் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு குறையும். ஒரு டன் மின், மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும்.

E-waste

பயன்பாட்டைக் குறைப்பது என்பது நுகர்விய மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். விளம்பரங்கள் எவ்வளவு ஆசை காட்டினாலும் மயங்காமல் புதிய பொருள்களை வாங்குவதைத் தவிர்க்கவும் தள்ளிப்போடவும் வேண்டும். உற்பத்தியாளர்கள் அற்பாயுள் கொண்ட பொருட்களை உற்பத்திசெய்யும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகெங்கும் உள்ள அரசுகள் இதற்குத் தேவையான அழுத்தத்தை உற்பத்தித் துறைகளுக்குத் தர வேண்டும். தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். விற்பனை நிலையங்களைக் காட்டிலும் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்தித் தரும் நிலையங்கள் அதிகரிக்க வேண்டும். பயன்படுத்த முடியாமல் போகும் நிலையில் ஏதேனும் ஒரு வகையில் மறுசுழற்சிக்கான வழிகளை ஆலோசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகள் போடுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளுதல். மொபைல், லேப்டாப் போன்றவற்றுக்கும் இத்தகைய வழிகளைக் கண்டுபிடித்து அவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும். திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் RRR கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் விளம்பரங்களில் நடிக்க வேண்டும்.

உற்பத்தி நிறுவனங்கள் மாறுவதும் அரசாங்கங்கள் சட்டங்களை இயற்றிக் கண்காணிப்பை அதிகரிப்பதும் நம் கையில் இல்லை. ஆனால், நம்முடைய பொருள் வேட்டையைக் குறைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. புதிய மொபைல்போனோ, லேப்டாப்போ வாங்க அவசரப்படாதீர்கள். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குக் கையில் உள்ள பொருளையே பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் போனை இன்னும் மாற்றவில்லையா என்று யாராவது கேட்டால் நான்கு ஆண்டுகளாக இதே மொபைல்தான் வைத்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்லுங்கள்.

இந்த பூமியைக் காப்பாற்றுவதில் நமக்குரிய பங்கை இப்படித்தான் ஆற்ற முடியும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *