எனக்கு சிசேரியன் முடிந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதன் பிறகு எடை எக்கச்சக்கமாக கூடிவிட்டது. அதைக் குறைக்க நினைக்கிறேன். ஸ்கிப்பிங் செய்தால் பலன் கிடைக்குமா? ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பப்பை இறங்கிவிடும் என்று சிலர் சொல்வது உண்மையா?
– வித்யா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.
“ஸ்கிப்பிங் செய்வது மிகச் சிறந்த பயிற்சி. ஆனாலும் நீங்கள் சிசேரியனாகி இரண்டை வருடங்கள் கழித்து, உடற்பயிற்சியை ஆரம்பிப்பதால் முதலில் நடைப்பயிற்சியிலிருந்து தொடங்கலாம். மிதமான பயிற்சிகளை மெள்ள மெள்ளச் செய்ய ஆரம்பித்து, கூடவே வாக்கிங்கும் செய்யலாம். வாரத்துக்கு மூன்று நாள்கள் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் செய்யலாம். உடற்பயிற்சிகளுக்கு உங்கள் உடல் பழக ஆரம்பித்து, உடலளவில் நீங்கள் ஓரளவு பலமாக உணரத் தொடங்கியதும், மூட்டுகளில் அடிபடாமல் குதிக்க முடியும் என்றால் ஸ்கிப்பிங்கையும் ஆரம்பிக்கலாம்.
ஸ்கிப்பிங் மிகச் சிறந்த கார்டியோ பயிற்சியும்கூட. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஸ்கிப்பிங்குடன், ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது சீக்கிரம் பலன் தெரியும். ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கும் முன், அது உங்களுக்கு சிரமமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.