எனக்கு 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவான HbA1c, 8 அல்லது அதற்கு மேல்தான் இருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட்டும் குறைக்க முடியவில்லை. HbA1c அளவைக் கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? தற்காலிகமாக இன்சுலினுக்கு மாறிவிட்டு, HbA1c குறைந்ததும் மீண்டும் மாத்திரைகளைத் தொடர்வது சரியா?
– மகாலிங்கம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் வி.மோகன்.
“மாத்திரைகளின் மூலம் குறையாத HbA1c அளவை நீங்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். முதல் வேலையாக நீங்கள் சாதம், மாவுச்சத்துள்ள பிரெட், சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றின் அளவைக் குறைத்து, காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் HbA1c அளவைக் குறைக்க முடியும். புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டை, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
சைவ உணவுக்காரர்கள் என்றால் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, சுண்டல், காளான், ராஜ்மா உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொண்டால் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகம் கிடைக்கும்.