சந்தோஷமாக இருக்க எந்தக் காயைச் சாப்பிட வேண்டும் என்று கேட்பது போன்றிருக்கிறது இந்தக் கேள்வி. சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு உடல், மன ஆரோக்கியம் அவசியம். நன்றாகச் சாப்பிட வேண்டும், முறையான தூக்கம் வேண்டும் என நிறைய விஷயங்கள் இருப்பதைப் போன்றதுதான் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதும்.
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைப் பலரும் ஓர் இலக்காக வைத்துக்கொள்கிறார்கள். அது தேவையில்லை. வழக்கமான விஷயங்களைச் சரியாகச் செய்துகொண்டிருந்தாலே சந்தோஷமாக இருக்க முடியும். அதே போல நோய் எதிர்ப்பாற்றலையும் ஓர் இலக்காக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

கொரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் சி உள்ளிட்ட சத்து மாத்திரைகளை வழங்குவது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதற்காக அல்ல. நோய் பாதித்த நிலையில் அவர்களது உடலில் ஏதேனும் சத்துக் குறைபாடு இருந்தால் அதைச் சரிசெய்வதற்குத்தான் கொடுக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பாற்றல் என்பதே என்னவென்று புரியாமல் இன்றும் பலர், `நான் வைட்டமின் சியும் மல்ட்டி வைட்டமினும் எடுத்துக்கொள்கிறேன்…. எனக்கு கொரோனா வராது’ என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.