கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டுவிட்டேன். இரண்டாவது டோஸ் போட்டதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உருவாகும் என்கிறார்களே…. இதை டெஸ்ட் செய்து பார்த்து உறுதிசெய்து கொள்ளலாமா?
– அபிநவ் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
“உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி முதல் டோஸ் போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களில் எதிர்ப்பாற்றல் தூண்டப்படும். அதன்பிறகு இரண்டாவது டோஸும் போட்டுக்கொண்டதும் இது ஏற்கெனவே போட்டுக்கொண்ட முதல் ஊசி ஏற்படுத்திய தடுப்பாற்றலுக்கு மேலும் வலு சேர்க்கும். நம் நாட்டில் பெருமளவில் போடப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு 2-3 வாரங்களில் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பாற்றல் புரதங்கள் உயர்ந்த நிலையை அடைகின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. இப்படி ஏற்பட்ட எதிர்ப்பாற்றல் புரதங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஆனாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இவற்றின் எதிர்ப்பாற்றல் பலன் (Immune Response) நீடிக்கும். எதிர்ப்பாற்றல் திறன் குறைந்தாலும், `செலுலார் இம்யூனிட்டி’ எனப்படும் செல்களின் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டு, அது நீண்ட காலம் நீடிக்கும். பி மற்றும் டி வகை நினைவாற்றல் செல்கள், கோவிட் தொற்று ஏற்படும்போது வைரஸை எதிர்த்துப் போராடுவதுடன், மீண்டும் எதிர்ப்பாற்றல் புரதத்தை உருவாக்கும்.
அதனால்தான் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் போன்ற நாடுகளில் மூன்றாவது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவிலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் போடுவது குறித்து யோசித்து வருகிறார்கள். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள், உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு மூன்றாவது டோஸ் போட வாய்ப்பிருக்கிறது.