நாடுவிட்டு நாடு பயணம் செய்கிறவர்களை, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்த பிறகே அனுமதிக்கிறார்கள். பயணத்துக்கு முன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்நிலையில் அவர்களிடமிருந்து ஒமிக்ரான் வைரஸ் எப்படி மற்றவர்களுக்குப் பரவும்?
– அமுல்யா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
“ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகி விட்டது. ஆரம்பத்தில் இது குறித்த பல தகவல்கள் நமக்குத் தெரியாமலிருந்தன. இதன் தாக்கம் எப்படி இருக்கும், முந்தைய அலைகளைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சம் இருந்தது.
இப்போது நமக்கு சில விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. இந்தத் தொற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொற்றின் உருமாற்றத் தன்மையாக இருக்கிறது.
உருமாறிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் ஓரளவுக்குதான் பாதுகாப்பு அளிக்கும். இப்போது நமக்கு இருக்கும் முதல்நிலை தடுப்பூசிகள், நோய் எதிர்ப்புக்கு உதவுவதுடன், ஒருவேளை தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர பாதிப்பாக மாறாமல் காக்கும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் கழித்தே அதன் முழுமையான பாதுகாப்பு ஆரம்பிக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக்கூட தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.
ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர பாதிப்பாக மாறியதாக இதுவரை நாம் கேள்விப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கே தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. எனவே தடுப்பூசியைத் தவிர்க்காமல் இரண்டு டோஸும் போட்டுக்கொள்ள வேண்டும்.