கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்படுவது சாதாரணமானதா…. கருச்சிதைவின் அறிகுறியாக இருக்குமா?
– மிருதுளா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
“கர்ப்ப காலத்தில் 10 முதல் 15 சதவிகிதப் பெண்களுக்கு ப்ளீடிங் ஏற்படுகிறது. கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஏற்படுவது, கர்ப்பத்தின் இறுதிநாள்களில் ஏற்படுவது என கர்ப்ப கால ரத்தப்போக்கை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை ரத்தப்போக்கு கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களுக்குள் ஏற்படுவது. இப்படி கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு எல்லாமே ஆபத்தானவை அல்ல.
ஆபத்தில்லாத ப்ளீடிங்கில் `இம்ப்ளான்ட்டேஷன் ப்ளீடிங்’ என்பது ஒருவகை. கருவாக உருவான முட்டையானது குழாயிலிருந்து நகர்ந்துசென்று கர்ப்பப்பைக்குள் ஊன்றி வளரும்போது சிலருக்கு லேசான ரத்தக் கசிவு இருக்கும். இது வழக்கமாக இரண்டு, மூன்று நாள்களில் சரியாகிவிடும் என்பதால் இது குறித்து பயப்படத் தேவையில்லை. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியான செர்விக்ஸில் புதிதாக நிறைய ரத்த நாளங்கள் உருவாகும். அப்படி உருவாகும்போதும் சிலருக்கு சில நேரம் ப்ளீடிங் இருக்கலாம். இதுவும் பயப்படத் தேவையில்லாதது.
கர்ப்பப்பைக்குள் கரு உருவாகாமல் கருக்குழாயிலோ அல்லது வேறு பகுதிகளிலோ கரு உருவாவதை `எக்டோபிக் பிரெக்னென்சி’ என்கிறோம். இதில் வயிற்றுவலியுடன் தலைச்சுற்றலும், தோள்பட்டை வலியும், ப்ளீடிங்கும் இருக்கும். இது சற்றே ஆபத்தான விஷயம். கரு வளர, வளர கருக்குழாய் வெடித்து தாய்க்கு ஆபத்து நேரலாம். இதற்கு உடனே மருத்துவரை அணுக வேண்டும். எளிமையான ஸ்கேன் மூலம் இது சாதாரண கர்ப்பமா, கருக்குழாய் கர்ப்பமா என்று தெரிந்துகொள்ளலாம்.