வாரம் ஒருநாளோ, தினமும் ஒருவேளையோ வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டால் எடை குறையும் என்கிறாள் என் தோழி. பேலியோ டயட் பெஸ்ட் என்கிறாள் இன்னொருத்தி. நானும் அதைப் பின்பற்றலாமா? எடையைக் குறைக்க எது சிறந்த டயட்?
– நித்யா (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
“உங்களுடைய வயது, பீரியட்ஸ் சுழற்சி சரியாக இருக்கிறதா, பிசிஓடி உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கின்றனவா, மெனோபாஸுக்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்களா, மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என எந்தத் தகவலும் இல்லை. எடைக்குறைப்பு என்ற விஷயத்தில் ஹார்மோன்களின் பங்கு மிக முக்கியமானது. பீரியட்ஸ் சரியாக வராவிட்டாலும் எடை கூடும். மெனோபாஸ் வயதிலிருப்போருக்கும் எடை அதிகரிக்கும். `மெனோபாட்’ என்றே ஒரு நிலை உண்டு. அதில் மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு வயிறு ஆறு மாத கர்ப்பம்போலவே இருக்கும்.
ஆதார் கார்டு, கைரேகை போன்றவை ஒவ்வொரு தனி மனிதருக்கும் எப்படி தனித்துவமானவையோ, அதுபோன்றதுதான் எடைக்குறைப்புத் திட்டமும். எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு நிறைய காரணிகளை ஆராய்ந்து, அவர்களுக்கேற்ப வெயிட்லாஸ் பிளான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், எடைக்குறைப்பை பொறுத்தவரை பலரும் இப்படி முறையாகச் செய்வதில்லை.
அவர்களுக்குத் தெரிந்தவர்கள் பின்பற்றும் எடைக்குறைப்பு முயற்சிகளைத் தாமும் பின்பற்றுவார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பது, பேலியோ, கீட்டோ என ஏதோ ஒரு டயட் முறையைப் பின்பற்றுவது எனக் கண்மூடித்தனமாகச் செய்வார்கள். இப்படிச் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.