Share on Social Media


எனக்கு 18 வயதில் இருந்தே வழுக்கை பிரச்னை ஆரம்பித்துவிட்டது. சரும மருத்துவர்கள் உச்சந்தலையில் எண்ணெய் வடியும் தன்மை அதிகம் உள்ளதுதான் காரணம் என்றார்கள். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் Finasteride, Minoxidil போன்ற மருந்துகள் பலன் அளிக்கவில்லை. இதற்குத் தீர்வே இல்லையா?

– அஷ்வத் (விகடன் இணையத்திலிருந்து)

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.

“நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது உங்களுக்கு இருப்பது `ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ எனப்படும் ஹார்மோன் தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனானது டிஹெச்டி எனப்படும் `டைஹைட்ரோடெஸ்டோஸ்டீரான்’ ஆக மாற்றப்படும். அதன் விளைவாக கூந்தலின் வேர்க்கால்கள் பலமிழந்து, மெலிய ஆரம்பிக்கும். 18 வயதில் இதை நீங்கள் உணர்ந்திருந்தாலும், அதற்கு சில வருடங்கள் முன், அதாவது 12 வயதிலிருந்தே பிரச்னை ஆரம்பித்திருக்கும். `ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ பாதிப்புக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். குடும்பப் பின்னணி காரணமாக, அதாவது உங்கள் குடும்பத்தில் அப்பா, அண்ணன், மாமா என யாருக்காவது இந்தப் பிரச்னை இருந்தால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடரலாம். வாழ்வியல் முறையும் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். இரவில் தாமதமாக உறங்கச் செல்வது, கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிடுவது, ஸ்ட்ரெஸ் போன்றவை முடி உதிர்வுக்கு முக்கியமான காரணங்கள்.

Also Read: How to Series: பொடுகுத் தொல்லையிலிருந்து மீள்வது எப்படி? | How To Get Rid Off Dandruff?

நீங்கள் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கும் Finasteride மருந்து இளவயதில் எடுக்கக்கூடாதது. இதை உபயோகிக்கத் தொடங்கியதும் முடி உதிர்வு நிற்கும். ஆனால் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் உதிரத் தொடங்கும். இதன் ஆபத்தை உணராமல் பலரும் இந்த மருந்தை நீண்ட காலமாக உபயோகிக்கிறார்கள். அப்படி உபயோகிக்கும்போது இது குழந்தையின்மை பிரச்னையைக்கூட ஏற்படுத்தக்கூடும்.

முதல் வேலையாக தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் முடி உதிர்வுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த இரண்டு தவிர்த்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாத எத்தனையோ மருந்துகள் உள்ளன. கல்லீரல் பாதிப்பிருக்கிறதா என்பதையும் செக் செய்யுங்கள். அப்படியிருந்தாலும் உங்கள் உடலால் சத்துகளை கிரகிக்க முடியாத நிலை ஏற்பட்டு, முடி உதிர்வாக வெளிப்படலாம். மருத்துவரை அணுகினால் கல்லீரல் ஆரோக்கியத்துக்கான மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

ஜங்க் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். இரவில் சரியான நேரத்துக்கு, சரியான அளவு தூங்குவதை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும். நம் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து `மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சுரக்கும். ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த உதவும் அந்த ஹார்மோன், இரவில் 10 முதல் 12 மணி நன்றாகச் சுரக்கும். அந்த நேரத்தில் தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தால், ஸ்ட்ரெஸ், பிசிஓடி, சருமத்தில் தேவையற்ற பகுதிகளில் ரோம வளர்ச்சி, கூந்தல் மெலிவது, எரிச்சல் உணர்வு, கோபம் போன்றவை வரலாம். அதனால்தான் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் முறையான தூக்கம் முக்கிய தீர்வாக வலியுறுத்தப்படுகிறது.

140902 thumb Tamil News Spot
முருங்கைக்கீரை

Also Read: Doctor Vikatan: சோரியாசிஸ் பாதிப்புக்கு அலோபதியா, சித்தாவா; எது சிறந்தது?

முடி உதிர்தல் பிரச்னைக்கு சோயா உணவுகள் பெரிய அளவில் உதவும். Finasteride மருந்து, டெஸ்ஸ்டோஸ்டீரான் அளவுகளைக் குறைக்கும். அதே வேலையை இயற்கையாகச் செய்பவை சோயா உணவுகள். சோயா மில்க், டோஃபு எனப்படும் சோயா பனீர், சோயா விதைகள் போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். பூசணி விதை, கிர்ணி விதை, ஆளி விதை உள்ளிட்ட அனைத்து சீட்ஸையும் பொடித்துவைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் ஒவ்வொரு டீஸ்பூன் சாப்பிடலாம். இது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மட்டுமன்றி, சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவும்.

நெல்லிக்காய், முருங்கைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். காயாக, கீரையாக உண்ண முடியாதவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இவற்றையே மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்ளலாம்.”

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *