Share on Social Media


“கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் போடுவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அது ஏமாற்று வேலை என்றும், மூன்றாவது டோஸ் மட்டுமே மக்களைக் காக்கும் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எத்தனை நாள்கள் பாதுகாப்பு நீடிக்கும்? மூன்றாவது டோஸ் அவசியமா, இல்லையா?”

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி.

“முற்றிலும் புதிய விஷயமாக நமக்கு அறிமுகமான கோவிட் தொற்றில், குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றம் என்றால் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசிகள்தான். தடுப்பூசிகள் தொடர்பான இரண்டு விஷயங்களில் நமக்கு சரியான தெளிவு இல்லை. சில தொற்றுகள் ஏற்படும்போது நம் உடலில் இயல்பான எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த எதிர்ப்பு சக்தியானது சில தொற்றுகளுக்கு சில வாரங்கள், வேறு சில தொற்றுகளுக்கு சில மாதங்கள், இன்னும் சில தொற்றுகளுக்கு சில வருடங்கள்வரை நீடிக்கலாம். தவிர சில தொற்றுகள் ஒருமுறை வந்தால் மீண்டும் வரவே வராது. கோவிட் தொற்று பாதித்தவருக்கு 6 முதல் 12 மாதங்கள்வரை உடலில் இயற்கையான எதிர்ப்பாற்றல் இருக்கலாம் என இப்போது சொல்கிறார்கள்.

பூங்குழலி

அடுத்து தடுப்பூசிகளால் உருவாகும் எதிர்ப்பாற்றல். இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்துதான் நமக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். இந்தப் பாதுகாப்பு எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது ஆரம்பகாலத்தில் தெரியவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப வேறு வேறு தடுப்பூசிகள் வேறு வேறு விதமாகச் செயல்படுகின்றன. அமெரிக்காவில் போடப்படும் ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்ட ஆறேழு மாதங்கள் கழித்து அதன் பாதுகாப்பு 50 சதவிகிதம்தான் இருப்பதாகவும், அதுவும் நாளுக்கு நாள் குறைவதாகவும் சொல்கிறார்கள்.

அதற்காக மூன்றாவது டோஸ் போட்டால்தான் எதிர்ப்பாற்றலை 95 சதவிகிதம் வரை நீட்டிக்கச் செய்ய முடியும் என்கிறது ஃபைஸர் நிறுவனம். அதனால் அங்கே நிறைய பேருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தொற்றினால் தீவிர பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் இருக்கும் வயதானவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்றோருக்கு இது போடப்பட்டிருக்கிறது. டெல்டா வேரியன்ட்டுக்கு எதிரான ஆற்றல் கோவாக்சினில் 60 சதவிகிதம் வரை இருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. ஆனாலும் அது எத்தனை நாள்கள் பாதுகாப்பு தரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

WhatsApp Image 2021 09 24 at 7 30 30 PM Tamil News Spot
Covid -19 Vaccine

Also Read: `ஆணியே புடுங்க வேணாம், விடுங்க!’ – தடுப்பூசி சான்றிதழும் தவிக்கும் மக்களும்

ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் போடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கோவாக்சின் நிறுவனம் சொல்கிறது. எந்தத் தடுப்பூசியானாலும் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு அதன் எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கும். ஆனாலும் அது தொற்று ஏற்படாமலோ அல்லது தீவிரமாகாமலோ பாதுகாக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது. எதிர்ப்பாற்றல் குறையும்போது மூன்றாவது டோஸ் போடுவதன் மூலம் அதை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பது உண்மைதான்.

எம்ஆர்என்ஏ, இன்ஆக்டிவேட்டடு வைரஸ் என ஒவ்வொரு தடுப்பூசியும் ஒவ்வொரு வகையில் செயல்படக்கூடியது. நீங்கள் முதலில் போட்டுக்கொண்டது தவிர்த்து வேறு மாதிரி செயல்படும் தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக்கொண்டால் அதன் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. இந்திய அரசு இது பற்றி எதுவும் சொல்லவில்லை. உலக சுகாதார நிறுவனமும் இது சரியல்ல என்கிறது. பற்றாக்குறை காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் பலருக்கு முதல் இரண்டுடோஸ் தடுப்பூசிகளே போடப்படவில்லை. இந்த நிலையில் செழிப்பான நாடுகள் தங்களிடம் தடுப்பூசி இருப்பு உள்ளதால் இப்படி மூன்றாம் டோஸை வலியுறுத்துகின்றன என்றும் ஒரு சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது.

AP21026641889851 Tamil News Spot
COVID-19 Vaccines

Also Read: Doctor Vikatan: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் அறுவைசிகிச்சை செய்துகொள்ளக் கூடாதா?

பூஸ்டர் டோஸின் மூலம் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எந்தத் தடுப்பூசி, எந்தக் கால இடைவெளியில், யாருக்குப் போடப்பட வேண்டும் என்ற விஷயங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படாமலிருக்கின்றன. நம்முடைய முதல் இலக்கு, ஒரு டோஸ் கூட போடாத மக்களுக்கு அதைப் போட வழி செய்வதுதான். எனவே பூஸ்டர் விஷயத்தில் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருப்போம். அதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், போட்டுக்கொண்டவர்களும் தனிமனித இடைவெளி, முகக் கவசம், கைகழுவுதல் போன்ற பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதும்தான் நாம் செய்ய வேண்டியவை.

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்த பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *