Share on Social Media

நாம் உணவருந்தும்போது அதில் உள்ள மாவுச்சத்து ஏன் குறைவாகச் சாப்பிடுகிறவர்களுக்குக் கட்டுப்பாட்டுடன் தொடர முடியாமல் போகிறது? ஏன் பசி அதிகமாகிறது?

உணவானது, கூடுதலாகச் சாப்பிட நம்மைத் தூண்டும் தன்மை கொண்டது. நீங்கள் ஒரு தோசை சாப்பிட்டால் உடம்பு இன்னொரு தோசையை கேட்கும். ருசி அல்ல, பசியே அதிகரித்து வயிறு உங்களை சாப்பிடும்படி கெஞ்சும். இதன் உளவியல் எளிமையானது.

நமது முன்னோர்களுக்கு அவ்வப்போது மட்டுமே உணவு கிடைக்கும். கிடைக்கும் போது முடிந்தளவு அவர்கள் தின்று உடம்பில் மீதி கலோரிகளை கொழுப்பாக தேக்கிக் கொள்வார்கள். ஆகையால் குறைவாக தின்பவர்கள் சீக்கிரம் இறந்து போவார்கள்; நிறையத் தின்பவர்களே பஞ்சத்தின்போது தாக்குப்பிடிப்பார்கள்.

நீங்கள் இதை உங்கள் வீட்டு நாயின் உணவாசையைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். நாய்க்கு ஒரு துண்டு சிக்கன் கொடுத்தால் அது அடுத்த துண்டுக்காய் கெஞ்சும். அதைக் கொடுத்தால் அடுத்ததற்காய் பாயும். வயிறு வீங்கிப் போகும் வரை அது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். “ஏன் இப்படி பாய்கிறாய், சோறே பார்க்காதது போல?” என நாம் கடிந்துகொள்வோம். ஆனால் நாய் இவ்வாறு வேளாவேளைக்கு அளவாய்த் தின்னும் விதம் உருவாக்கப்பட்டது அல்ல. நாய் கூட்டு வேட்டை மிருகம். நாய்கள் ஒரு வாரம் அலைந்து ஒரு மானைச் சுற்றிக்கொண்டு வேட்டையாடுகின்றன. தலைவன் நாய்தான் முதலில் மானின் கழுத்தைக் கவ்வும். அது சுவையான பகுதிகளைச் சாப்பிட்ட பின் வழி விடும். அடுத்து பிரஜை நாய்கள் பாய்ந்து கிடைத்த கறியை முடிந்த அளவுக்குக் கவ்வி விழுங்கிக்கொள்ளும். ஒழுங்காய் மென்று சாப்பிடவெல்லாம் நேரமிருக்காது. எந்த நாய் அதிக அளவு கறியைச் சில வினாடிகளுக்குள் கவ்வி விழுங்குகிறதோ அதுவே அடுத்த வேட்டை வரை தாக்குப்பிடிக்கும். பொறுமையாய் அளவாய்த் தின்ன நினைக்கும் நாய்க்கு ஒரு துண்டுகூடக் கிடைக்காது. அது இளைத்துச் சாகும். இதனால் தான் உணவைப் பொறுத்தமட்டில் நமது வீட்டு நாய்கள் இப்படி ஆவேசம் காட்டுகின்றன; மெல்லப் பொறுக்காமல் அப்படியே விழுங்குகின்றன.

நாமும் இந்த நாய்களைப் போலத் தான். ஒரே வித்தியாசம், நாம் தினமும் மூன்றில் இருந்து ஆறு வேளைகள் கூட்டு வேட்டையில் ஈடுபடுகிறோம் என்பது.

உணவில் முதல் வாயை வைத்ததுமே அடுத்தடுத்த வாய்களை உணவு தீரும் வரையில் வைத்து வயிற்றை நிறைக்கும்படி இயற்கை நம்மைப் படைத்திருக்கிறது. ஆகையால் உணவு வல்லுநர்கள் தரும் திட்டப்படி உண்பது நமக்கு மிக மிக விரோதமாய் இருக்கிறது. கையில் சாப்பாட்டைக் கொடுத்துச் சாப்பிடாதே என்றால் நம்மால் சகித்துக்கொள்ள முடியாது. ஒன்றோடு நிறுத்திக்கொள் என்றால் யாரோ நமது மூச்சை நிறுத்துவது போல இருக்கிறது. இயற்கை நம்மை அவ்வாறே படைத்திருக்கிறது. சாப்பிடத் துவங்கியதுமே பசி அதிகமாகும்படியே இயற்கை நம்முடலை அமைத்திருக்கிறது.

ஆட்கொள்ளும் சோற்று இச்சை

பேலியோ உணவு முறையைப் பின்பற்றிய அனுபவம் கொண்டோர் இதை உணர்ந்திருக்கலாம். மாவுச்சத்து உணவைத் தவிர்த்ததுமே சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை மீது ஆர்வம் முழுமையாய் மாய்ந்துவிடும். உங்கள் அருகே அமர்ந்து ஒருவர் சோற்றில் பாத்தி கட்டினாலும் நீங்கள் ஒரு லெஸ்பியன் ஒரு ஆண் அருகே இருப்பது போன்றே எனக்கென்ன என அமர்ந்திருப்பீர்கள். உங்களை அந்த உணவு ஈர்க்காது. மாவுச்சத்து உணவுகள் மீதான இச்சை அப்படியே மறைந்துவிடும். வயிற்றுப் பசியும் வெகுவாய்க் குறைந்துவிடும். ஆனால் திரும்பவும் பெயருக்கு ஒரு பிடி சோற்றைத் தின்றால் சோற்று இச்சை ஒரு பேய்போல உங்களை ஆட்கொள்ளும். மாவுச்சத்து உணவுகள் அடிப்படையில் மதுவைப் போன்றே இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். உண்ணாநோன்பும் இதே போன்ற அனுபவத்தையே அளிக்கிறது.

நான் 24 மணிநேர உண்ணாநோன்பு இருந்தேன். முதல் வாரத்தில் நிச்சயம் பசி இருந்தது. கவனத்தைத் திருப்பியும் தண்ணீர் அருந்தியும் சமாளித்தேன். ஆனால் இரண்டாம் மூன்றாம் வாரங்களில் நிச்சயமாய் பசி குறைந்தது. மூன்றாம் வாரத்தில் நான் பசியையே அறியவில்லை. வார இறுதியில் மட்டுமே (சனி, ஞாயிறு) நான் விரதத்தை முடிப்பேன். அப்போது மூன்று வேளைகள் உண்ணும்போது எனக்கு முன்பிருந்தது போன்ற உணவு ஆர்வம் இல்லை என்பதை கவனித்தேன். முன்பு சாப்பாட்டு வேளைகளுக்கு நடுவே எதையாவது கொறிக்காமல் இருக்க மாட்டேன். பிஸ்கட், சிப்ஸ், வறுத்த பாதாம் என உடம்பு கேட்டுக்கொண்டே இருக்கும். இல்லாவிட்டால், காப்பி, டீ. ஆனால் இந்த சனி, ஞாயிறு விரத முடக்கின்போது காப்பி, டீ அருந்தும் ஆர்வமும் குறைந்தது; நொறுக்குத் தீனி கிடைத்தாலும் வாய் வேண்டாம் என்றது. அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். சாப்பாட்டு ஆர்வமும் ருசியும் என்னுடையது அல்ல. என் மனம் அல்ல ஆசைப்படுவது. என் நாவும் வயிறுமே என் பசியை, ருசியை, உணவு அளவை, நாட்டத்தைத் தீர்மானித்துவருகின்றன. நான், எனது மனம், சிந்தனை, எண்ண ஓட்டம், ரசனை எல்லாமே என் வயிற்றின் தூதுவர்கள் மட்டுமே.

இதையே நீங்கள் செக்ஸுடன் ஒப்பிடுங்கள். செக்ஸ் ஆசையைப் பொறுத்தமட்டில் உடம்பும் மனமும் சரிசமமாய் பங்களிக்கிறது. ஒரு வருடம் கிடைக்கவில்லை என்றால்கூட இச்சை அதிகமாகுமே ஒழியக் குறையாது. ஆனால் நீண்ட காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அதற்கான ஆசை குறைகிறதே ஒழியக் கூடுவதில்லை.
உணவைத் தேர்வது, ஆசைப்படுவது, அடைய முயல்வது ஆகியவற்றில் நம் மனத்துக்கான பங்கு வெகு குறைவானதே. ஆகையால்தான் மனத்தைக் கட்டுப்படுத்தி உணவைக் குறைப்பது சிரமம். உணவைத் தவிர்த்து மட்டுமே மனதைக் கட்டுப்படுத்த முடியும். மாற்றிச் செய்ய முடியாது.

ஏன் அன்றாட நடை, வேலை உள்ளிட்ட உடல் அசைவுகள் எடையை குறைப்பதில்லை?

முந்தைய பகுதியைப் படிக்க

ஒல்லிப்பிச்சான்கள் சாப்பிடுவதெல்லாம் எங்கே போகிறது?

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *