Share on Social Media


என் தோழிக்கு முதல் அலையில் ஒருமுறை, இரண்டாம் அலையில் ஒருமுறை என இரண்டு முறை கொரோனா தொற்று வந்து குணமானார். கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்களுக்கு உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் 3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். இதனால் தடுப்பூசியைத் தள்ளிப்போட்ட என் தோழிக்கு சமீபத்தில் மூன்றாவது முறையும் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பெற்றுத் திரும்பியிருக்கிறார். தடுப்பூசி போட்டாலும் அதன் பலன் 6-8 மாதங்கள்தான் நீடிக்கும் என்கிறார்கள். தொற்று வந்த பிறகும் நோய் எதிர்ப்பாற்றல் இல்லை…. இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது?

– சௌதாமினி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

“எந்தவிதமான தொற்று ஏற்பட்டாலும் அது உடலில் அதற்கான எதிர்ப்புசக்தியை உருவாக்கும். அது எத்தனை நாள்கள் நீடிக்கும் என்பது அந்தத் தொற்றின் வகையைப் பொறுத்து மாறும். சின்னம்மை வந்தவர்களுக்கு அதன் பிறகு ஆயுள் முழுவதும் அது திரும்ப வராது. அது ஒருவகையான எதிர்ப்பாற்றல். கோவிட் வைரஸ் தொற்று வந்தவர்களுக்கும் ஒருவகையான எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஆனால் அது மறுமுறை கோவிட் தொற்றே ஏற்படாத அளவுக்குத் தடுக்குமா என்பதோ, அந்த எதிர்ப்பாற்றல் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் இருந்துவிட்டுப் போய்விடுமா என்பதோ இன்னும் நமக்குச் சரியாகத் தெரியவில்லை. இதுகுறித்த மாறுபட்ட கருத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால்தான் தொற்று ஏற்பட்ட பிறகு மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதாவது தடுப்பூசி போடுவதற்கு முன் தொற்று வந்தாலும், முதல் டோஸ் தடுப்பூசி போட்டபிறகு தொற்று வந்தாலும், தொற்றின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததில் இருந்து மூன்று மாதங்கள் கழித்தே தடுப்பூசி போடச் சொல்கிறோம்.

மூன்றாவது முறையாக கொரோனா தொற்று என்பது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்தான்…. எதிர்ப்புசக்தி என்பது நம் உடலில் இருப்பது, தடுப்பூசியின் மூலம் உருவாவது என இரண்டு வகைப்படும். கொரோனாவுக்கான தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றலை உருவாக்குபவையா என்பது இன்னும் தெரியவில்லை. அவற்றின் பாதுகாப்பு எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது பற்றி இனிதான் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *