Share on Social Media


Covid Questions: கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்துதான் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறேன். தினமும் காலையில் வேலைக்குப் போகுமிடத்தில் பல்ஸ் சரிபார்ப்பார்கள். எனக்கு எப்போதும் 140 – 150-க்கு மேல்தான் காட்டுகிறது. தொடர்ந்து இப்படி இருப்பது ஆபத்து என்கிறார்கள் சிலர். உண்மையா?

மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.

“நாடித்துடிப்பு அசாதாரணமாக இருப்பதாக நீங்கள் பயந்தால் உங்கள் கையில் நாடியைப் பிடித்துப் பார்த்தே அது எப்படியிருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். ஒரு நிமிடம் கணக்கு வைத்துக்கொண்டு இதை செக் செய்யலாம். 140 அல்லது அதற்கு மேல் இருந்தால் அதைப் படபடவென அடித்துக்கொள்ளும் உங்கள் இதயமே காட்டிக்கொடுக்கும்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்பது 100 சதவிகிதம் துல்லியமான அளவுகளைக் காட்டுவதில்லை. அதில் நிறைய தவறான ரீடிங் வர வாய்ப்புள்ளது. விரலை அசைத்தாலோ, நெயில்பாலிஷ், மருதாணி போட்டிருந்தாலோகூட சரியான ரீடிங் காட்டுவதில்லை. அதாவது விரலின் நுனியில் உள்ள ரத்த அழுத்தத்தை வைத்துதான் அது காட்டும். இதயத்தில் ஏற்படுகிற பிரச்னைகளை கைவிரல்கள் துல்லியமாகக் காட்டுமா என்பது சந்தேகம்தான்.

Tamil News Spot
Pulse Oximeter

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?

தவிர பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களில் இன்று நிறைய போலிகள் வருவதும் ஒரு காரணம். அதில் பார்க்கும்போது ஆக்ஸிஜன் அளவும் வெகுவாகக் குறைவதை வைத்து உடனே பயப்படத் தேவையில்லை. ஆனாலும் அதை ஓர் அலர்ட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு தினமும் வேலையிடத்தில் நுழையும்போது பல்ஸ் செக் செய்யும்போது அதிகமாகக் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தேகம் வந்தால் வேறொரு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வைத்து செக் செய்யலாம். காலையில் அவசரத்திலும் பரபரப்பிலும் டென்ஷனாக உள்ளே நுழையும்போது அதன் காரணமாகவும் பல்ஸ் அதிகம் காட்டலாம். சற்றுநேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிதானமான நிலையில் செக் செய்து பாருங்கள். அப்போது நார்மலாக காட்டுகிறது என்றால் பயப்படத் தேவையில்லை. எப்போதுமே அதிகம் காட்டினாலும்கூட உங்கள் உடலுக்கு அது நார்மலாக இருக்கலாம். ஆனாலும் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. பொது மருத்துவர் அல்லது இதய மருத்துவரை அணுகி இசிஜி எடுத்துப் பார்க்கலாம். இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா என்பது இதில் தெரியும். எக்கோவும் நார்மல் என்றால் பயப்பட வேண்டாம்.”

Tamil News Spot
Heart Beat (Representational Image)

Also Read: Covid Questions: தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம்; மருந்துக்கும் இதற்கும் தொடர்புண்டா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *