Share on Social Media

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்களைக் கொன்று வருகிறது. கடந்த ஆண்டு இருந்ததைவிட இம்முறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கோவிட் தொற்றுக்கு பலியாகும் பலர் ஹேப்பி ஹைப்பாக்ஸியாவால் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிரிழக்கின்றனர். ஹேப்பி ஹைப்பாக்ஸியா பாதிப்பு இருப்பவர்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவதை உணர முடியாது. இரண்டாவது அலையில் இளைஞர்களும் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

கோவிட் பெருந்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள ஹேப்பி ஹைப்பாக்ஸியா குறித்த விழிப்புணர்வையும் அதிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளையும் விளக்குகிறார் தொற்றுநோய் மருத்துவர் சுதர்ஷன்.

தொற்றுநோய் மருத்துவர் சுதர்ஷன்

“கொரோனா முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இம்முறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனினும் குழந்தைகள் எளிதாக மீண்டு விடுவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலும் கை கால்களில் தடிப்புகள் போன்ற சிறிய பிரச்னைகள்தான் ஏற்படும். ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அதிக கண்காணிப்பு அவசியம். குறிப்பாக ஹேப்பி ஹைப்பாக்ஸியா (happy hypoxia) விவகாரத்தில், நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களால் ஹைப்போக்ஸியா ஏற்பட்டால் நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவு 90% -க்கு கீழ் குறையும்போதே மூச்சுத்திணறலை உணரலாம்.

ஆனால், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் செறிவு 80 – 70% வரும்வரைகூட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உணர முடியாதவர்களாக இருப்பார்கள். ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முதல் 16 முறைவரை சுவாசிப்பது இயல்பு, கோவிட் தொற்றால் ஹேப்பி ஹைப்போக்ஸியா ஏற்பட்டால் 30 முறை வரை சுவாசிக்க நேரிடும். ஆனாலும், நோயாளி மூச்சுத் திணறுவதை அறியாமல்தான் இருப்பார். மூச்சுத்திணறல் அதிகமாகும் பட்சத்தில் செல்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து உடனடியாக மரணிக்க நேரிடும்.

ஹைப்பாக்ஸியா ஏற்படுவதற்கு முன்னே விழிப்புடன் மருத்துவமைக்குச் செல்ல வேண்டும் அல்லது வீட்டிலேயே ஆக்சிஜன் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் கொரோனா நோயாளிகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை சரிபார்க்கலாம். பொதுவாக இரவு நேரத்தில் ஆக்சிஜன் செறிவு குறையும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு பகலில் 99% இருந்தால் இரவில் 94-95% வரை குறைய வாய்ப்பு உள்ளது. எனவேதான் இரவு நேரங்களில் அதிக இறப்புகள் நிகழ்கின்றன. கோவிட் தொற்று உள்ளவர்கள் 94% விட சிறிது குறைந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

AP21113418308022 Tamil News Spot
Oxygen cylinder / Representational Image

Also Read: கோவிட் 19: எப்படி படுத்தால் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்கலாம்? நிபுணரின் விரிவான வழிகாட்டல்!

வீட்டில் திடீரென ஹைப்பாக்ஸியா ஏற்படுபவர்கள் அல்லது ஏற்பட வாய்ப்பு இருப்பவர்கள் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் உபயோகிப்பதன் மூலம் ஆக்சிஜன் பெறலாம். ஆனால், இன்றைய நிலையில் ஆக்சிஜன் உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அனைவரும் வாங்கி உபயோகிப்பது கடினம். அதற்குப் பதிலாக எளிதான முறையில் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ப்ரோன் நிலையில் அதாவது நெஞ்சு தரையில் பட குப்புறப்படுக்கும்போது நுரையீரல் விரிந்து ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு அதிகரிக்கும். ஒரு நாளுக்கு 16 மணி நேரம் ப்ரோன் நிலையில் படுப்பது நன்கு பலனளிக்கும். ஆனாலும் 90% விட ஆக்சிஜன் செறிவு குறையும் போது நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *