Share on Social Media


நடிகர் விஜய் பல காலமாக திரைப்படங்களிலும், பாடல் வெளியீட்டு நிகழ்விலும் அரசியல் பேசிவருகிறார். அவருக்கு பிற்காலத்தில் அரசியல் ஆசை உண்டு என பல அரசியல் வல்லுனர்களும், பத்திரிகையாளர்களும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். விஜய் செயல்படும் விதமும் அதனை உறுதி செய்யும் விதமாகவே இருக்கின்றன. 

ஆனால் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற பதிவு செய்தபோது முதல் ஆளாக தடைக்கட்டை போட்டவர் விஜய்தான். அது மட்டுமில்லாமல் தன்னுடைய பெயரை யாரும் அரசியலில் பயன்படுத்தக் கூடாது என அவரது தந்தைக்கு எதிராகவே வழக்கும் தொடர்ந்தார் விஜய். அரசியலில் ஈடுபட விரும்பும் விஜய் எஸ்.ஏ.சி-யின் அரசியலுக்கு ஏன் முற்றுப்புள்ளி வைத்தார் என்பதற்கான பதில்தான் புஸ்ஸி ஆனந்த்.

ALSO READ | விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி

தன்னுடைய அரசியல் பாதையை தான் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும் என விரும்புகிறார் நடிகர் விஜய். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இதில் மூக்கை நுழைப்பதை விஜய் விரும்பவில்லை. அதனால்தான் தடாலடியாக அவரை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றார். பலர் இதுகுறித்து அவதூறு பேசினாலும் அதற்கெல்லாம் விஜய் அசரவில்லை. அவரின் இத்தனை செயல்பாடுகளிலும் பின்னாலிருந்து செயல்படுபவர் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்.

விஜய்யின் தீவிர ரசிகரான புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியில் எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தபோது அவரால் இயக்கத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்தான் புஸ்ஸி ஆனந்த். பின்னாளில் நடிகர் விஜய்யுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். எஸ்.ஏ.சி அரசியலில் நுழைய நினைத்தவுடன் விஜய்யுடன் இணைந்து இயக்கத்தை விஜய்யின் தலைமைக்கு மாற்றியதும் அதற்கு முழு பொறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டதும் புஸ்ஸி ஆனந்தின் திறமைக்கு சான்று. 

 

இன்றைய நாளில் விஜய்யின் மக்கள் இயக்கமும் சரி, ரசிகர்களும் சரி, முழுக்க முழுக்க புஸ்ஸி ஆனந்தின் கட்டுப்பாட்டில். இவரது ஆலோசனைகளுக்கு மட்டும்தான் விஜய் செவிகொடுக்கிறார். அதனை எஸ்.ஏ.சந்திரசேகரும் பலமுறை உறுதிபடுத்தியிருக்கிறார். புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாளில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்து அவருக்கு தங்கக்காசு பரிசாக கொடுக்கிறார்கள் என்பதில் உள்ளடங்கியுள்ளது அவரது செல்வாக்கு. அந்த செல்வாக்கு நீர்த்துபோகா வண்ணம், நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வார்டு உறுப்பினர்களை பெற்றுத் தந்து விஜய்யின் அரசியல் ஆசைக்கு தொடக்கப்புள்ளி வைத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

ரஜினி, கமல் என பிரபல நடிகர்கள் அரசியலில் கால்பதித்து வெற்றிபெற முடியாத சூழல் நிலவும் இன்றைய தேதியில் விஜய் அரசியலுக்கு வருவது எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்ற கேள்வி மக்களுக்கு இருந்தது போலவே நடிகர் விஜய்க்கும் இருந்துள்ளது. அதற்கு ஆழம்பார்க்கும் வகையில்தான் இந்த உள்ளாட்சித் தேர்தலில் தான் நேரடியாக தலையிடாமல் தனது மக்கள் இயக்க உறுப்பினர்களை களம் இறங்க சொல்லியிருக்கிறார் விஜய்.

அதற்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. மொத்தம் போட்டியிட்ட 169 மக்கள் இயக்க உறுப்பினர்களில் 110 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், சீமான் பெற்ற வாக்குகளை விட அதிகம். விஜய்யின் இந்த முதற்கட்ட முயற்சிக்கு அனுமனாக இருந்து உதவியது புஸ்ஸி ஆனந்த்.

உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு சார்ந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற விஜய் களத்தில் வந்து உழைக்க வேண்டும். அவரது கொள்கைகளை மக்கள் விரும்ப வேண்டும். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். இதையெல்லாம் விட இதற்கு முன் நடிகர்கள் அரசியலில் செய்த தவறுகளில் இருந்து விஜய் பாடம் கற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் செய்து வெல்வாரா விஜய் என்பதற்கு காலம் பதில் செல்லும்.

ALSO READ |  உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *