Share on Social Media


‘பறக்க நினைக்கிற மனசுக்கு பேதம் கிடையாது’ என்ற ஒற்றை வரியை ஒரு தனி மனிதனின் லட்சியம் வழி சொல்லும் படம்தான் ‘சூரரைப் போற்று.’

சோழவந்தானின் கரட்டு மேடுகளில் தன் பறக்கும் கனவை விதைத்தபடி வளர்கிறார் நெடுமாறன் ராஜாங்கம். அந்த விதை அவரை விமானப்படை விமானியாக மாற்றுகிறது. பறக்கப் பறக்கத்தான், ‘விமானங்கள் எல்லாருக்குமானவை அல்ல, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான்’ என்கிற உண்மை அவருக்கு உறைக்கிறது. விளைவு, வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு நண்பர்களோடு இணைந்து அடித்தட்டு மக்களுக்கான விமான சேவை நிறுவனம் ஒன்றைத் தொடங்க முயல்கிறார். மற்ற முன்னணி விமான சேவை நிறுவனங்கள் கொடுக்கும் குடைச்சல், அனுமதி மறுக்கும் அதிகார வர்க்கம் இவற்றைத் தாண்டி கேப்டன் நெடுமாறனைப் போலவே அவரின் கனவு புராஜெக்ட்டும் உயர எழுந்து கம்பீரமாய்ப் பறந்ததா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

எஃகுக் கனவைத் தாங்கி நிற்கும் இரும்புத்தூணாய் சூர்யா. நெடுமாறன் ராஜாங்கத்தின் கனவை நம் கனவாய் மாற்றி, அவர் உடையும்போது நாமும் கலங்கி, அவர் நிமிரும்போது நாமும் சிலிர்த்து என நம்மைக் கூடவே அழைத்துச் செல்வதில் இருக்கிறது அத்தேர்ந்த கலைஞனின் வெற்றி. பத்து விநாடிகளோ / நிமிடங்களோ, அந்த ஒரு காட்சிக்காக உடல் இளைத்து செதுக்கி கலைக்காக மெனக்கெடும் தன்மை சூர்யாபோன்ற ஒருசிலருக்கே சாத்தியம். ஒரு இடைவெளிக்குப் பின் அவரின் எத்தனங்கள் துளியும் வீண் போகாத ஒரு படம். மீண்டும் வருக சூர்யா!

சூரனுக்கு சற்றும் சளைக்காத சுந்தரியாக அபர்ணா பாலமுரளி. துடுக்கான கதாநாயகி பாத்திரங்கள் தமிழில் மிகக் குறைவு. காரணம், கொஞ்சம் பிசகினாலும் அது அதிகப் பிரசங்கித்தனமாய்ப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிடும். கத்தி மேல் நடக்கும் வித்தையை அநாயாச சமநிலையோடு கைக்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார் அபர்ணா. சூர்யா போன்ற சூப்பர்சீனியர் ப்ரேமில் இருக்கும்போது அதே ப்ரேமில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வித்தைக்காகவே விர்ச்சுவலாய் கைகுலுக்கலாம் அபர்ணாவோடு!

சிலரின் இடத்தைக் காற்றால்கூட நிரப்பிவிட முடியாது. சினிமாவில் அப்பேர்ப்பட்ட இடம் ஊர்வசிக்கு எப்போதும் உண்டு. மகனுக்கும் கணவருக்கும் நடுவே அல்லாடும் காட்சியிலும், கணவருக்காக மகனை சபித்து அடிக்கும் காட்சியிலும் தெறிக்கிறது நான்கு தசாப்தங்களின் அனுபவம். ‘எப்படியாவது ஜெயிச்சுருய்யா’ எனும்போது நம்மைச் சுற்றி இருந்தவர்களின் குரலும் சேர்ந்தே கேட்கிறது. ‘பூ’ ராமு – ஒரு சில காட்சிகளே என்றாலும் அத்தனையிலும் நெகிழ்ச்சியும் வாஞ்சையும் இழையோடுகின்றன.

மோகன் பாபு, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், காளி வெங்கட் போன்றவர்கள் தங்களுக்கான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இந்தமுறை பரேஷ் ராவலுக்கு. முழுக்க முழுக்க நாயகனைக் கொண்டாடும் கதையில் வில்லனுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும்?

ஜி.வி-யின் இசையில் பாடல்கள் படம் வெளியாகும் முன்பே சூப்பர்ஹிட். அந்த எதிர்பார்ப்பை பின்னணி இசையிலும் தக்க வைத்து தம்ப்ஸ் அப் காட்டுகிறார். மாறாவின் முறுக்குக்கேற்ப தடதடக்கிறது இசை. திரைக்கதையின் தகிப்பை, கதை நடக்கும் பரப்புகளின் அனலை அப்படியே நமக்குக் கடத்துகிறது நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்றாலும் புனைவிற்கான சுதந்திரத்தையும் ஒரேயடியாக எடுத்துக் கொள்ளாமல் தோல்விக்கு மேல் தோல்வி என முடிந்தவரை ஹீரோயிச திரைக்கதையைத் தவிர்த்ததற்கு இயக்குநர் சுதாவைப் பாராட்டலாம். கடைசியில் வெற்றி யாருக்கு என முன்பே தெரிந்திருந்தாலும் அதை சுவாரஸ்யமாகச் சொன்னவிதத்தில் கவர்கிறார் சுதா.

விமானப் பயணம் என்ற ‘ஏ’ கிளாஸ் கருவில் சென்டிமென்ட், காதல், நட்பு என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து பி,சி சென்டருக்குமான படமாகவும் மாற்றியதில் வெற்றிபெற்றிருக்கிறது படக்குழு. அந்நியத்தன்மை எழாமல் இருக்க விஜயகுமாரின் வசனங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன.

வர்க்க வேறுபாடு, சாதியப் படிநிலை போன்றவற்றைப் பேசும் கதைக்களம் என்றாலும் சில காட்சிகள் / வசனங்களில் செயற்கைத்தன்மை உறுத்தலாய்த் தெரிவதையும் தவிர்க்க முடியவில்லை. விமானப்படை தளத்தில் தரையிறங்கும் விமானம், ஊரார் அனுப்பிக் குவியும் பணம் என்று பல காட்சிகளில் நம்மை ஒன்ற வைக்கும் மேஜிக் இருந்தாலும் லாஜிக் அந்தரத்தில் மிதக்கிறது.

சின்னச் சின்னக் குறைகளைக் களைந்துவிட்டுப் பார்த்தால், கேப்டன் மாறனுக்கு மட்டுமல்ல, தளர்ந்துபோயிருக்கும் தமிழ் சினிமாவிற்கும் மிகத் தேவையான வெற்றி இந்த ‘சூரரைப் போற்று.’Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *