Share on Social Media

நமது உடலின் இயக்கம் பொருளாதார அமைப்பின் செயலாக்கத்தை ஒத்தது. எந்தப் பொருளாதாரமும் செழிப்பதற்கு உற்பத்தி மட்டும் போதாது. வங்கி இருப்பிலிருந்து பணம் புழக்கத்துக்கு வந்தபடி இருக்க வேண்டும். வங்கிக்குள் வரும் பணம் வெளியே சென்றபடி இருக்க வேண்டும். நம் உடலின் பிரச்சினை அங்கு பணம், நமது செலவழிக்கும் திறனையும் மீறி, உள்ளே வந்தபடியே உள்ளது. செலவழிப்பதை நாம் உடற்பயிற்சியாக மட்டுமே கண்டு வருகிறோம். செலவழிக்க முடியாதபோது பண வரவைத் தடுத்து வைக்க வேண்டும் என அறியாதிருக்கிறோம். நம் மரபில் உள்ள உண்னாநோன்பை ஒரு ஆன்மிகச் சடங்காய் மட்டுமே சுருக்கி மறந்திருக்கிறோம்.

பற்றாக்குறைக் காலத்தில் செலவழிக்கும் பொருட்டே நம் உடல் ஆற்றலைச் சேமிக்கிறது. ஆனால் பற்றாக்குறையே இல்லாத காலத்தில் நாம் இப்போது வாழ்வதால் இங்கு பொருத்தமின்மை ஏற்படுகிறது. இந்தப் பொருத்தமின்மைக்கான தீர்வு உண்ணாநோன்பு மட்டுமே. அடிக்கடி காலி செய்ய வேண்டிய கொள்கலனே நம் உடல். அதை நாம் செய்ய மறுக்கிறோம் என்பதால் பல கோளாறுகள் தோன்றுகின்றன.

சமகால அறிவியல் ஆய்வுகள்

இதைப் பற்றிய சமகால அறிவியல் ஆய்வுகள் சொல்வது என்னவென்று பார்ப்போம்.

Cell Metabolism எனும் இணைய இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் (மனிதன் சம்மந்தபட்ட ஆராய்ச்சிகளில் எலிகளே பதிலியாகப் பயன்படுகின்றன). இரு குழுக்களாய் எலிகளைப் பிரித்து ஒரே வகையான உணவை வழங்குகிறார்கள். ஒரே வித்தியாசம் – அது தான் இங்கு சுவாரஸ்யமானது. ஒரு பகுதி எலிகளுக்கு உணவு எப்போதும் கிடைக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். அந்த எலிகள் நாள் பூராவும் சிறுகச் சிறுகக் கொறிக்கின்றன. அடுத்த பகுதி எலிகளுக்கு அதே அளவு, அதே வகை உணவை 12 மணிநேர இடைவெளி விட்டுக் கொடுக்கிறார்கள். அதாவது இந்த எலிகள் மட்டும் 12 மணிநேரம் விரதம் இருக்கின்றன.

அடுத்து இந்த எலிகளின் ரத்த சர்க்கரை, இன்சுலின் அளவு, இன்சுலினை திசுக்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை, பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு மற்றும் முக்கியமாய் எடை ஆகியவற்றைப் பரிசோதித்து ஒப்பிடுகிறார்கள். விரதம் இருந்த எலிகளுக்கு எடை குறைந்து சர்க்கரை, இன்சுலின் அளவு சீராகி உடல் கச்சிதமாக ஆகிறது; ஆனால் விரதம் இருக்காத எலிகளுக்கோ எல்லாம் தாறுமாறாய் சீரற்று இருக்கின்றன.
இதைப் பற்றி எழுதும் டாக்டர் ரைன்ஹார்ட் விரதம் நமது உடல்கள் சுயமாய் சுத்திகரித்துக்கொண்டு தன்னையே குணப்படுத்திக்கொண்டு மீண்டு வருவதற்கான அவகாசத்தை வழங்குகிறது என்கிறார். குடலில் உள்ள நல்ல கிருமிகளை வளர்ப்பது, பொதுவான வீக்கத்தைக் குறைப்பது, பழுதான அணுக்களையும் புற்றுநோய் அணுக்களையும் அழிப்பது என உடல் ரொம்ப பிஸியாக இருக்கும் காலமே விரத காலம். தொடர்ந்து உணவளிக்கும்போது நாம் உடலுக்கு ஓய்வளிக்காது இருக்கிறோம். இதனால் இயல்பாகவே மறைய வேண்டிய பல கோளாறுகளில் உடலில் தங்கி மேலும் மோசமாகின்றன. நமது உடம்புக்குத் தேவையான சேமிப்பு ஆற்றலை (கொழுப்பிலிருந்து) அது பயன்படுத்திக்கொள்வதால் உடல் எடையும் குறைகிறது. எடை குறைவதும் ஆரோக்கியத்தை இன்னொரு பக்கம் மேம்படுத்துகிறது.

இங்கு இன்னொரு ஆர்வமூட்டும் கேள்வி எப்படி ஒரே அளவு, ஒரே வகை உணவை சாப்பிடும் எலிகளுக்கு எடை விஷயத்தில் வித்தியாசம் வருகிறது என்பது. 500 கலோரிகள் உணவைப் பகுதி பகுதியாய் சாப்பிட்டால் என்ன, நீண்ட நேரம் வயிற்றை காலி போட்ட பின் அதை ஒரேயடியாய் சாப்பிட்டால் என்ன? அதே கலோரிகள்தானே? ஆனால் நம் உடல் அப்படிப் பார்ப்பதில்லை. 12 அல்லது 24 மணிநேர விரதத்துக்குப் பின் நம் உடலில் வேறு ஏதோ மாயம் நடக்கிறது. அது என்னவென இதுவரை நாம் அறியோம். ஆனால் அப்படி ஒரு மாயம் நிகழ்வதை, அது உடல் நலத்தை மெருகேற்றுவதை, மட்டும் ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

நோன்பின்போது குறைவது கொழுப்பு மட்டுமல்ல. புற்றுநோயை ஏற்படுத்தத்தக்க திசுக்கள் அழிகின்றன; குடல் பிரச்சினைகள் தீர்கின்றன, பருக்களைப் போன்ற தோல் குறைபாடுகள்கூடக் காணாமல் போகின்றன. மெட்டபாலிக் உபாதைகள் பலவும் மறைகின்றன. தன் உடலின் மிகையை உடனே தின்று செரிக்க அனுமதிப்பதே உண்ணாநோன்பு. இதன் விளைவாக உடல் புத்துருவாக்கம் பெறுகிறது என்கிறார் சின்கிளையர்.
நமது உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு உள்ளே செல்லும் உணவே காரணம் என்பதை ஏற்க இன்றுவரை மருத்துவர்கள் தயங்குகிறார்கள்.

இருமலைப் போக்கிய எளிய உத்தி

என் தோழி ஒருவர் நீண்ட நாட்களாய் வறட்டு இருமலால் அவதிப்பட்டுவந்தார். இருமல் வலுக்க அவர் வாந்தியெடுப்பார். தொடர் இருமலால் தூக்கமில்லை. அவர் மூன்று மருத்துவர்களைச் சந்தித்தார். ஒருவர் நிபுணர். மூவருமே பலவித மாத்திரை, டானிக்குகளை எழுதினார்கள். தினமும் ஒரு டானிக் மருந்து குடித்ததால் தோழியின் இருமல் சற்றே குறைந்தது. மற்றபடி எந்த பலனும் இல்லை.

நான் அவரது தொடர்ந்த இருமல், புலம்பல், அவஸ்தைகளைக் கண்டு சகிக்க ஒண்ணாமல் எப்படியாவது தீர்வு காண வேண்டுமே என வறட்டு இருமல் குறித்து ஆய்வு செய்தேன். கடைசியாய் அவர் நிபுணரைச் சந்தித்தபோது அவர் இது ஒவ்வாமையால் இருக்கலாம் எனக் கூறினார். வீட்டைச் சுத்தமாய் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். நான் ஒவ்வாமையால் ஏற்படும் வறட்டு இருமல் என கூகுள் செய்தேன். பல்வேறு வகையான ஒவ்வாமைகள் பற்றி வாசித்தேன். தோழிக்கு வெளியே இருக்கையில் குறிப்பாய் இருமல் வருவதில்லை. ஆகையால் இது வெளிச்சூழலால் வருவதில்லை. வீட்டை முழுக்க சுத்தம் பண்ணினார். படுக்கையை, விரிப்பை மாற்றினார். ஆனாலும் இருமல் ஓயவில்லை. ஆகையால் இது வீட்டுச் சூழலாலும் வரவில்லை.

அடுத்து உணவு ஒவ்வாமை. காப்பி, தேநீர், பால், முட்டை ஆகிய பொருட்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆகையால் அவற்றை தவிர்க்கும்படி தோழியைக் கேட்டுக்கொண்டேன். தோழிக்கு இதைக் கேட்க ஒரு மினி மாரடைப்பே வந்துவிட்டது. “பால், முட்டை ஆகியவை மனிதர்களின் அத்தியாவசியப் பொருட்கள். அவற்றை விடுத்து எப்படி வாழ முடியும்?” என கண்களை விரித்து மூக்கு சிவக்கக் கேட்டார். “பால், முட்டை ஆகியவற்றை தினசரி உண்ணும் வழக்கம் நமக்கு ஏற்பட்டதே கடந்த சில பத்தாண்டுகளில்தான். அதற்கு முன் பால், முட்டை என்ன சோறில்லாமல்கூட மனிதர்கள் ஆரோக்கியமாய் வாழ்ந்ததுண்டு. ஸ்டீவ் ஜாப்ஸ் வெறும் பழங்களை உண்டேகூட வாழ்ந்திருக்கிறார்” என்றேன் நான்.

ஒருவழியாய் தோழி சமாதானமானார். இந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கத் துவங்கி இரண்டே நாட்களில் வித்தியாசம் தெரியத் துவங்கியது. ஒரே வாரத்தில் அவரது இருமல் முழுக்க நின்றது. மாத்திரைகள், டானிக் ஏதும் தேவைப்படவில்லை.

இந்தச் சின்னத் தகவல் ஏன் அந்த பெரும் படிப்புகள் கற்ற மருத்துவருக்கு, அதுவும் நிபுணருக்குத் தெரியவில்லை? நான் ஒரு மணிநேரம் கூகுள் செய்து அறிந்த தகவல்களை அவர் ஐந்தே நிமிடங்களில் உள்வாங்கியிருக்க முடியுமே! இந்தச் சிறிய பத்தியம் மூலம் குணமான உபாதைக்காக என் தோழி பல ஆயிரம் ரூபாய் செலவழித்துக் கடுமையான உளைச்சலுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்தார். காலில் தைத்த முள்ளை அகற்றாமல் வலிக்கு மட்டும் நிவாரண மருந்து அளிப்பது போன்றே நம் அலோபதியினர் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

முந்தைய கட்டுரையை படிக்க…

tamil samayam Tamil News Spotபட்டினியின் மகத்துவம்: உணவைத் தவிர்ப்பதே மருந்து

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *