Share on Social Media

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. 

நடந்தது என்ன?
நேற்று திடீரென நடிகர் விவேக்குக்கு (Actor Vivek) மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி 
நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், “கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து வதந்திகள் பொதுமக்களிடையே பரவி வருகின்றன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்” என்று கூறினார்.

“முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவைதான் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு. ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும்தான் மருத்துவ ரீதியான ஒரேயொரு பாதுகாப்பு. இதுதான் உயிரைக் காப்பாற்றுகின்ற பாதுகாப்பு. இதைச் செலுத்திக்கொண்டால் கொரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. இரு டோஸ் செலுத்திக்கொண்ட இரு வாரங்களுக்குப் பின்புதான் நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் உண்டாகும்.” என்றும் நடிகர் விவேக் அப்போது விளக்கினார்.

தடுப்பூசிதான் மாரடைப்புக்கு காரணமா?

அடுத்த நாள் அவருக்கு மாரடைப்பு வந்த நிலையில், இதற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமோ என்ற அச்சம் மக்களிடையே பரவியது. கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவு காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்ற ஊகங்கள் வலுப்பெற்ற நிலையில், பீதி பரவுவதைத் தடுக்க நேற்று மதியம் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

மருத்துவர்களின் விளக்கம்
நடிகர் விவேக்குக்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.  

ALSO READ: நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை

நடிகர் விவேக்குடன் அவரது 6 நண்பர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதகவும் மருத்துவர்கள் கூறினர். அவரது திடீர் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல என்பதையும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தினர். 

நடிகர் விவேகிற்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது, தடுப்பூசி செலுத்திகொள்வதால் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படாது என்பதையும் மருத்துவர்கள் விளக்கினர். “அடைப்பால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தது. மயங்கிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று மருத்துவமனை தெரிவித்தது.

நேற்று எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு நடிகர் விவேக்கின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை என மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா (Coronavirus) காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு விஷயமும் கொரோனா பெருந்தொற்றுடன் தொடர்பு படுத்திப் பார்க்கப்படுகின்றது. எனினும், பெருந்தொற்று என்ற திரையை நீக்கி விட்டு உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகும். 

சிரிக்க வைத்து அனைவரையும் மகிழ்வித்த நடிகர் விவேக்கின் மரணம் பல சந்தேகங்கங்களைக் கிளப்பியுள்ளது உண்மைதான். எனினும், அவர் இப்படி ஒரு தருணத்தில் இருந்திருந்தால், எப்படி சிந்தித்திருபார் என எண்ணிப்பார்த்தால், கண்டிப்பாக நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.  

ALSO READ: Actor Vivek: நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *