Share on Social Media

பதிவு செய்த நாள்

07
ஜூன்
2021
01:24

பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில், 66 மாதங்கள், 1,000 ரூபாய் வீதம், 66 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன். தற்போது பணத்தைத் திரும்ப பெற, என்னுடைய , ‘பாண்டை’ சரண்டர் செய்து காத்திருக்கிறேன். இந்தப் பணத்தைப் பெற யாரைத் தொடர்புகொள்வது?

கே.ஆர்.ருத்திரகாளத்தி, காஞ்சிபுரம்
ஜி.பொன்னுசாமி, திருப்பூர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி, படிப்படியாக பி.ஏ.சி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தைத் திருப்பித் தந்து வருகிறது. உங்கள் கிளெய்மின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள, இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://www.sebipaclrefund.co.in/Refund/Enquiry. இதில், பி.ஏ.சி.எல்., சான்றிதழ் எண்ணை உள்ளிட்டுத் தேடுங்கள். விபரம் கிடைக்கும்.

ஷேர் மார்க்கெட் பற்றிய விபரங்களை அறிய, புத்தகம் தமிழில் எதேனும் உள்ளதா? இல்லையெனில், வேறு எவ்வாறு துல்லியமாக அறிந்து கொள்ளலாம்?

வெஸ்லி ஜான்சன், வாட்ஸ் ஆப்.

தமிழில் இல்லாமலா? கொட்டிக் கிடக்கின்றன. வ.நாகப்பன், புகழேந்தி, சோம. வள்ளியப்பன், சொக்கலிங்கம் பழனியப்பன், செல்லமுத்து குப்புசாமி உள்ளிட்டோர் தரமான நுால்களை எளிய தமிழில் தந்துள்ளனர். இவர்களின் பல புத்தகங்கள் புத்தகக் கடைகளில் மட்டுமல்ல, அமேசான் கிண்டிலில் கூட கிடைக்கிறது. வாசித்து பணம் சம்பாதியுங்கள்!

எங்கள் சுய உதவிக் குழு சார்பாக, 6.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். இந்த ஜூன் மாதம் கடனைக் கட்டி முடிக்கப் போகிறோம். அதற்கு கிளியரன்ஸ் சான்றிதழ் வாங்க வேண்டுமா?

பா.முத்துமீனாள், ராமேஸ்வரம்.

என்.ஓ.சி., எனும் தடையில்லா சான்றிதழை வங்கியில் இருந்து வாங்கிக்கொள்ளவும்.அதில், உங்கள் குழுவின் பெயர், முகவரி, கடன் கணக்கு எண், கடன் கட்டி முடிக்கப்பட்ட தேதி ஆகியவற்றோடு, கடன் கட்டி முடிக்கப்பட்டது, ‘நிலுவைத் தொகை ஏதும் இல்லை ’ என்பதைக் குறிப்பிட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

என் பேத்தி கல்லூரி படிப்புக்காக கடன் வாங்கினோம். கடன் தொகை அசல் முழுதும் செலுத்திவிட்டால், வட்டி மானியம் முழுதும் கிடைக்குமா?

எம்.எம்.விஸ்வநாதன், மதுரை.

கடன் இருந்தால் தான், அதற்கான வட்டியும், வட்டிக்கு மானியமும் கிடைக்கும். அசல் தொகையைத் திருப்பிச் செலுத்திவிட்டால், அங்கே ‘கடனே’ இருக்காதே! அதற்கு எப்படி மானியம் கிடைக்கும்? மானியத் தொகை வந்துசேர சற்று தாமதம் ஆகலாம்.

தற்போது வங்கியில் டெபாசிட் வட்டிவிகிதம் மிகவும் குறைந்து விட்டது. ஆகையால், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாமா? அப்படி முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் உள்ள மியூச்சுவல் பண்டுகளை குறிப்பிடவும்.

ஜெயகுமார், மயிலாடுதுறை.

‘ஆகையால்’ மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாமா என்று யோசிக்காதீர்கள். வைப்பு நிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் பண்டு, தங்க முதலீடு ஆகிய அனைத்துக்கும் உங்கள் போர்ட்போலியோவில் இடம் கொடுங்கள். மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. லிக்விட் பண்டு, அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பண்டு, ஆர்பிட்ரேஜ் பண்டு ஆகியவை ரிஸ்க் குறைவான முதலீடுகள். இவற்றில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

கூகுள் பே, பேடிஎம் போன்ற பண பரிவர்த்தனை சேவைகள் இலவசமாக வழங்கப்படு கின்றனவா? வாடிக்கையாளரே அறிய முடியாதபடி அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து சேவை கட்டணம் உருவப்பட்டு விடுகிறதா?

பிரபுசங்கர், சென்னை.

இத்தகைய நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகள், பயனர்களுக்கு இலவசம் தான். பொருட்களையோ, சேவைகளையோ வழங்கும் கடைக்காரர்களிடம் இருந்து சிறு தொகையை, பணப் பரிவர்த்தனை நிறுவனங்கள் பெறுகின்றன. கிரெடிட் கார்டு மூலம் வாலட்டுக்கு பணத்தை அனுப்பும்போது, ஒரு சிறு தொகை பெறப்படுகிறது. வாடிக்கையாளர்களான நமக்கு, சவுகரியமும் பாதுகாப்பும் முக்கியம். அதை வழங்கும் நிறுவனங்களுக்கு சிறு தொகை செலவிடுவதில் தவறென்ன?

ஒரு வங்கியில் பர்சனல் லோனாக, 5 ரூபாய் லட்சம் வாங்கியிருந்தேன். இரண்டு மகள்களின் பள்ளிக் கட்டணத்துக்கு சுமார், 25 ஆயிரம் தேவை. வங்கியை அணுகினால் லோன் கிடைக்குமா?

சரவணன், ஜி.எம்., மடிப்பாக்கம்.

நீங்கள் கடன் வைத்துள்ள வங்கியில், ‘டாப் அப்’ லோன் கேட்டுப் பாருங்கள். நீங்கள் ஒழுங்காக தவணைத் தொகையைக் கட்டிவந்தால், டாப் அப் கிடைப்பது சுலபம். டாப் அப் லோன் போனால், திருப்பிச் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் மாறுதல் இராது என்பதால், மாதாந்திர தவணை தொகை அதிகம் ஆகும். அதைச் சமாளிக்க முடியுமா என்று யோசியுங்கள். அல்லது, வேறு வங்கியில் நல்ல சகாய வட்டியில் புதிய பர்சனல் லோன் கிடைக்கிறதா என்று பாருங்கள்.

வீட்டுக் கடனுக்காக, தனியார் வங்கிகள் வழங்கும் கடன் தொகையை விட, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் குறைவான தொகையைத்தான் வழங்குகின்றன. இதற்கு என்ன காரணம்?

ச.கண்ணன், திண்டுக்கல்.

எனக்கு அப்படி தெரியவில்லை. தனியார் வங்கிகளுக்கு இணையாக, அரசுத் துறை வங்கிகளும் வீட்டுக் கடன் கோரும் நபர்களின் தகுதிகளை மதிப்பீடு செய்வதிலும் உரிய அளவு கடன் வழங்குவதிலும் வேகம் காட்டுகின்றன. வீட்டுக் கடன்கள் தான், இதர கடன்களை விட, சரியாக வசூல் ஆகிறது என்பதால், கூடுதல் கடன் தொகை கொடுப்பதில், எல்லோருமே முட்டி மோதுகிறார்கள். பொதுத் துறை வங்கிகளில் டாக்குமென்டேஷனுக்கும், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதனால் சிறிது தாமதம் இருக்கலாம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, இ-மெயில் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்,

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை 14

என்ற நமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
[email protected]


Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *