Share on Social Media


விருத்தாசலம்-கடலுார் மாவட்டத்தில் 530 பள்ளிகளில் பழுதடைந்த 897 கட்டடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி மாவட்டங்களில், பல பள்ளிகளில் வகுப்பறைகள் பற்றாக்குறை இருப்பதுடன், இருக்கும் கட்டடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், ஆபத்தான நிலையில் வகுப்புகள் நடந்து வந்தது. கடந்த மழையின்போது ஏற்பட்ட பாதிப்பால் குறிஞ்சிப்பாடி அடுத்த வானதிராயபுரம் அரசுப் பள்ளி சுற்றச்சுவர் இடிந்து விழுந்தது. அன்று விடுமுறை என்பதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆனாலும், கடலுார் மாவட்டத்தில் பழுதான கட்டடங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, திருநெல்வேலியில் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து, மாணவர்கள் மூவர் பரிதாபமாக இறந்தனர். இதனால் விழித்துக் கொண்ட பள்ளி கல்வித்துறை நிர்வாகம், தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, அறிக்கை தர உத்தரவிட்டது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், வடலுார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கணக்கெடுத்தனர். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், டி.இ.ஓ., கோகிலா தலைமையிலான குழுவினரும், விருத்தாசலம் ஒன்றியத்தில், பி.டி.ஓ., ஜெயக்குமாரி தலைமையிலான குழுவினர் என, மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி, சி.இ.ஓ.,விற்கு அறிக்கை கொடுத்துள்னளர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள 167 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வு கூடம், கழிப்பறை கட்டடங்கள் 450 பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 353 துவக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வு கூடம், கழிப்பறை என 439 கட்டடங்கள், 8 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி உட்பட 530 பள்ளிகளில் 900 கட்டடங்கள் பழுதாகி இடியும் நிலையில் உள்ளன. இந்த கட்டடங்கள் கட்டி 20 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் ஆனதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில், பழுதடைந்த கட்டடங்கள் குறித்த விபரத்தை, சி.இ.ஓ., பூபதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். கலெக்டரின் அதிரடி உத்தரவால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கட்டடங்களை இடிக்கும் பணியும் துவங்கியுள்ளது. குறிப்பாக, விருத்தாசலம் அருகே முதற்கட்டமாக, படுகளாநத்தம், பரவளூர், தொட்டிகுப்பம் உட்பட 5 பள்ளிகளில் பழுதான கட்டடங்களை அகற்றும் பணி நேற்று முதல் தீவிரமாக துவங்கியது. மாவட்டம் முழுவதும் இப்பணி தீவிரப்படுத்தப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *