Share on Social Media


செங்கல்பட்டு-வடகிழக்கு பருவ மழை காரணமாக செங்கல்பட்டு சுற்று வட்டார ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரி நீர், செங்கல்பட்டு, வல்லம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு நாட்களாக தேங்கியுள்ளது.

விடாத மழையால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருப்பதால், பொதுமக்கள் பெருமளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர்; மீட்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் துரிதமாக ஈடுபட்டு வருகிறது.வடகிழக்கு பருவ மழை, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்த நீரால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தவிர அடை மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, அதன் உபரி நீர் செங்கல்பட்டில் உள்ள நீச்சல் மடுவில் சேகரமானது. அங்கிருந்து வெளியேறிய நீர், கூடுவாஞ்சேரி உட்பட பல புறநகர் ஏரிகளை நிரப்பியது.நிரம்பி வழிந்த ஏரிகளின் உபரி நீர், மஹாலட்சுமி நகர், உதயசூரியன் நகர், ஊரப்பாக்கம் எம்.ஜி.நகர், அருள் நகர், ஜெகதீஷ் நகர், வல்லாஞ்சேரி, காயரம்பேடு விஷ்ணுபிரியா நகர், காரணைபுதுச்சேரி பெரிய நகர் மற்றும் செங்கல்பட்டு, வல்லம், மேலமையூர், திம்மாவரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது.திருப்போரூர் தாலுகாவில், படூர், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தின் பல இடங்களில் தரைப்பாலம், சாலை துண்டிப்பு, பயிர்கள் நீரில் மூழ்கிய அவலம் இருக்கிறது.செங்கல்பட்டு அடுத்த வடகால் கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களால் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல, ஒரு படகு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மேற்கண்ட இடங்களில் தங்கியிருப்போர், நான்கு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக ஒரு சிலர் மட்டும், வெளியில் வந்து செல்கின்றனர்.மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக படகுகளை பயன்படுத்தி செல்லும் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில், கண்காணிப்பு அலுவலர் அமுதா மற்றும் மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். விடாமல் மழை பெய்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், மாவட்டம் முழுதும் 33 குழுக்கள் மற்றும் வெள்ளம் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 11 பேர் குழுவாக இருந்து, களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற, கால்வாய்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களில், தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.இதற்கான மாவட்டத்தின் எட்டு தாலுகாக்களில் 44 சிறப்பு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு 2,313 பேரை தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.கால்வாய்கள் சீரழிப்புகூடுவாஞ்சேரி, வண்டலுார், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார், மறைமலை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், நீண்ட காலத்திற்கு முன் விவசாய நிலங்களாக இருந்தவை. நகர் வளர்ச்சி காரணமாக மக்கள் குடியேற்றம் பெருகி, குடியிருப்பு பகுதிகள் விரிவாக்கப்பட்டன.

அப்போது விவசாய பாசனத்திறகாக முன்பிருந்த கால்வாய்களை துார்த்து, மனைகள் ஆக்கப்பட்டன. உள்ளாட்சி நிர்வாகங்களும், மழை நீர் வடிகால்வாய்களை முறையாக திட்டமிடாமல் சீரழிந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருக்கிறது.பொதுமக்கள் அதிருப்திகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி, அடையாறு கரையோரம் உள்ளது. வெள்ளத்தால் இந்த ஊராட்சியில் பெரியளவில் பாதிப்பு உள்ளது.வெள்ளம் பாதித்த வரதராஜபுரம் பி.டி.சி., நகரை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை ஆய்வு செய்தார். காரில் இருந்து இறங்கிய அவர் கணுக்கால் மூழ்கும் அளவு நீர் தேங்கிய சாலையில், சிறிது துாரம் நடந்து சென்று பார்வையிட்டார்.

அப்போது ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் அமுதா, வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வரிடம் தகவல்களை கூறினார். பின், பொதுமக்கள் சிலரிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி புறப்பட்டார். முதல்வர் காரில் புறப்பட்ட பின், அங்கு கன மழை துவங்கியது. முதல்வர் 10 நிமிடங்கள் மட்டும்அங்கு பார்வையிட்ட நிலையில், போலீசார் காலை 8:00 மணி முதல் 11:00 வரை கெடுபிடியாக நடந்து கொண்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.