பதஞ்சலி நிறுவன விஞ்ஞானிகள் சயவன்ப்ராஷ் என்ற ஆயுர்வேத மருந்தை தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புப் பட்டியலில் இணைத்துள்ளனர். இந்த மருந்தின் விளைவுகள், செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை `ஃபிரான்டியர்ஸ் இன் பார்மகாலஜி’ என்ற மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சயவன்ப்ராஷ் என்பது ஆயுர்வேத மருத்துவத்தின் மிகத் தொன்மையான மருந்துகளில் ஒன்று. இந்நிலையில், பதஞ்சலி அதை அறிவியல் கண்டுபிடிப்பாக பட்டியலில் இணைத்துள்ளது ஏன், இந்த மருந்தின் பயன்கள் என்ன என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“ஆயுர்வேத மருந்துகளில் மிகவும் முக்கியமான மருந்து சயவன்பிராஷ். மஹாபாரத காலத்தில் சயவன முனி என்பவர் இந்த லேகியத்தை உண்டு அவரது இளமையைத் திரும்ப பெற்றதால் இதற்கு சயவன்ப்ராஷ் என்ற பெயர் உண்டானது. இந்த மருந்து 2,000 வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் உள்ளது. `சரக சம்ஹிதை’ என்ற நூலில் இந்த மருந்தின் சூத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. நெல்லிக்காயை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தேன், நல்லெண்ணெய், மூங்கில் உப்பு, திப்பிலி, நெய் போன்ற பல்வேறு பொருள்களைச் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது
ஆயுர்வேதம் அக்காலத்தில் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ரசாயனம் என்கிற சிகிச்சை அங்கம். இந்த ரசாயனத் துறை என்பது வயது முதிர்வைத் தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, நோய் வராமல் தடுக்கும் துறை.
இந்தத் துறையில் வேதிப்பொருள்கள்கள் அல்லாத ரசாயான மருந்தாக அதிகமாக சயவன்ப்ராஷ் பயன்படுத்தப்படுகிறது. தற்போது குறைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டுள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்து சிறந்த பயனளிக்கும்.