Share on Social Media

தற்போது வாடிக்கையாக செய்து கொண்டிருக்கும் செயல்களை முதன் முதலில் செய்த போது இருந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது. ‘இதுவரை செய்யாத செயலை சாதித்து விட்டோம்’ என்ற நிம்மதியையும் ‘இதையே செய்து விட்டோம்.. இதற்கு மேல் என்ன’ என்ற பெருத்த நம்பிக்கையையும் மனிதனுக்கு கொடுக்கும் வார்த்தைதான் ‘முதல்’.

1990-ம் ஆண்டு இதே முதல் என்ற வார்த்தையை அடைய போராடிக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். முந்தைய ஆண்டுதான் இந்திய அணிக்குள் வந்திருந்தார். ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதங்கள் மட்டும் அடித்திருந்தான். அப்படிப்பட்ட நிலையில், தற்போது போலவே அப்போதும் இந்திய அணி இங்கிலாந்துக்கு ஆடச் சென்றது. மூன்று டெஸ்ட் போட்டிகள். முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ஃபாலோ ஆன் ஆகாமல் தவிர்க்க இந்திய அணிக்கு 24 ரன்கள் தேவைப்படும் போது கபில் தேவ் நான்கு சிக்சர்கள் தொடர்ந்து அடித்தார் என்று கூறுவார்களே… அது இந்த லார்ட்ஸ் டெஸ்ட்டில்தான் நடந்தது. என்ன நடந்து என்ன? இந்திய அணியால் முதல் டெஸ்ட்டை வெல்ல முடியவில்லை.

விளையாட்டுத் தொடர்பான சுவாரஸ்ய வீடியோக்களுக்கு ஸ்போர்ட்ஸ் விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

இரண்டாம் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பித்தது. வெளிநாடு என்றதும் தங்கள் வள்ளல் குணத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் காண்பிக்க, கேப்டன் கிரகாம் கூச் சதம் கடந்தார். கூடவே மைக்கேல் ஆதெர்டன் மற்றும் ராபின் ஸ்மித் இருவரும் சதம் கடக்க, 519 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. அப்போதிலிருந்தே இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளில் எதிரணியின் ஓப்பனிங் ஸ்பெல்லிலேயே சரணடைவதை வாடிக்கையாக வைத்திருந்தனர் போல. ஃப்ரேசர் என்ற பந்து வீச்சாளாரால் இந்தியாவின் டாப் ஆர்டர் காலியானது.

இந்தியா 57-3. இன்னிங்ஸ் தோல்வி அடைவதற்கு அத்தனை சாத்தியக்கூறுகளும் இருந்தன. அப்போது இந்திய அணியை தாங்கி பிடித்தவர் யார் தெரியுமா? இந்தக் கட்டுரையின் ஹீரோவா அது! இல்லை இல்லை… கதையின் ஹீரோ வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது.

சொல்லப்போனால், இந்திய அணியை அன்று மீட்ட இவரும் ஹீரோதான். ஆனால் தற்கால இளைஞர்கள் காமெடியனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவரை. சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சிக்கப்படும் சஞ்சய் மஞ்சரேக்கர்தான் அப்போது அசாருதீனுடன் இணைந்து ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

மஞ்ரேக்கர் 93 ரன்களுக்கு அவுட் ஆனதும் ஒரு வழியாக இந்திய அணியை முடித்துவிட்டதாக கருதியது இங்கிலாந்து. காரணம் இன்னமும் 273 ரன்கள் பின்தங்கியிருந்தது இந்தியா. இங்கிலாந்து வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஒருவன் களத்திற்குள் பேட்டை எடுத்துக்கொண்டு நுழைகிறான்.

சச்சின்

“யார் இவன் பல் குத்தும் குச்சியின் உயரத்தில்?” ஒரு இங்கிலாந்து வீரரின் குரல். “யாராக இருந்தால் என்ன?.. சீக்கிரம் வெளியே அனுப்பி விடலாம்” மற்றொரு குரல். ஆனால் அந்தச் சிறுவன் எதையும் பொருட்படுத்தவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்று பெயர். சுருட்டை முடி – மடித்து விடப்பட்ட சட்டை ஸ்லீவ்கள் – கழுத்தில் ஒரு தங்கச் செயின். பதினேழே வயது. இவன் என்ன செய்து விடப் போகிறான் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆட ஆரம்பித்தான். முடிந்த அளவு அத்தனை பந்துகளையும் தடுத்தான். முதல் ரன் எடுப்பதற்கே அவனுக்கு ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. வெளியே செல்லும் பந்துகளை அடிக்க நினைக்கவேயில்லை. உள்ளே வரும் பந்துகளைத் தடுக்க சரியான நேரத்தில் பேட் உள்ளே வந்தது. அட இவனிடம் என்னமோ இருக்கிறது என்று ரசிகர்கள் கவனிக்க ஆரம்பிக்க, அசாருதீன் ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிய வீரர் ஒருவர் அவுட் ஆன பிறகு இந்திய அணி என்ன செய்யும்? சச்சினை மட்டும் தனித்து விட்டுவிட்டு மற்ற வீரர்கள் எல்லாரும் வருவதும் போவதுமாக இருந்தனர். இது சரிவராது என வேகமாக ரன் சேர்க்க 68 ரன்களில் ஆட்டமிழந்தார் டெண்டுல்கர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 432 ரன்கள் எடுத்திருந்தது.

sachin tendulkar Tamil News Spot
சச்சின் டெண்டுல்கர் 100வது சதம் அடித்தபோது…

“உங்க ஹீரோ அப்ப தோத்துட்டானா?” என்று KGF பட பாணியில் கேட்டால், ‘இல்லை.. அதை விட பெரிய சம்பவத்துக்கு தயாராகி விட்டான்’ என்று பதில் சொல்லலாம். 87 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அதை 407 ரன்களாக மாற்றியது. 85 முதல் 88 ஓவர்களில் 408 ரன்களை இலக்காக நிர்ணயித்து 320 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இங்கிலாந்து.

ஐந்தாம் நாள்… ஆடுகளம் மோசமாகத் தொடங்கியது. ரவி சாஸ்திரி, வெங்சர்கர், மஞ்சரேக்கர், அசாருதீன் என முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. 127 ரன்களுக்கெல்லாம் ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டது. மறுபடியும் உள்ளே நுழைகிறார் டெண்டுல்கர். ஆனால் இந்த முறை இங்கிலாந்து வீரர்கள் சுதாரித்து ஆடினர். சச்சினின் விக்கெட்டை எடுத்தால்தான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு புரிந்திருந்தது.

168695 Tamil News Spot
சச்சின்

முதல் இன்னிங்சில் முதல் ரன் எடுக்கவே ஒரு மணி நேரம் ஆக்கியவர் இந்த முறை அப்படி இல்லை. ரன்கள் சரளமாக வரத் துவங்கின. இங்கிலாந்து கேப்டன் ஃபீல்டர்களை நெருக்கமாக நிறுத்தினால் சச்சின் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். ஃபீல்டர்களை தள்ளி நிறுத்தினால் அழகாக ஒன்று இரண்டு என ஓடி ஓடி ரன்கள் சேர்த்தார். இடுப்பு உயரத்துக்கு வரும் பந்துகளை அழகாக பேக் ஃபூட் ஷாட்கள் ஆடினார்.

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாக் ரசல் இதை மிகவும் அருகிலிருந்து பார்த்து “சச்சினுக்கு மட்டும் எந்த ஷாட் ஆட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு நொடி அதிகமாக இருந்தது” எனக் கூறினார். அந்த இளம் வயதிலேயே இங்கிலாந்தில் பல ரசிகர்களை வென்று விட்டார் சச்சின்.

அற்புதமாக ஒரு டிரைவ் ஆடி கிரிக்கெட் உலகில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார் சச்சின். இது குறித்து பின்னாட்களில் சச்சின் பேசும் போது முதன் முதலில் சதம் அடித்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பேட்டை மட்டும் இரண்டு முறை தூக்கிக் காட்டிவிட்டு மறுபடியும் ஆடச் சென்றுவிட்டேன் எனக் கூறினார். சச்சின் கூடவே ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மனோஜ் பிரபாகர்.

D yckgCW4Ao06Hp Tamil News Spot
சச்சின்

இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் பிஷன் சிங் பேடி கூறுகையில், “ஒரே ஆட்டத்தில் ஆறு முதல் அறுபது வரையான எல்லாரையும் கைக்குள் போட்டுக் கொண்டார்” எனக் கூறினார். அதன் பின்பு சதம் அடிப்பது அவருக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டாலும் முதல் சதம் என்றும் ஸ்பெஷல் தானே! அந்த ஸ்பெஷலான சதத்தை சச்சின் அடித்த நாள் இன்று.

விளையாட்டுத் தொடர்பான சுவாரஸ்ய வீடியோக்களுக்கு ஸ்போர்ட்ஸ் விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *