Share on Social Media


கே.கே.நகர் : .கே.நகர் அருகே, கிழக்கு வன்னியர் தெருவில் 10 நாட்களுக்கும் மேலாக மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவு நீரால், குடியிருப்பு மக்கள் சுகாதார சீர்கேடால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோடம்பாக்கம் மண்டலம் 128வது வார்டு, கே.கே.நகரில், கிழக்கு வன்னியர் தெரு உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.ஒவ்வொரு மழைக்காலத்திலும், இத்தெருவில் மழை நீர் தேங்குவது வாடிக்கை. சமீபத்தில் பெய்த மழையிலும், கிழக்கு வன்னியர் தெரு மற்றும் அதையொட்டி உள்ள மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.மழை ஓய்ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் மழை நீர் வடியவில்லை. அதே தெருவில் உள்ள சாகர் அடுக்குமாடி குடியிருப்பில் 10 நாட்களுக்கு மேலாக கழிவு நீர் தேங்கிஉள்ளது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 33 வீடுகளில் வசிப்போரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடும் துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதில், சிலர் மாற்று இடத்திற்கும், உறவினர்கள் வீட்டிற்கும் சென்றனர். சில குடும்பங்கள், போக மாற்று இடம் இல்லாததால், அங்கேயே வசித்து வருகின்றனர்.இக்குடியிருப்பு மக்கள் பலர் சேற்றுப் புண் மற்றும் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், சில இடங்களில் மழை நீர் வடிகாலில் சட்டவிரோதமாக கழிவு நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, சாகர் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர் எஸ்.சதீஷ், 39, கூறியதாவது:ஒவ்வொரு மழைக்கும் தெருவில் மழை நீர் தேங்குவதுடன், தாழ்வான குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்து விடும்.

இம்முறை மழை நீர் வடிகால் முறையாக துார் வாரப்படவில்லை.இதனால், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் கழிவு நீர் புகுந்துள்ளன. மின் மோட்டார்கள் வாயிலாக, குடியிருப்பில் தேங்கிய மழை நீரை, இறைத்து மழை நீர் வடிகாலில் விட்டோம்.ஆனால், வடிகாலில் உள்ள அடைப்பு காரணமாக, தண்ணீர் வடியாமல் சாலையில் தேங்கியதுடன், பக்கத்து குடியிருப்பில் தண்ணீர் புகுந்தது. இதனால், மின் மோட்டார் வாயிலாக தேங்கிய நீரை அகற்ற முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *