Share on Social Media


கடலுார்-கடலுார் மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பொது மக்கள் பலருக்கு மர்மக்காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒரு வாரத்தில் துவங்க உள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ‘குலாப்’புயல் சின்னம், மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்கிறது. மழை இல்லாத நாட்களில் கடும் வெயிலும் அடித்து வருகிறது. அதிக மழை, வெயில் என மாறி மாறி வருவதால் பொது மக்கள் பாதிக்கின்றனர்.

இதில் எதிர்ப்பு சக்தி இல்லாத பலருக்கு சளித்தொல்லை, காய்ச்சல் பரவி வருகிறது. கூட்டு குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் மீதமுள்ள அனைவருக்கும் எளிதாக பரவுகிறது. காய்ச்சலால் பாதித்தவர்கள் கடும் தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டு வலியால் அவதியடைகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக காய்ச்சல், தலைவலி போன்றவற்றால் பீதியடைந்துள்ளவர்களுக்கு இந்த காய்ச்சல் அச்சமடைய செய்துள்ளது.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேப் போல மர்ம காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கும் ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கீதா கூறுகையில், மழை துவங்க உள்ளதால் பருவ நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் வருவது சகஜம் தான். ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் ரத்த மாதிரி எடுத்து டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்யப்படும். ஒரே பகுதியில் இருந்து 5 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தால் அக்கிராமத்தை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களும் வீட்டில் டெங்கு கொசு உருவாகாமல் தடுக்க திறந்த வெளியில் பழைய பொருட்களை சேமித்து வைக்கக்கூடாது. எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே குடிக்க வேண்டும், என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *