Share on Social Media


காஞ்சிபுரம்–காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 2,616 பதவிகளுக்கு, 8,553 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட தேர்தலில் நடந்த விதிமீறல், ஓட்டளிப்பில் தாமதம் போன்றவற்றை சரிசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், புனித தோமையார்மலை, லத்துார் ஆகிய ஒன்றியங்களிலும், கடந்த 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது.ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்துார் ஆகிய ஒன்றியங்களுக்கு, இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.காஞ்சிபுரத்தின் இரண்டு ஒன்றியங்களில் 880 பதவிகளுக்கு, 2,975 வேட்பாளர்கள்; செங்கல்பட்டின் காட்டாங்கொளத்துார், மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் 1,736 பதவிகளுக்கு 5,578 வேட்பாளர்களுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.ஓட்டுச்சாவடிக்கு தேவையான ஓட்டுப்பெட்டி, மெழுகு, ஓட்டுச்சீட்டுகள், அரக்கு, கயிறு, படிவங்கள் ஆகியவை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலமாகவும், வீடியோ கேமராக்கள் மூலமாகவும், நுண் பார்வையாளர்கள் மூலமாக கண்காணிக்க உள்ளனர்.மாவட்ட எஸ்.பி., சுதாகர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஒன்பது காவல் ஆய்வாளர்கள் 600 போலீசார், 30 மொபைல் பார்ட்டி போலீசார், ஆறு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.சென்னையின் புறநகரில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

.செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பணியில் 5,820 பேர் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ராகுல்நாத், தேர்தல் பார்வையாளர் சம்பத் ஆகியோர் கண்காணிக்கின்றனர்.சித்தாமூர் ஒன்றிய பகுதி, ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியில், தேர்தல் பயிற்சியளித்து, நேற்று பணி ஆணை வழங்கப்பட்டது.பாதுகாப்பு பலப்படுத்தணும்!முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல், கடந்த 6ம் தேதி நடந்தது. தேர்தல் நடந்த ஓட்டுச்சாவடிகளில், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் காட்சிப்பொருளாகவே இருந்தன.

அதேபோல், ஓட்டளிப்பதற்காக வழங்கப்பட்ட பிளாஸ்டிக் கையுறைகள், ஓட்டுச்சாவடி வளாகம் முழுதும் குப்பை கூளங்களாக காணப்பட்டன. அதுபோன்று இம்முறை நடைபெறாத வகையில் கண்காணிக்க வேண்டும்.சிங்காடிவாக்கம் ஓட்டுச்சாவடியில், ஒரு கள்ள ஓட்டு விழுந்துள்ளது. அதுபோன்ற தற்போது நடைபெறாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். வேட்பாளர் பெயர் தவறாக அச்சிடுவது, ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கான வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியில் குவிவதால் பிரச்னைகள் ஏற்படலாம்.

கடந்த முறை பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது; கட்சியினரிடையே பிரச்னையும் ஏற்பட்டது. அதுபோல் இம்முறை நடக்காமல் இரு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *