பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி: கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். ஸ்டாலின் அரசு தேசவிரோத சக்திகளால் நடத்தப்படுகிறது. தி.மு.க., ஆட்சி வந்த பின், தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் இடிக்கும் வேலைகள் துவங்கியுள்ளன. ஹிந்து கோவில்களில், வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.
இப்படி மாறி மாறி ஹிந்துக்களுக்கு எதிராக செய்தாலாவது, ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வு ஏற்படாதா என எண்ணுகிறதோ, தி.மு.க., அரசு?
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை தலைவர் பொன்னுசாமி அறிக்கை: ‘பீக் ஹவர்’சில் கூடுதல் பஸ்களை இயக்காததால் கூட்டம் நிரம்பி வழிய, வேறு வழியின்றி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் பயணித்து விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இதை தடுக்க மாணவர்களுக்காக தனி பஸ்களை இயக்க வேண்டும்.
நல்ல யோசனை தான். பஸ் பாஸ் கொடுக்கும் அரசு, அதை நிறுத்தி விட்டு, மாணவர்களுக்காக சிறப்பு இலவச பஸ் சேவையை துவக்கலாம். ஆனால், அந்த பஸ்களிலும் சீட்டில் அமராமல், படிக்கட்டில், பஸ் மேற்கூரையில் பயணித்து, தட்டி தாளம் போட்டு, டிரைவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்த மாட்டோம் என மாணவர்கள் உறுதி தருவரா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தின் பல இடங்களில் உதவித்தொகை உயர்வு கேட்டு போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை, இப்படி மனிதநேயம் இல்லாமல் நடத்துவது சரியானதல்ல.
அ.தி.மு.க., ஆட்சியிலும் இப்படித் தான் நடந்தது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை, எத்தனை கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தீராது போலிருக்கிறதே!
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: நீண்ட காலமாக தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட, மத்திய அரசு தயாராக இல்லை. போராட்டத்தை நடத்தினால் தான், மத்திய அரசை பணிய வைக்க முடியும்.

விவசாயிகள் போராட்டத்திற்கு பின் வந்த ஞானோதயம் போல இருக்கிறதே!
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு: கருணாநிதி குடும்பம் ஹிந்தியில் தொலைக்காட்சி துவங்கலாம். ஆனால், ஒரு சாதாரண குடிமகன் ஹிந்தி கற்றுக்கொள்ள கூடாது என்று அவர்கள் சொல்வது, ஹிந்திக்கு எதிராக அல்ல; இந்திய தேசத்திற்கு எதிராகத் தான்.
இந்த உண்மையை தமிழக மக்கள் எப்போது முழுமையாக புரிந்து கொள்ளப் போகின்றனரோ… அப்போது தான் தமிழகத்தில் உண்மையான மாற்றம், விடியல் ஏற்படும்!