Share on Social Media

கன்ஸு மாகாணத்தில் நடந்த 100 கிலோமீட்டர் மலையேறும் ஓட்டத்தின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்நிகழ்வு நடந்தது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான மாரத்தான் தூரத்தைவிட (42.195 கிலோமீட்டர்) அதிக தூரத்துக்கு நடத்தப்படுவதே அல்ட்ரா மாரத்தான். இந்த மாரத்தானை வழக்கமாக நடத்துவதைப்போல் அல்லாமல் Cross country running என்ற வகையில் நடத்துகிறார்கள். அதாவது மலைகள், பள்ளத்தாக்கு போன்ற கடினான பாதைகளைக் கடந்து ஓடவேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பந்தயம் நடந்துவருகிறது.

கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய இந்தப் பயணத்தில் 172 வீரர்கள் பங்கேற்றனர். ரேஸ் தொடங்கியபோது மேகமூட்டமாக இருந்தாலும், டீ ஷர்ட் – ஷார்ட்ஸ் அணிந்துதான் பங்கேற்றார்கள். மஞ்சள் நதிக்கு அருகே ரேஸ் தொடங்கியது. போட்டி தொடங்கிய சிலமணி நேரங்கிலேயே பலமாக காற்றடிக்கத் தொடங்கி, லேசாக மழையும் ஆரம்பித்தது. போகப்போக தட்பவெட்பநிலை குறைந்து, மழை ஆலங்கட்டி மழையாக மாறியது. குளிர் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரிக்க, ஒரு சில வீரர்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.

இந்தப் பந்தயத்தில் ஒரு பகுதி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரமாக இருக்கும் மலை ஏறவேண்டும். களைத்துப்போயிருந்த வீரர்களால் குளிரைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை. பாதுகாப்பான இடத்துக்குப் போகவோ, உதவி பெறவோ முடியவில்லை. ஒருசில போட்டியாளர்கள் உதவி வேண்டுமென்று வீ சேட் குருப்பில் பதிவிட்டனர். போட்டி நிறுத்தப்பட்டு மீட்புப் பணி தொடங்கியது. 1200 பேர் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட, இறுதியாக இந்த ரேஸில் பங்கேற்ற 21 வீரர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. எட்டு பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரேஸில் பங்கேற்ற ஒரு போட்டியாளரான மாவோ சூசி 14 மைல்கள் கடந்த பிறகு போட்டியிலிருந்து வெளியேறினார். காற்று அதிகரித்து மழை பொழியத் தொடங்கியதால், மலை ஏறுவது கடினம் என்று கருதி அவர் அந்த முடிவெடுத்தார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு அவர் கொடுத்த பேட்டியில், “வானிலை அறிக்கையில் காற்றடிக்கும், மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது லேசானதாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தோம். நான் போட்டியை முடித்துக்கொண்டதும் கொஞ்சம் யோசித்தேன். மழை சீக்கிரம் விட்டிருக்கும், பந்தயத்தை தொடர்ந்திருக்கலாமோ என்று நினைத்தேன். ஆனால், என் வீட்டு ஜன்னல் வழியாக மழையையும் காற்றையும் பார்த்தபோது, சரியான முடிவெடுத்திருப்பதாக ஆசுவாசப்பட்டுக்கொண்டேன்” என்றார்.

இந்த சோக சம்பவம், சீன மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியை நடத்திய அமைப்பார்களை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த கடுமையான காற்றையும் மழையையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், சனி, ஞாயிறு இரு தினங்களிலும் காற்றுக்கும் மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கையில் வெள்ளிக்கிழமையே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குரிய ஏற்பாடுகளை நிர்வாகம் சரியாகச் செய்திருக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், கொடுக்கப்பட்ட வெப்ப போர்வை (thermal blanket) கிழிந்துவிட்டது என்று இன்னொரு போட்டியாளர் பதிவிட்டிருந்தார். ஆக, சரியான திட்டமிடல் இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது.

“குறுகிய நேரத்தில் பலமான காற்று அடிக்கத் தொடங்கியது. ஆலங்கட்டி மழையும் தொடர்ந்து பெய்தது. பலர் குளிரால் மயங்கிவிட்டனர். இந்தப் போட்டியை நடத்தியவர்கள் என்ற முறையில் நாங்கள் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்கிறார் பையின் நகர மேயர் ஜாங் சூசென்.

இதற்கு முன் இந்தப் பந்தயத்தை 3 முறை வென்ற அல்ட்ரா மாரத்தான் ஜாம்பவான் லியான் ஜிங் (31 வயது) இந்த ரேஸில் இறந்துவிட்டார்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *