Share on Social Media


மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: பிற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும், 3,000 ரூபாய்க்கு மேல் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறோம்.

தமிழகத்திலும், 3,000 ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டும் என அதிரடியாக கேட்டால், ஸ்டாலின் கோபித்துக் கொள்வார் என்பதால், இவ்வளவு பவ்யமா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு: அ.தி.மு.க., மீது களங்கம் கற்பிக்க, தி.மு.க., அரசு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதை தகர்த்து, வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மரண அடி கொடுப்போம்.

வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தங்களின் பலத்தை முழுமையாக காண்பித்து, அ.தி.மு.க.,வை சுருட்டி விட வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் செயல்திட்டம். அ.தி.மு.க., எப்படி தப்பிக்கப் போகிறது என்பது அப்போது தெரிந்து விடும்!


ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அறிக்கை:
தை புத்தாண்டு- தினம் என்பது, திட்டமிட்ட சதி. -திராவிட இயக்கங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும்; அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளவுமான முயற்சி. சித்திரை முதல் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்ற கொள்கையில் மாற மாட்டோம்.

தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக எப்படியும் அறிவித்து விடும், தி.மு.க., அரசு. ஆனால், அந்த கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள், சித்திரை முதல் நாளில் ரகசியமாக கொண்டாடி விடுவர்!

மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: சென்னையில் குடிசைகளில் வாழ்ந்த, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோரை அப்புறப்படுத்தி, தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் எட்டு மாடி குடியிருப்புகளில் குடியமர்த்திஉள்ளது, முந்தைய, அ.தி.மு.க., அரசு. அங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் துன்பப்படுகின்றனர்.

அங்கு குடியிருப்பவர்களே முயற்சி மேற்கொண்டால், உடனடியாக தீர்வாகி விடும். கம்யூ.,க்கள் தலையிட்டால் அந்த விவகாரம் இழுத்தடிக்குமே!

தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேச்சு: ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., முதற்கட்ட தேர்வுகள் மற்றும் இதர மத்திய அரசுப்பணி தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதால் ஹிந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்பு பெற முடிவதில்லை. எனவே, 22 மொழிகளிலும் இந்த போட்டி தேர்வுகளை நடத்த வேண்டும்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான பின், ஹிந்தி பேசும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டால் என்ன செய்வர் என யோசித்தீர்களா?

சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தமிழக தலைவர் ஏ.சவுந்திரராஜன் அறிக்கை: பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு உதவி செய்து சிறிய ஆலைகளை, பாரம்பரிய தொழில்களை ஒழித்துக்கட்டும் அழிவு சக்தி தான், பா.ஜ., அரசு. அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் சிறுதொழில்களை அழிப்பது தேசவிரோதம்.

இப்படியே, சில ஆண்டுகளுக்கு முன் வரை, காங்கிரசை கூறி வந்தீர்கள். இப்போது, பா.ஜ.,வை சாடுகிறீர்கள். காலப்போக்கில் அனைத்து ஆளும் கட்சியினரையும் வசைபாடுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை!

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை: மழை வெள்ளம் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, நீர் நிலையை ஆக்ரமித்துள்ளவர்களுக்கு, மின்சாரம், குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் குடும்ப அட்டைகளை, அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஒவ்வொரு முறை மழை, வௌ்ள பிரச்னையின் போதும், இப்படித் தான் பலரும் கூறுகின்றனர். அதிரடி நடவடிக்கை எடுத்தால், அரசியல் காரணங்களுக்காக ஆதரவு அளிக்கின்றனர்.

த.மா.கா., தலைவர் ஜி.கேவாசன் அறிக்கை: பொங்கலை ஒட்டி, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு, 20 பொருட்களுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த கரும்பை, மொத்தமாக விவசாயிகளிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்தால், ஓரளவுக்கு விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வரே!

பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்று!

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி: பா.ம.க.,விலிருந்து சாரை சாரையாக, தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு வன்னியரும், ஸ்டாலினை தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்.

அடேங்கப்பா… அனைவரும், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டால், பா.ம.க., மற்றும் பிற கட்சிகள் தள்ளாடத் துவங்கி விடுமே… அந்த கட்சிகள் என்ன செய்யப் போகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறதே!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: அ.தி.மு.க., கொடியை சசிகலா பயன்படுத்துவது தொடர்பாக வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம். யாரோ சிலர் கட்சி கொடியை பயன்படுத்துகிறார், பொதுச் செயலர் பெயரை பயன்படுத்துகிறார் என்றால் அவர்கள் தலைவராகி விட முடியாது.

யாரோ ஒருவர் என்கிறீர்கள்; சகுனி என்கிறீர்கள்; சாத்தான் என்கிறீர்கள்… பழைய நிகழ்வுகளையும், அந்த ‘யாரோ’ காலில் கட்சியினர் சிலர் விழுந்ததையும், தமிழக மக்கள் மறக்கவில்லை, ‘ஜென்டில்மேன்!’Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *