Share on Social Media


தமிழக வரலாற்றோடும் ஆன்மிக வரலாற்றோடும் நெருங்கிய தொடர்புடைய நகரம் மதுரை. சைவமும் வைணவமும் தழைத்து ஓங்கி நிற்கும் இடம். இங்குள்ள பழைமையான ஆலயங்கள் அவற்றுக்கான சான்றுகள். மக்கள் பண்பாட்டில் இவை ஒரு சரம்போலத் தொடுக்கப்பட்டு கலாசார மாலையாக இம்மாநிலத்தை அழகுபடுத்துபவை. அதன் முக்கியக் கண்ணிதான் சித்திரைத் திருவிழா. அத்தகைய சித்திரைத் திருவிழாவில் பெரும் கவனம் பெறும் ஆலயங்களில் ஒன்று தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில்.

மதுரையின் பிரதானப் பகுதியான தல்லாகுளத்தில் இருக்கும் ஆலயம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில். 17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஆலயம் உருவான வரலாறு பலவாறு சொல்லப்படுகிறது.

தல்லாகுளம் வேங்கடாசலபதி பெருமாள்

திருமலை நாயக்கர் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் மீது பக்தி கொண்டவர். திருப்பதியிலிருந்து மதுரைவரை மணி மண்டபங்களைக் கட்டினார் திருமலை மன்னர். தினமும் திருப்பதியில் பூஜை தொடங்கியதும் அங்கு அடிக்கப்படும் மணி ஓசையைக் கேட்டு வரிசையான மண்டபங்களின் ஒலி தொடர்ந்து ஒலித்துக் கடைசியாக மதுரை மன்னர் அரண்மனைக்கு அருகில் இருக்கும் மணி மண்டபத்தில் ஒலி ஒலிக்கும். அதைக் கேட்டதும் திருமலை மன்னன் வேங்கடவனை வணங்கிப் பின் உணவு உட்கொள்வது வழக்கம் என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.

சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் மணி ஓசை கேட்கும் ஏற்பாட்டைச் செய்திருந்தார் என்றும் சிலர் அழகர் கோயில் மணி ஓசை கேட்டபின்பே பெருமாளை வணங்கி உணவு உட்கொள்வார் என்றும் சொல்கிறார்கள். எப்படியானாலும் திருமலை மன்னர் பெருமாள்மீது பக்தி கொண்டவர் என்பதில் ஐயமில்லை.

ஒருநாள் உரிய நேரத்தில் மணி ஓசை கேட்காததால் தன் குதிரையை எடுத்துக்கொண்டு பெருமாள் மணி மண்டபத்தை நோக்கிப் புறப்பட்டார். சிறிது தூரம் சென்றதும் குதிரை நகர மறுத்தது. மிரண்டு திமிறியது. மன்னன் அந்த இடத்தை ஆராய்ந்த போது அங்கு ஓர் அனுமன் சிலை காணக்கிடைத்தது. அனுமனை வணங்கி நின்றபோது அங்கே திருப்பதி பெருமாள் அவருக்குக் காட்சி கொடுத்தார்.

இனி தன் தரிசனத்துக்காகத் தவிக்க வேண்டாம் என்று சொல்லி இங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பினால் அதில் பிரசன்னமாகி அருள்பாலிப்பேன் என்று சொல்லி மறைந்தார் பெருமாள். இதைக் கேட்ட மன்னன் உடனடியாக அங்கே ஒரு பெருமாள் கோயிலை நிர்மாணிக்க உத்தரவிட்டார். அருகிலேயே சுயம்பு ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார் என்கிறது தலவரலாறு.

WhatsApp Image 2021 06 10 at 18 01 20 Tamil News Spot
தல்லாகுளம் வைகுண்ட ஏகாதசி உற்சவம்

கலை நயம் மிக்க இந்தத் திருக்கோயிலில் அருளும் மூலவர் திருநாமம், ‘பிரசன்ன வேங்கடாசலபதி’ என்பதாகும். துவாரபாலகர்களாக ஜயன் விஜயன் காட்சி கொடுக்க உள்ளே கருவறையில் வேங்கடாசலபதி நின்றகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார். நேராக நின்று தரிசனம் செய்தால் பெருமாள் மட்டுமே காட்சிகொடுப்பார். அருகில் சென்றால் ஸ்ரீதேவி பூதேவித் தாயாரையும் தரிசனம் செய்து மகிழலாம். உற்சவருக்கு, ஸ்ரீநிவாசன் என்று பெயர். இங்குள்ள கிணற்று நீரே இக்கோயிலின் தீர்த்தமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் நாயக்கர் காலச் சிற்பங்களும் ஓவியங்களும் கண்ணுக்கு விருந்தாவதோடு கலைப்பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன.

இங்கு கருவறையின் அருகிலேயே சுயம்பு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் உக்கிர ஆஞ்சநேயர் என்கிறார்கள். ஒரே கல்லில் உருவான மூர்த்தி இவர். வாலில் மணியும் கையில் தாமரை மலரும் ஏந்தியும் மற்றொரு கரத்தில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறார் ஆஞ்சநேயர். இந்த அனுமன் உக்கிர மூர்த்தியாக அருள்வதால் இவரின் உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் எதிரே சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தலத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா, ஆனிப்பூரம், புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவம் உள்ளிட்டவை மிகவும் விசேஷமாக நடைபெறும். சித்ரா பௌர்ணமியை ஒட்டி அழகர்கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்படும் அழகர், பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் எழுந்தருள்வார்.

இங்குதான் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியிலிருந்து வரும் மாலை அணிவிக்கப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆராதனைகளை ஏற்கும் அழகர் தங்கக் குதிரை வாகனத்தில் மறுநாள் காலையில் வைகை ஆற்றில் இறங்குவார். புரட்டாசி பிரம்மோற்சவமும் இந்த ஆலயத்தில் விசேஷமாக நடைபெறும். இங்கு பக்தர்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து வழிபாடுகள் செய்வார்கள்.

WhatsApp Image 2021 06 10 at 18 01 18 Tamil News Spot
தல்லாகுளம் வேங்கடாசலபதி

பிரசன்ன வேங்கடாசலபதிப் பெருமாளை வணங்கினால் திருப்பதி சென்று வணங்கிய பலன் கிடைக்கும். திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாதவர்கள் இங்கு தங்கள் வேண்டுதல்களைச் செலுத்தலாம். இங்குள்ள பெருமாளை வேண்டிக்கொண்டால் கல்வி கேள்விகளில் வெற்றிகிடைக்கும் என்றும் திருமணத்தடைகள் நீங்கும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடைபெறும் விஸ்வரூபதரிசனத்தையும் கோபூஜையையும் தரிசனம் செய்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு மூலவருக்குப் புஷ்ப அங்கி சாத்தி வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் நீங்குவதோடு குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலைகளை சாற்றி வணங்குகின்றனர். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்கு நன்றி சொல்லும்விதமாக இங்குவந்து நெல், சோளம், கம்புபோன்ற விளைபொருள்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இங்கு சக்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டால் வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *