அமேதி: ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் அமேதியில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 2004 ல் அரசியலுக்கு வந்தேன். எனது முதல் தேர்தலில் அமேதியில் தான் போட்டியிட்டேன். அரசியல் குறித்து அமேதி மக்கள் பாடம் நடத்தினர். அரசியலுக்கான பாதையை இம்மக்கள் தான் காட்டினர். இங்குள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

விவசாய சட்டங்களை கொண்டு வந்த பிரதமர், இதனால், விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தெரிவித்தார். ஆனால், சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று பட்டு போராடியதால், பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய போது, எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை எனக்கூறியுள்ளார்.

இன்றைய சூழ்நிலை குறித்து உங்களுக்கு நன்கு தெரியும். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இது குறித்த கேள்விகளுக்கு பிரதமரும், முதல்வரும் பதிலளிக்க மாட்டார்கள். சில நாட்களுக்கு முன்னர் கங்கையில் புனித நீராடிய பிரதமர், வேலைவாய்ப்பின்மை குறித்து பேசவில்லை. பிரதமர் எடுத்த சில முடிவுகளால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ரூபாய் நோட்டு வாபஸ், தவறான முறையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கோவிட் காலத்தில் மத்திய அரசின் உதவி இல்லாத காரணத்தினால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இவ்வாறு ராகுல் பேசினார்.
Advertisement