பால்கனியில் மகிழ்ச்சிபொங்க நின்று ஜெ.தீபாவும் அவர் கணவரும் போட்டோவுக்கு போஸ்கொடுத்த அடுத்த சில தினங்களிலேயே, ‘வேதா நிலையத்தை, நினைவில்லமாக அறிவிக்கக்கோரி’ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அ.தி.மு.க வட்டாரம்!
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெ. வாழ்ந்த வேதா நிலையத்தை ‘நினைவில்லமாக’ மாற்றி அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவர் சகோதரர் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘எங்கள் பாட்டி சந்தியா பெயரில் வாங்கப்பட்ட வேதா நிலையம் குடும்ப வாரிசு உரிமை அடிப்படையில், எங்களையேச் சேரும். ஆனால், தமிழக அரசு, எங்களை கலந்தாலோசிக்காமலேயே வேதா நிலையத்தை ‘நினைவில்லமாக’ அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பைத் தடை செய்து, எங்கள் குடும்பச் சொத்தை எங்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.

இதற்கிடையே, வேதா நிலையத்தை, ‘நினைவில்லமாக’ மாற்றியமைத்து, அறிவிப்புப் பலகையும் அமைத்தது அன்றைய தமிழக அரசு. இதன் பின்னணியில், ‘ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, சிறைத் தண்டனை முடிந்து தமிழகம் திரும்பினால், வேதா நிலையத்தைக் கைப்பற்றி தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்வார். அது அ.தி.மு.க தலைமைப் பொறுப்பிலிருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு பலத்த அரசியல் போட்டியை உருவாக்கிவிடும். எனவே, வேதா நிலையத்தை, பொதுமக்களின் பார்வைக்காக நினைவில்லமாக உருமாற்றி பாதுகாத்திட முனைகிறது அ.தி.மு.க அரசு’ என்றொரு பேச்சு, அன்றைய அரசியல் அரங்கில் அனலடித்துக்கொண்டிருந்தது.
சசிகலா விடுதலை, 2021 சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களாகிவிட, அ.தி.மு.க-வைக் கைப்பற்றும் முனைப்பில் சசிகலாவும் ஆர்வம் காட்டிவந்தார். இந்த நிலையில்தான், நினைவில்லம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுற்று, ‘வேதா இல்லம் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசுகளுக்கே சொந்தம். இதை நினைவில்லமாக மாற்றி அரசு அறிவித்தது செல்லாது’ என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.