Share on Social Media

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலில் நியூசிலாந்து ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, இந்திய பேட்டிங் விரைவாக சரிந்நது. நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்  நடக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (44), ரகானே (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ரகானே ஆறுதல்: மூன்றாம் நாள் ஆட்டம், மைதான ஈரப்பதம் காரணமாக அரைமணி நேரம் தாமதமாக ஆட்டம் துவங்கியது. ஆடுகளம் ‘வேகத்துக்கு’ சாதகமாக இருந்தது.  கைல் ஜேமிசன் பந்தில் கேப்டன்  கோஹ்லி (44), அவுட்டானார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட், சந்தித்த முதல் 19 பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ஒரே ஒரு பவுண்டரி அடித்த ரிஷாப் (4) ஜேமிசன் ‘வேகத்தில்’ வெளியேறினார். பொறுப்பாக ஆடிய  ரகானே,  கிராண்ட்ஹோம் வீசிய 78வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இவர், 49 ரன் எடுத்த போது வாக்னர் பந்தில் அவுட்டானார்.

 

ஜேமிசன் அசத்தல்: பவுல்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அஷ்வின், சவுத்தீ ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இவர், 22 ரன் எடுத்திருந்த போது சவுத்தீ ‘வேகத்தில்’ வெளியேறினார். ஜேமிசன் வீசிய 92வது ஓவரில் இஷாந்த் சர்மா (4), ஜஸ்பிரித் பும்ரா (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்த பந்தை முகமது ஷமி, பவுண்டரிக்கு அனுப்ப, ஜேமிசனின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. நிதானமாக ஆடிய ரவிந்திர ஜடேஜா (15), பவுல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

நியூசிலாந்து சார்பில் ஜேமிசன் 5, பவுல்ட், வாக்னர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

கான்வே அரைசதம்: பின், முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம், கான்வே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த நிலையில் அஷ்வின் ‘சுழலில்’ லதாம் (30) சிக்கினார். பொறுப்பாக ஆடிய கான்வே (54) அரைசதம் கடந்தார்.

ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்து, 116 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் வில்லியம்சன் (12), ராஸ் டெய்லர் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின், இஷாந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

 

சிறந்த பந்துவீச்சு

நியூசிலாந்தின் ஜேமிசன், 31 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். கடந்த ஆண்டு கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் 45 ரன் வழங்கி, 5 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

 

44 விக்கெட்

ஜேமிசன், இதுவரை 8 டெஸ்டில் 44 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் முதல் 8 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து பவுலரானார். அடுத்த இரு இடத்தில் ஜாக் கோவி (41 விக்கெட்), ஷேன் பாண்ட் (38) உள்ளனர்.

* தவிர, முதல் 8 டெஸ்டில், 5 முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த முதல் நியூசிலாந்து பவுலரானார்.

 

வாசிம் ஜாபர் பதிலடி

உலக டெஸ்ட் பைனலின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ‘டுவிட்டரில்’  வெளியிட்ட செய்தியில், ‘‘இந்திய அணி, வானிலையால் காப்பாற்றப்பட்டதை பார்க்கிறேன்,’’ என, தெரிவித்திருந்தார். இதற்கு,  இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார் கடந்த 2001ல் இந்தியில் வெளியான ‘லகான்’ படத்தின் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதில், ‘ஹீரோ’ ஆமிர் கான் உள்ளிட்டோர் ஏதோ ஒன்றை வியப்புடன் பார்ப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, ‘‘மற்ற அணிகள் உலக டெஸ்ட் பைனலை பார்க்கின்றன,’’ என, தெரிவித்திருந்தார். சொந்த மண்ணில் நடக்கும் உலக டெஸ்ட் பைனலுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெறாததை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *